போலி நகைகளுக்கு ரூ. 20 கோடி :சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

போலி நகைகளுக்கு ரூ. 20 கோடி :சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை:போலி நகைகளை அடமானம் வைத்து, 20 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், சொத்துக்களை பறிமுதல் செய்ய, வங்கி அதிகாரிகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மோசடி வழக்கில், இருவருக்கு வழங்கிய ஜாமினும், ரத்து செய்யப்பட்டது.சென்னை, அண்ணாநகர் மேற்கு விரிவாக்கத்தில், கர்நாடகா வங்கி உள்ளது. நகைகள் அடமானம் வைத்து, கடன் பெற்ற கணக்குகளை, 'விஜிலன்ஸ்' துறை ஆய்வு செய்தது.இதில், 325 கணக்குகளில், போலி நகைகளை வைத்து, கடன் பெற்றிருப்பது தெரிய வந்தது. 180 போலி பெயர்களில், 20.55 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது.மோசடி தொடர்பாக, ஸ்ரீராம், பத்மநாபன் ஆகியோருக்கு எதிராக, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவர்களுக்கு, உடந்தையாக இருந்ததாக, வங்கியின் முன்னாள் மேலாளர் மற்றும் நகை மதிப்பீட்டாளர் மீதும், வழக்கு பதியப்பட்டது.
மோசடியாக வந்த பணத்தை, சென்னை, செங்குன்றத்தில் உள்ள, 'ஸ்ரீ லட்சுமி தங்க மாளிகை' கடையில், ஸ்ரீராம் முதலீடு செய்துள்ளார். 'ஸ்ரீ லட்சுமி புரமோட்டர்ஸ்' என்ற பெயரில், ரியல் எஸ்டேட் வர்த்தகத்திலும் ஈடுபட்டுள்ளார்.வங்கி தரப்பில் புகார் அளித்ததை தொடர்ந்து, ஸ்ரீராம், பத்மநாபன் கைது செய்யப்பட்டனர்; இருவருக்கும், பலமுறை ஜாமின் மறுக்கப்பட்டது.பணத்தை செலுத்தி விடுவதாக உத்தரவாதம் அளித்ததால், சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம், ௨௦௧௭ அக்டோபரில், ஜாமின் வழங்கியது.
பல மாதங்கள் ஆகியும், பணத்தை செலுத்த முன்வராததால், இருவரது ஜாமினையும் ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில், கர்நாடகா வங்கியின் மூத்த மேலாளர் மூர்த்தி, மனு தாக்கல் செய்தார்.மனுவை, நீதிபதி, எம்.தண்டபாணி விசாரித்தார். வங்கி தரப்பில், வழக்கறிஞர் செங்கோட்டுவேல், மத்திய குற்றப்பிரிவு சார்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அய்யப்பராஜ் ஆஜராகினர்.
நீதிபதி தண்டபாணி பிறப்பித்த உத்தரவு:வங்கியில் முதலீடு செய்யும் பொது மக்களின் பணத்தை வைத்து, இருவருக்கும்,20.55 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.அசல் தங்க நகைகள் அல்லது சொத்துக்கள், வங்கி வசம் அடமானமாக இருந்தால், அதை வைத்து, கடன் தொகையை வசூலிக்க முடியும். ஆனால், போலி நகைகளை வைத்து, வங்கி அதிகாரிகளின் துணையுடன், கோடிக்கணக்கில் கடன் பெற்றுள்ளனர்.
சமீப காலங்களில், இதுபோன்ற வங்கி மோசடிகள் அதிகரித்து வருகின்றன. ஜாமினை ரத்து செய்வதால் மட்டும், பிரச்னை தீர்ந்து விடாது. கடனை வசூலிக்க, தகுந்த நடவடிக்கைகளை வங்கியும், போலீசும் எடுக்க வேண்டும். மோசடி செய்து பெற்ற பணத்தை, பல்வேறு வழிகளில், 'டிபாசிட்' செய்திருப்பதால், அந்த சொத்துக்களை அனுபவிப்பதை தடுக்க வேண்டும்.
எனவே, பணத்தை வசூலிக்க, சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை, வங்கி அதிகாரிகள் எடுக்க வேண்டும். அவர்களுக்கு, போதிய போலீஸ் பாதுகாப்பை, துணை ஆணையர் வழங்க வேண்டும். இருவருக்கும் வழங்கப்பட்ட ஜாமின், ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தர விட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X