ஐந்து மாநில தேர்தல் திருவிழா| Dinamalar

ஐந்து மாநில தேர்தல் திருவிழா

Added : அக் 14, 2018
Advertisement

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு, அம்மாநிலங்களில், கட்சிகள் தீவிர பிரசாரத்தில் உள்ளன; ஒவ்வொரு நாளும், புது புது யுக்திகளை கையாண்டு வருகின்றன. இந்த மாநிலங்களில் நடக்கும்
பிரசாரம் குறித்த ஒரு தொகுப்பு:
முதல்வர் வேட்பாளர் ரெடி!
முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான, ராஜஸ்தான், பா.ஜ., அரசு தேறுமா என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்கையில், மறுபுறம், காங்கிரஸ் தலைவர் ராகுல், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.கட்சித் தலைவரான பின், ஒரே நேரத்தில் அதிக மாநிலங்களில் சட்டசபை தேர்தலை அவர் சந்திக்கிறார். அவருடைய பிரசார வியூகங்கள், அவருடைய கடின உழைப்புடன், அவருக்குள்ள ஆளுமைத் திறனையும் வெளிப்படுத்தியுள்ளது.
பா.ஜ., அரசை விமர்சனம் செய்யும் அதே நேரத்தில், மாநிலத்தின் முன்னாள் முதல்வரான, காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட்டையும் அவர் விமர்சித்து வருகிறார்.'மக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களின் எதிர்பார்ப்புகளை, முந்தைய காங்கிரஸ் செவி கொடுத்து கேட்கவில்லை. இனி அது நடக்காது' என, ராகுல் பேசியுள்ளார்.
முதல்வர் வேட்பாளர் கனவில் இருந்த அசோக் கெலாட்டுக்கு, இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராகுலின் விருப்பமான, சச்சின் பைலட் தான் முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்பது
கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

இவர் யார் பக்கம்!
முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ள மத்திய பிரதேசத்தில் அரசியல் காற்று, மாறி மாறி வீசுகிறது. பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனித்து கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார். சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ் என, ஒவ்வொருவராக வரிசை கட்டி கூட்டணியில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
தற்போது அந்த வரிசையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சேர்ந்துள்ளார். கட்சியில் இருந்தபோதும், அதைவிட்டு வெளியேறிய பிறகும், காங்கிரஸ் கட்சிக்கு சிம்மசொப்பனாக இருந்து வருகிறார் பவார்.காங்கிரஸ் தலைமையிலான, எதிர்க்கட்சி கூட்டணியில் இருந்த அவர், திடீரென, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக பேசியுள்ளார். அதனால், அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலில், யாருக்கு ஆதரவு அளிப்பார் என்று குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளார்.இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில், 230 தொகுதிகளில், 200 தொகுதிகளில் தனித்து போட்டியிட உள்ளதாக, பவார் அறிவித்து உள்ளார்.
சுனாமியை ஏற்படுத்துமா!
முதல்வர் ரமண் சிங் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ள சத்தீஸ்கரில், பிரசாரம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. ஆட்சியை பிடிக்க வேண்டும் என, காங்கிரஸ் தீவிரமாக உள்ளது.
இதை கிண்டல் செய்யும் நோக்கில், 'பெண்களை இழிவுபடுத்தும் வகையில், போலி செக்ஸ் சிடி தயாரித்த காங்கிரஸ் மாநிலத் தலைவர், புபேஷ் பெஹலை, முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் கூறியுள்ளது. இந்த லட்சணத்தில், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற கனவில் ராகுல் உள்ளார்' என, அமித் ஷா பேசியுள்ளார்.
'அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு ஆதரவாக, மக்களின் ஆதரவு சுனாமி ஏற்படும் வகையில், சத்தீஸ்கரில் பிரசாரம் அமைய வேண்டும்' என, கட்சியினருக்கு, அவர் உத்தரவிட்டுள்ளார். சத்தீஸ்கரில், குட்டி சுனாமி ஏற்படுமா என்பது, தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.
ஆக் ஷன் ஆரம்பம்!
முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசு அமைந்துள்ள தெலுங்கானாவில், தேர்தல் ஆக் ஷன் துவங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளரான, முன்னாள் அதிரடி ஆக் ஷன் நடிகை, விஜயசாந்தி, முதல்வரை கிண்டல் செய்து, தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.
'நிலங்களை வளைத்து போடும், நிஜாம் கலாசாரத்தில் இருந்து விடுபட்டுவிட்டோம்; ஆனால், மீண்டும் அதிலேயே சிக்கியுள்ளோம்' என, சந்திரசேகர ராவை வறுத்து எடுத்து வருகிறார் விஜயசாந்தி. இந்த அனல் பறக்கும், அதிரடி ஆக் ஷன் காட்சிகளுக்கு, சந்திரசேகர ராவ் எப்படி பதிலளிப்பார் என்ற எதிர்பார்ப்பில் தெலுங்கானா மக்கள் உள்ளனர்.
புதுமனை புகும், பா.ஜ.,

வடகிழக்கு மாநிலமான, மிசோரமில், முதல்வர், லால் தன்ஹாவ்லா தலைமையிலான, காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களான, அசாம், திரிபுரா, மணிப்பூர், அருணாசல பிரதேசத்தில், பா.ஜ., ஆட்சியை பிடித்தது.
சிக்கிம், மேகாலயா மற்றும் நாகாலாந்தில், அதன் கூட்டணி அரசு அமைந்துள்ளது. இந்த நிலையில், மிசோரமிலும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில், பா.ஜ., தீவிரமாக உள்ளது.இதற்காக, முதல் கட்ட பிரசாரத்தை, 17ல் அமித் ஷா துவக்க உள்ளார். தலைநகர் அய்ஸ்வாலில், பா.ஜ.,வின் புதிய அலுவலகத்தை அவர் திறந்து வைத்து, பிரசாரத்தை துவக்க உள்ளார். புதுமனை
புகும் பா.ஜ., சட்டசபையை பிடிக்குமா?
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X