குடும்ப பிரச்னை போலீஸ் நிலையம், கோர்ட்டுக்கு வருவது வருத்தமளிக்கிறது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடும்ப பிரச்னை போலீஸ் நிலையம், கோர்ட்டுக்கு வருவது வருத்தமளிக்கிறது

Added : அக் 14, 2018
Advertisement
 குடும்ப பிரச்னை போலீஸ் நிலையம், கோர்ட்டுக்கு வருவது வருத்தமளிக்கிறது

கடலுார்:'குடும்ப பிரச்னையை காவல் நிலையத்திற்கும், கோர்ட்டுக்கும் எடுத்துச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது' என ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் பேசினார்.கடலுாரில் குடும்ப நல நீதிமன்றம் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் அன்புச்செல்வன், எஸ்.பி., சரவணன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட முதன்மை நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சம்பத் கலந்து கொண்டார்.விழாவில், தலைமை தாங்கி, குடும்ப நல நீதிமன்றத்தை திறந்து வைத்து, சென்னை ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் பேசியதாவது;குடும்ப நல நீதிமன்றங்கள் மாவட்டம் தோறும் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 28 நீதிமன்றங்கள் உள்ளன. தற்போது கடலுார் மாவட்டத்தில் 29 வது குடும்ப நல நீதிமன்றம் துவங்கப்பட்டுள்ளது.மனித குலம் உருவான காலத்தில் இருந்தே சட்டம், நீதி என்பதும் இருந்து வருகிறது. அப்போது இதைவிட சிறப்பாக நீதி பரிபாலனம் நடைபெற்றது என்பது வரலாற்று சான்றுகளில் அறியமுடிகிறது.குடும்ப நல நீதிமன்றமும் இதேபோல் தான். அன்று கூட்டு குடும்பம் இருந்தது. அந்த குடும்பத்தின் தலைவர் தான் குடும்ப நல நீதிபதியாக செயல்பட்டு வந்தார். அவர் குடும்பத்தில் எந்த பிரச்னையும் தீர்த்து வைப்பார். அவர் சொன்னதை குடும்பத்தினர் மறுப்பும் இல்லாமல் ஏற்றுக் கொண்டனர்.
இதனால் குடும்ப கட்டமைப்பு நன்றாக இருந்தது.குடும்ப தலைவர் அல்லது உறவினர் மூலம் தீர்க்க வேண்டிய பிரச்னையை இன்று நாம் காவல் நிலையத்திற்கும், நீதிமன்றத்திற்கும், எடுத்துச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது.ஆனால், மக்கள் சுயமரியாதையை காப்பற்றவும், தங்களது பிரச்னையை தீர்த்துக்கொள்ளவும் நீதிமன்றத்தை தைரியமாக அணுகும் முறை பாராட்டத்தக்கது.நீதிமன்றங்கள், வழக்குகள் அதிகரித்தாலும் அதைச் சார்ந்த நீதித்துறை, நிர்வாகத்துறை, காவல்துறை, சட்டத்துறை, சமுதாயத்தில் உள்ள அனைவரும் பாதிக்கப்படாமல் தீர்ப்பு வழங்க நாம் கடமை பட்டுள்ளோம்.குடும்ப பிரச்னை ஏற்படும் பொது மக்கள் முதலில் காவல் துறையைபோ, வழக்கறிஞரையோ அனுகுவதை தவிர்ப்பது நல்லது. நீதிபதியை தனியாக அணுகி உங்கள் பிரச்னையை சொல்லலாம். அவர், சம்பந்தப்பட்ட நபரை அழைத்துப்பேசி வழக்கு துவங்குவதற்கு முன்பே தீர்த்து வைக்க சட்டத்தில் இடம் உள்ளது.வழக்கறிஞர்கள், தம்மிடம் வரும் கட்சிகாரர்களுக்கு குடும்ப பிரச்னை என்றால் முதலில் நீதிபதியிடம் அனுப்பி விடுங்கள். நாம், முடிந்தவரை குடும்பம் எந்த விதத்திலும் சிதைந்துவிடாமல் ஒற்றுமையாக இருப்பதற்கு ஒத்துழைப்பைக் கொடுத்து, நீதிமன்றம் உருவாக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு நீதிபதி வேல்முருகன் பேசினார்.
விழாவில், நீதிபதிகள் லிங்கேஸ்வரன், இளவரசன், சண்முகசுந்தரம், தமிழரசி, பிரபாவதி, பரமேஸ்வரி, மாஜிஸ்திரேட்டுகள் கோபாலகண்ணன், அன்வர் சதாத், வழக்கறிஞர்கள் அசோசியேஷன் தலைவர் சிவராஜ், செயலர் வனராசு, பார் அசோசியேஷன் தலைவர் மாசிலாமணி, செயலர் சீத்தாரமான், வழக்கறிஞர்கள் சிவமணி, அருணாச்சலம், தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு இணைச் செயலர் பிரேம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மாவட்ட தலைமை குற்றவியல் தலைமை நீதிபதி ரவி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X