கொங்கு வெள்ளாளர் ஓட்டுகளை திசை திருப்ப கொ.மு.க., முயற்சி| Dinamalar

தமிழ்நாடு

கொங்கு வெள்ளாளர் ஓட்டுகளை திசை திருப்ப கொ.மு.க., முயற்சி

Added : மார் 27, 2011

கரூர்: அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் அளவு ஓட்டு எண்ணிக்கை கொண்ட கொங்கு வெள்ளாளர் சமுதாய ஓட்டுகளை, அ.தி.மு.க.,வுக்கு சென்றுவிடாமல் தடுக்கும் முயற்சியில் கொ.மு.க., ஈடுபட்டுள்ளது.
அரவக்குறிச்சி தொகுதியில், பள்ளப்பட்டியில் உள்ள 14 ஆயிரத்துக்கு மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களை நம்பியே கடந்த தேர்தல்களில், முஸ்லிம் வேட்பாளர் களமிறக்கப்படுவது வழக்கத்தில் இருந்தது. தற்போது தொகுதி சீரமைப்பில் கரூர் தொகுதியில் இருந்த தோட்டக்குறிச்சி, புஞ்சை புகளூர், வேட்டமங்கலம், கோம்புபாளையம் உள்ளிட்ட பஞ்சாயத்து பகுதிகள் அரவக்குறிச்சி தொகுதியுடன் சேர்ந்துள்ளது.
கொங்கு வெள்ளாளர் கவுண்டர்களின் ஓட்டு சதவீதம் இப்பகுதியில் அதிகம் உள்ளது. அ.தி.மு.க., வேட்பாளர் செந்தில்நாதன், கொங்கு வெள்ளாள கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் இப்பகுதி ஓட்டுகள் அவருக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இத்தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்ற கலிலுர் ரகுமான் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), ஆளுங்கட்சியில் இருந்தும் தொகுதியில் எதையும் சாதிக்கவில்லை. அரசு நிகழ்ச்சி தவிர எதிலும் காணமுடியாத எம்.எல்.ஏ., மீது உள்ள அதிருப்தி, தற்போது தி.மு.க.,வுக்கு பாதகமாக உள்ளது.
தி.மு.க., வேட்பாளர் பழனிசாமி மீது, கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமுதாயத்தில் தொடரும் அதிருப்தி அவரக்கு பாதகமாக உள்ளது. இந்த பாதிப்பு 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் வெ ளிப்பட்டது. தற்போது, இதை சமாளிக்க, தி.மு.க., கூட்டணியில் உள்ள கொங்கு முன்னேற்ற கழக நிர்வாகிகள் சம்மந்தப்பட்ட பகுதிகளில், சமுதாயத்தின் முக்கியஸ்தர்களை சந்தித்து அமைதி படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
கடந்த தேர்தல் வரை மாஜி எம்.பி., பழனிசாமியை வெ ளிப்படையாக விமர்சித்து, தங்கள் சமுதாயத்தினர் இடையே அவர் மீது வெறுப்பை வளர்த்த கொங்கு முன்னேற்ற கழக நிர்வாகிகள், தற்போது மாற்று கருத்துடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது எந்த அளவு சாத்தியமாகும் என்பது தேர்தலில் தெரியவரும்.
இப்பகுதியை சேர்ந்த கொங்கு வெள்ளாள கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த மாஜி எம்.எல்.ஏ., வடிவேல்(அ.தி.மு.க.,) தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் பிரச்சாரத்தில் ஒத்துழைக்காமல் அமைதி காக்கிறார். இந்நிலையில், கட்சியின் பொது செயலாளர் ஜெயலலிதா கரூரில் இன்று பிரச்சாரம் செய்வது, அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு கூடுதல் உத்வேகத்தை அளிக்கும் என்று கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X