திருநாவுக்கரசர் - இளங்கோவன் பகிரங்க மோதல்: தமிழக காங்கிரசில் முற்றுகிறது கோஷ்டி சண்டை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருநாவுக்கரசர் - இளங்கோவன் பகிரங்க மோதல்: தமிழக காங்கிரசில் முற்றுகிறது கோஷ்டி சண்டை

Added : நவ 11, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

தீபாவளி பண்டிகையை ஒட்டி, தனியார், 'டிவி' சேனலுக்கு, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் அளித்த பேட்டிக்கு, பதிலடி கொடுக்கும் வகையில், சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில தலைவர் திருநாவுக்கரசர் ஆவேசமாக பேசியுள்ளதால், இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
கடந்த, 2016ல், நடந்த சட்டசபை தேர்தலில், தமிழக காங்கிரஸ், எட்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. தோல்விக்கு பொறுப்பேற்று, தலைவர் பதவியில் இருந்து, இளங்கோவன் ராஜினாமா செய்தார். அவருக்கு பதில், மாநில தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டார். அதன்பின், மாவட்ட தலைவர்கள், அகில இந்திய உறுப்பினர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் நியமன விவகாரத்தில், இளங்கோவனுக்கும், திருநாவுக்கரசருக்கும் இடையே மோதல் துவங்கியது.
இளங்கோவன் ஆதரவு, மாவட்ட தலைவர்கள் ரங்கபாஷ்யம், சிவராமன், குலாம் முகம்மது உட்பட, ஏழெட்டு பேரை மாற்றி விட்டு, தன் ஆதரவாளர்களை, அப்பதவிக்கு, திருநாவுக்கரசர் நியமித்தார். இதையடுத்து, இருவரும் அடிக்கடி வெளிப்படையாக, கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துக் கொள்வது வழக்கம்.
குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் உத்தரவின்படி, தமிழக காங்கிரஸ் செயல்பாடுகளை ஆய்வு செய்ய, சென்னை, சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த, மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத் முன்னிலையில், திருநாவுக்கரசர், இளங்கோவன் ஆதரவாளர்கள் மோதிக் கொண்டனர். இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.இதையடுத்து, இளங்கோவன் ஆதரவாளர்கள் செரீப் உட்பட, ஏழு பேரை, கட்சியில் இருந்து, திருநாவுக்கரசர் நீக்கினார்.
அதிருப்தி அடைந்த இளங்கோவன் ஆதரவாளர்கள், டில்லி சென்று, திருநாவுக்கரசர் மீது புகார் தெரிவித்தனர்.சமீபத்தில், சி.பி.ஐ., விவகாரம் தொடர்பாக, மத்திய அரசை கண்டித்து, சென்னை, சாஸ்திரி பவன் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, திருநாவுக்கரசர் தாமதமாக வந்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், திருநாவுக்கரசர் ஆதரவாளர்களும், எதிர்கோஷ்டியினரும் தனித்தனியாக பங்கேற்றதால், கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி, சமீபத்தில், 'டிவி' சேனலுக்கு, இளங்கோவன் அளித்த பேட்டி:கட்சி நிகழ்ச்சி, காலை, 10:00 மணி என்றால், 12:00 மணிக்கு தான், திருநாவுக்கரசர் வருகிறார். அவரது செயல்பாடு சரியில்லை. உண்மையான கட்சியினரை அரவணைக்க தெரிய வில்லை. இளைஞர் காங்கிரஸ் கொடி கூட, திருநாவுக்கரசரால் நியமிக்கப்பட்ட, மாவட்ட தலைவர்களுக்கு தெரியவில்லை.
பா.ஜ.,வில் இருந்து வந்தவர்களுக்கு, பதவி வழங்கி உள்ளார். சிறப்பாக செயல்பட்ட, மாவட்ட தலைவர்களை மாற்றி விட்டார். கட்சி தொண்டர்கள், திருநாவுக்கரசரை தலைவராக ஏற்க வில்லை. அவர் தலைவராக நீடித்தால், கட்சியை படுகுழியில் தள்ளிவிடுவார்.இவ்வாறு, இளங்கோவன் கூறினார்.
இளங்கோவனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று முன்தினம், சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், திருநாவுக்கரசர் பேசியதாவது:நான் தாமதமாக வந்தது பற்றி, தொண்டர்கள் பேசினால் பரவாயில்லை; ஆனால், கூட்டத்திற்கு வராதவர்கள் பேசக்கூடாது. மல்லாந்து படுத்து, எச்சிலை துப்ப வேண்டாம்; அது, உங்கள் மீது தான் வந்து விழும்.நான் வேறு கட்சியிலிருந்து, காங்கிரசுக்கு வந்துள்ளேன் என்பது, ராகுலுக்கு தெரியும். ஆனால், காங்கிரஸ் கட்சியில், மத்திய அமைச்சர், எம்.பி., - எம்.எல்.ஏ., பதவி வகித்தவர், சிவாஜி கட்சி, திவாரி கட்சிக்கு மாறியது ஏன்?
எங்க அப்பா, தாத்தா, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தான். ஆனால், உங்க அம்மா, அப்பா, வேறு கட்சிகளில் தான் இருந்தனர்.எனவே, என்னை விமர்சிக்க, உங்களுக்கு உரிமை கிடையாது. இவ்வாறு, அவர் பேசினார்.இளங்கோவனும், திருநாவுக்கரசரும் மாறி, மாறி தாக்கி பேசுவதால், அவர்கள் மத்தியில், கோஷ்டி சண்டை தீவிரம் அடைந்துள்ளது.
திருநாவுக்கரசரின் ஆவேச பேச்சுக்கு பதிலடி கொடுக்க, இளங்கோவன் ஆதரவாளர்கள் தயாராகி வருகின்றனர்.விரைவில், அவர்கள் சென்னையில் கூடி, திருநாவுக்கரசருக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
11-நவ-201816:06:34 IST Report Abuse
Bhaskaran இந்த சண்டை ஒருசண்டையா சட்டைக்கிழியனும் வேஷ்டி பறிக்கப்பட்டு வெளியே ஓடணும்
Rate this:
Share this comment
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
11-நவ-201802:58:15 IST Report Abuse
Baskar திரு அவருக்கு வேண்டியவர்களுக்கு பதவி வழங்குவதில் ஒன்றும் தவறில்லை. இளங்கோவன் அரசியலில் எடுபடவில்லை. குழப்பூவுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்தார். இப்போதும் இவருக்கு தலைவர்கிடைக்க போவதில்லை இவர்கள் அடித்து கொள்வதால் தி.மு.க.,வுக்கு கொண்டாட்டம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X