வாசன் பலம் என்ன? அரியலுாரில் தெரியுமாம்!| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வாசன் பலம் என்ன? அரியலுாரில் தெரியுமாம்!

Added : நவ 11, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

தமிழக காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பு இல்லை என்பதை பறைசாற்றும் வகையில், வரும், 25ல், அரியலுாரில், த.மா.கா.,வின், 5ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடத்த, அக்கட்சி தலைவர் வாசன் திட்டமிட்டுஉள்ளார்.
வாசன் தலைமையில், த.மா.கா., உதயமாகி, வரும், 25ல், ஐந்தாம் ஆண்டு துவங்குகிறது. அந்த விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், அரியலுாரில், பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப் பட்டு உள்ளது.


கவனம்



அதில், 30 ஆயிரம் பேர் வரை பங்கேற்க வேண்டும்' என, திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலுார், அரியலுார், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுக்கு, வாசன் உத்தரவிட்டுள்ளார்.
'வரும் லோக்சபா தேர்தலில், யாருடன் கூட்டணி என்பது, டிசம்பரில் நடைபெறும் பொதுக் குழுவில் முடிவெடுக்கப்படும்' என, ஏற்கனவே, வாசன் அறிவித்துள்ளார். ஆனால், திரைமறை வில், அவர் மட்டும் நேரடியாக, தி.மு.க.,வில் உள்ள முக்கிய தலைவர் ஒருவருடன் பேசி வருகிறார்.கடந்த சட்டசபை தேர்தலின் போது, கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து, சில தொழிலதிபர்கள் வாயிலாக, தி.மு.க., - அ.தி.மு.க.,விடம் பேச்சு நடத்தி, அதில், வாசன் ஏமாற்றப்பட்டார்.இந்த லோக்சபா தேர்தலில், வெற்றிக் கூட்டணியில் இடம்பெற வேண்டும்; யாரிடமும் ஏமாந்து விடக்கூடாது என்பதில், கவனமாக இருக்கிறார்.


அக்கறை



சட்டசபை தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்து, தோல்வி அடைந்ததும், வாசனை விட்டு, இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலர், அ.தி.மு.க.,வுக்கும், காங்கிரசுக்கும் போய் விட்டனர். தற்போது, பதவி அதிகாரம் இல்லாத நிலையில், வாசனுக்கு உறுதுணையாக இருக்கும், மாநில, மாவட்ட நிர்வாகிகள் அனைவரும், அவரது விசுவாசிகள் என்பதை நிரூபித்துள்ளனர்.எனவே, தன் விசுவாசிகளுக்கு, சட்டசபை, உள்ளாட்சி தேர்தலில், உரிய பிரதிநிதித்துவம் பெற்று தர வேண்டும் என்பதில், வாசன் அக்கறை செலுத்தி வருகிறார். திராவிட கட்சிகள் பாணியில், 70க்கும் மேற்பட்ட மாவட்ட தலைவர்களை, வாசன் நியமித்து உள்ளார்.


திட்டம்



ஒன்றிய, நகர, வட்டார அளவில் தலைவராக இருந்தவர்களை, மாவட்ட தலைவராக்கினார். ஆனால், அவர்கள், தங்கள் தகுதியை வளர்த்து கொள்ளாமல், இன்னமும், பழைய மாதிரியே செயல்படுகின்றனர்.அவர்களிடம் இருந்து, கட்சி பதவியை பறிக்க, வாசன் ஆலோசித்து வருகிறார்.ஆனால், தற்போது களையெடுப்பு பணிகள் மேற்கொண்டால், காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டம் பிடித்து விடுவர். எனவே, லோக்சபா தேர்தலில், த.மா.கா., வெற்றி பெற்றதும், வருவாய் மாவட்ட அடிப்படையில், மாவட்ட தலைவர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளார்.
எனவே, தமிழக காங்கிரஸ் கட்சியுடன், த.மா.கா.,வை இணைக்க போவதில்லை என்பதில், வாசன் உறுதியாக உள்ளார். அதை பறைசாற்ற,அரியலுார் கூட்டத்தில், பலத்தை காட்ட நினைக்கிறார். லோக்சபா தேர்தலில், தி.மு.க.,விடம் குறைந்தபட்சம், 2; அதிகபட்சமாக, 3 தொகுதிகள் பெற வேண்டும் என்பதற்காக, கட்சியின் பலத்தை காட்டும் வகையில், அரியலுார் பொதுக்கூட்டம் அமையும் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அமெரிக்க தேர்தலில் த.மா.கா., பிரதிநிதி



அமெரிக்க தேர்தலில் த.மா.கா., பிரதிநிதி!அமெரிக்க அதிபர் டிரம்ப் செயல்பாடுகள் குறித்தும், அந்நாட்டின் அரசியல் பற்றியும் அறிய, இந்தியாவில் இருந்து, சிபுசோரன் கட்சி, ஆம்ஆத்மி கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் என, இளம் அரசியல் தலைவர்கள், ஏழு பேர், அமெரிக்கா அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.ஏழு பேரில், த.மா.கா., இளைஞரணி தலைவர் யுவராஜாவும் இடம் பெற்றுள்ளார். 20 நாட்களாக, அமெரிக்காவில் தங்கியிருக்கும், யுவராஜா உட்பட, ஏழு பேரை, அமெரிக்காவில் நடந்த தேர்தலில், சிறப்பு பார்வையாளர்களாக பணியாற்ற அனுமதித்துள்ளனர்.
வாஷிங்டன், இன்டியானா, டென்வர், லிட்டில் மவுன்ட், சிகாகோ, சாண்டிகோ உள்ளிட்ட மாகாணங்களுக்கு, இளம் அரசியல் தலைவர்கள் அழைத்து செல்லப்பட்டு, அங்குள்ள கவர்னர்களை சந்திக்க வைத்துள்ளனர்.ஏற்கனவே, மறைந்த முன்னாள் பிரதமர்கள் இந்திரா, வாஜ்பாய், முன்னாள் முதல்வர்கள் பக்தவச்சலம், கருணாநிதி போன்றவர்கள் சென்றுள்ளனர் என்பது, குறிப்பிடத்தக்கது.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
11-நவ-201819:48:56 IST Report Abuse
Bhaskaran ஆகதனிக்கட்சியின் மொத்த நோக்கமே ரெண்டே ரெண்டு லோக்சபா சீட் நிக்கறதுதானா அதிலேயும் ஜெயிச்சா கட்சி இருக்கும் இல்லேன்னா கரைஞ்சுபோடும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X