மூளை பாதிப்புக்கு தசைநார் சிகிச்சை பயிற்சி | Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மூளை பாதிப்புக்கு தசைநார் சிகிச்சை பயிற்சி

Added : நவ 11, 2018
Advertisement

சென்னை:மூளை பாதிப்புக்கு, தசைநார் மற்றும் எலும்பு துாண்டுவித்தல் சிகிச்சை தொடர்பான படிப்பு மற்றும் பயிற்சி அளிப்பது குறித்து, இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய அரசு பதில் அளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் தாலுகாவைச் சேர்ந்த, திருமேனி என்பவர் தாக்கல் செய்திருந்த மனு:வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட, என் மகன், மல்லாந்து படுத்த நிலையில் உள்ளான். மூளை பாதிக்கப்பட்டு இருப்பதால், குணமடைய வாய்ப்பே இல்லை என, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, உணவு, மருந்து கொடுப்பதை நிறுத்துவதற்கு, அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.


கூடுதல் மனு தாக்கல்



மனு, நீதிபதிகள் கிருபாகரன், பாஸ்கரன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.சிறுவனின் பெற்றோருக்கு, மத்திய, மாநில அரசுகள் நிதி உதவி மற்றும் மருத்துவ உதவி வழங்க முடியுமா; இதுபோன்ற குழந்தைகள் விஷயத்தில், பெற்றோருக்கு ஆதரவு அளிக்கும் வகையில், அரசிடம் திட்டம் உள்ளதா என்பதை தெரிவிக்கும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
பெற்றோரின் விருப்பப்படி, சென்னையில் உள்ள, அனிருதா மருத்துவமனையில், சிறுவன் சேர்க்கப்பட்டு, டாக்டர் உமா மகேஸ்வரி சிகிச்சை அளித்து வருகிறார்.வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்துாஸ் அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தபோது, சிறுவனின் உடல் நிலையில் வியத்தகு முன்னேற்றம் இருப்பதாக, தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
திருச்சி மாவட்டத்தில் மட்டும், 14ஆயிரம் குழந்தைகளுக்கு, மூளை பாதிப்பு இருப்பதாக, வழக்கறிஞர் கவிதா ராமேஸ்வர், கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.ஆய்வு நடத்தினால், எத்தனை குழந்தைகளுக்கு சிகிச்சை தேவைப்படுகிறது என்ற, விபரம் தெரிய வரும் எனவும் கூறினார்.


ஸ்பான்சர்



மூளை பாதிப்புக்கு, தசைநார் மற்றும் எலும்பு துாண்டுவித்தல் சிகிச்சை அளிக்கலாம். இந்த சிகிச்சை முறைக்கு, உரிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இவ்வழக்கில், இந்திய மருத்துவ கவுன்சில் செயலர் சேர்க்கப்படுகிறார்.தசைநார் மற்றும் எலும்பு துாண்டுவித்தல் தொடர்பான பட்டய படிப்பு அல்லது சிறப்பு படிப்பு ஏதும் உள்ளதா; இந்த துறையில், எத்தனை நிபுணர்கள் உள்ளனர் என்பதற்கு, மருத்துவ கவுன்சில் பதில் அளிக்க வேண்டும்.
இதுகுறித்த படிப்பு இல்லை என்றால், இந்தப் படிப்பை துவங்க, மருத்துவ கவுன்சில் பரிசீலிக்க வேண்டும். நிபுணத்துவம் தேவை என்றால், வெளிநாடுகளில் இருந்து, நிபுணர்களை வரவழைத்து, நமது மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம். எனவே, மத்திய அரசு மற்றும் மருத்துவ கவுன்சில், அடுத்த விசாரணையின்போது, பதில் அளிக்க வேண்டும்.
மூளை பாதித்த குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் முன்னேற்றம் இருப்பதை, அனிருதா மருத்துவமனை நிரூபிக்கும்போது, அதன் சேவையை, மத்திய, மாநில அரசுகள் பயன் படுத்திக் கொள்ளலாம்.அதற்கு, 'ஸ்பான்சர்' வழங்கலாம்.அதனால், அதிக அளவில் குழந்தைகள் பயன் பெறுவர்.இந்த நீதிமன்றத்தின் பரிந்துரைகளுக்கு, மத்திய, மாநில அரசுகள், வரும், 29ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும். தவறினால், மத்திய, மாநில அரசின் சுகாதார துறை அதிகாரிகள் ஆஜராக வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X