5 மாநில தேர்தல் திருவிழா| Dinamalar

5 மாநில தேர்தல் திருவிழா

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இந்த நிலையில், அங்குள்ள கள நிலவரம் குறித்த, சிறப்பு தொகுப்பு:


வாரிசு தொல்லை!



ராஜஸ்தானில், முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான, பா.ஜ., அரசு மீண்டும்
அமைவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், முன்னாள் முதல்வர் பாபு லால் கவுரின் மருமகள், கட்சியின் பொதுச் செயலர் கைலாஷ் விஜய்வார்கியாவின் மகன் ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட,
பா.ஜ., வாய்ப்பு அளித்துள்ளது.
அதையடுத்து, 'தங்களுடைய வாரிசுகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்' என, முன்னாள், எம்.எல்.ஏ.,க்கள் உட்பட பலரும் கட்சிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். வெற்றி வாய்ப்பு
இல்லாததால், பல, எம்.எல்.ஏ.,க்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் நிலையில், இந்த புதிய நெருக்குதலால், பா.ஜ., தலைமை திணறுகிறது.


தேறுமா ஆளுங்கட்சி?



தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் தலைவர் சந்திரசேகர ராவ், காபந்து முதல்வராக செயல்படும் தெலுங்கானா, டிச. 7ல் தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த நிலையில், அங்கு இரண்டு
முக்கியமான நிகழ்வுகள் நடந்துள்ளன. 'சி - வோட்டர்ஸ்' அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதிக்கு, மொத்தமுள்ள, 119 தொகுதிகளில், 42
இடங்கள் மட்டுமே கிடைக்கும் என, கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ், தெலுங்குதேசம், தெலுங்கானா ஜன சமிதி, இந்திய கம்யூ., கூட்டணிக்கு, 64 இடங்கள் கிடைக்கும் என, கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, சத்தீஸ்கரில் நக்சலைட்களால், வேட்பாளர் ஒருவர் கொல்லப்பட்டதால், தெலுங்கானாவில், மொத்தமுள்ள, 32,574 ஓட்டுச் சாவடிகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை, ஆபத்து நிறைந்தவையாக, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.


லட்சுமி கடாட்சம்!



மனைவியை, குடும்பத்தின் லட்சுமி என்று அழைப்பர். அதற்கான காரணம், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ள, மத்திய பிரதேசத்தில் கிடைத்துள்ளது.சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முக்கிய தலைவர்களில், பாதிக்கும் மேற்பட்டோரைவிட, அவர்களுடைய மனைவியருக்கு அதிக சொத்து இருப்பதாக, வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, சிவ்ராஜ் சிங்கின் சொத்து மதிப்பு, 19.7 லட்சம் ரூபாய் தான். அதே நேரத்தில் அவருடைய மனைவி சாதனா சிங்கின் சொத்து மதிப்பு, 37 லட்சம் ரூபாய்.


கைநழுவும் மாநிலம்



வட கிழக்கு மாநிலங்களில், மிசோரமைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களையும், காங்கிரஸ் இழந்து விட்டது. இந்த நிலையில், முதல்வர் லால் தன்ஹாவ்லா தலைமையிலான மிசோரமையும், காங்கிரஸ் இழக்கும் என, கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
'சி - வோட்டர்ஸ்' அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில், மொத்தமுள்ள 40 தொகுதிகளில், காங்கிரசுக்கு, 12 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என, கூறப்பட்டுள்ளது. மிசோ தேசிய முன்னணி, 17 இடங்களிலும், ஜோரோம் மக்கள் இயக்கத்துக்கு, 9 இடங்களும் கிடைக்கும் என, கூறப்
பட்டுள்ளது. காங்கிரஸ் இல்லாத வட கிழக்கு மாநிலங்கள் என்ற, பா.ஜ.,வின் இலக்கு
எட்டப்பட்டுவிடும் என்றே, கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.


வாக்குறுதி மயம்!



முதல்வர் ரமண் சிங் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ள, சத்தீஸ்கரில் முதல்கட்டத் தேர்தல், நாளை நடக்க உள்ளது. இதற்கான பிரசாரம் ஓய்ந்த நிலையில், பா.ஜ., சார்பில், அதன் தேர்தல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மாநிலத்தில் திரைப்பட நகரம், 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள், பெண் தொழில் முனைவோருக்கு, 2 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் என, வாக்குறுதிகளால் நிறைந்துள்ளது தேர்தல் அறிக்கை.
காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், விவசாய கடன் தள்ளுபடி, சுவாமிநாதன் அறிக்கையின்படி, குறைந்தபட்ச ஆதார விலை, பூரண மதுவிலக்கு என, வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X