3,50,00,00,00,00,00,000: வெள்ளையர் ஆட்சியில் கொள்ளை போன தொகை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

3,50,00,00,00,00,00,000: வெள்ளையர் ஆட்சியில் கொள்ளை போன தொகை

Updated : டிச 03, 2018 | Added : டிச 02, 2018 | கருத்துகள் (216)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

வியாபாரம் செய்ய வந்த வெள்ளைக்காரன் மெல்ல மெல்ல நம்மை அடிமையாக்கி, 200 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்தான் என்ற வரலாறு எல்லாருக்கும் தெரியும். இந்தியாவின் இயற்கை செல்வங்களையும் நமது மக்களின் உழைப்பையும் இங்கிலாந்து அரசாங்கம் சுரண்டி கொழுத்தது என்பதும் தெரிந்த கதை.

விலை மதிப்பற்ற இந்திய கடவுள் சிலைகள், கலைச் சிற்பங்கள், அற்புத ஓவியங்கள், புராதனச் சின்னங்கள், கோகினுார் வைரம் முதலான அபூர்வ கற்கள், அணிகலன்கள், திப்பு சுல்தான் வாள் உள்ளிட்ட பெருமைக்குரிய வரலாற்று அடையாளங்கள் ஆங்கிலேயரின் அரசால் பட்டப்பகலில் இங்கிலாந்துக்கு கடத்தப்பட்டு மகாராணியின் அரண்மனையையும் கோடீஸ்வர பிரபுக்களின் அருங்காட்சியகங்களையும் அலங்கரிக்கின்றன என்ற செய்தியும் நாம் அறியாதது அல்ல.ஈஸ்ட் இண்டியா கம்பெனி என்ற பெயரில் நிறுவனம் மூலமாகவும், அதன் பிறகு அரசியல் அதிகாரத்தை அபகரித்து ஆட்சி என்ற பெயரிலும், அந்த இரு நுாற்றாண்டுகளில் இங்கிலாந்து இங்கிருந்து கொள்ளையடித்து கொண்டு சென்ற மொத்த தொகை எவ்வளவு இருக்கும் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா?

தெரிந்திருக்க வாய்ப்பில்லை.ஏனென்றால், முதல் முறையாக அப்படி ஒரு ஆராய்ச்சியில் இறங்கி ஆண்டுக்கணக்கில் தகவல்களை திரட்டி தொகுத்திருக்கும் ஒரே நபர் உத்சா பட்நாயக். பொருளாதார அறிஞரான உத்சாவுக்கு வரலாறு மீதும் ஆர்வம் அதிகம். அவருடைய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பை கொலம்பியா யுனிவர்சிடி வெளியிட்டிருக்கிறது.

மொத்தம் 45 ட்ரில்லியன் யு எஸ் டாலர் மதிப்புக்கு நிகரான தொகையை இந்தியாவில் இருந்து சுரண்டி எடுத்திருக்கிறது இங்கிலாந்து அரசும் அதன் முன்னோடியான ஈஸ்ட் இண்டியா கம்பெனியும் என்று கணக்கு சொல்கிறார் உத்சா. ஒரு ட்ரில்லியன் என்பது பிரிட்டிஷ் அளவீடுகளின்படி 100 கோடி. இந்திய ரூபாய்க்கு மாற்றினால் 35 கோடி கோடி வரும். அதாவது, 35க்கு பின்னால் 14 சைபர் போட வேண்டும். ஒப்பீடு வழியில் பார்த்தால்தான் இதன் மதிப்பு விளங்கும். பிரிட்டனின் நடப்பு ஆண்டு ஜி.டி.பி., எனப்படும் ஒட்டுமொத்த உற்பத்தியே 3 ட்ரில்லியன் டாலருக்கும் குறைவுதான் என்றால் சுரண்டலின் மதிப்பை பாருங்கள்.சரி, என்றைக்கோ நடந்த கதை; அதற்கென்ன இப்போது என்று சலிப்பு தட்டினால் வரலாறு மீதும், அது கற்றுத் தருகின்ற பாடங்கள் மீதும் நம்பிக்கை இல்லை என்று அர்த்தம்.

மேற்படி தொகையில் ஒரு சிறிய பங்கை இந்தியாவில் அல்லது இந்தியாவுக்காக செலவு செய்திருந்தால் போதும்; இன்று உலகின் நம்பர் 1 நாடாக செல்வத்திலும் தொழில்நுட்பத்திலும் கொழித்திருக்கும் இந்தியா.உலகிலேயே மிகவும் பணக்கார நாடாக இருந்திருப்போம் என்பதைக்கூட ஒரு ஏக்கப் பெருமூச்சோடு ஒதுக்கி வைப்போம். இன்றைக்கு உலகின் மிகப்பெரிய வல்லரசுகளாக செல்வத்திலும் ஆயுத பலத்திலும் சிறந்து விளங்கும் நாடுகள் அனைத்தும் அந்த வளர்ச்சிக்காக, முன்னேற்றத்துக்காக நமது நாட்டுக்கு கடன்பட்டிருக்கின்றன என்று சொன்னால் நம்புவீர்களா? நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை.

அமெரிக்காவும், ஐரோப்பாவும், ஏன்... ரஷ்யாவும்கூட இந்தியர்களை சுரண்டியதால் இங்கிலாந்துக்கு கிடைத்த அபரிமிதமான செல்வத்தின் அடிப்படையில்தான் தங்கள் வளர்ச்சியை கட்டமைக்க முடிந்தது என்பது இதுவரை எங்கும் எவராலும் சொல்லப்படாத வரலாற்று உண்மை.எப்படி என்பதை உத்சா விவரிக்கிறார், கேளுங்கள்.

இந்தியாவில் இயற்கை வளங்கள் அதிகமாக இருந்தன. விவசாயத்தில் மட்டுமின்றி கைவினை பொருள் தயாரிப்பிலும், தொழில் உற்பத்தியிலும், வியாபாரத்திலும் இந்தியர்கள் திறமைசாலிகளாக இருந்தார்கள். அதனால்தான் இந்தியாவுடன் நெருக்கமாக வர்த்தக உறவு ஏற்படுத்திக் கொள்ள பல நாடுகள் விரும்பின. இங்கிலாந்து அதில் முதன்மை இடத்தில் இருந்தது. ஈஸ்ட் இண்டியா கம்பெனியை தொடங்கியது ஆங்கிலேயர்கள்.


விவசாயிகளிடம் சுரண்டல்

நியாயமான வர்த்தகம் மூலமாகவே நல்ல லாபம் வந்தாலும், நமது நாட்டின் வளங்களை நேரில் பார்த்த பிறகு அவர்களின் ஆசை பேராசையாக மாறியது. வங்காளத்தில் நவாபுடன் சேர்ந்து வர்த்தகம் செய்தது ஈஸ்ட் இண்டியா கம்பெனி. மக்களிடம் வரி வசூல் செய்து, அதை கம்பெனிக்கு கொடுத்து வர்த்தகம் செய்து வந்தார் நவாப். ஒரு கட்டத்தில், வரி வசூலிக்கும் பொறுப்பை நவாபிடம் இருந்து தனக்கு மாற்றிக் கொண்டது கம்பெனி.

அது செய்த முதல் வேலை, வரியை 3 மடங்காக உயர்த்தியதுதான். நவாப் வசூலித்து வந்த வரியே அதிகம். அதை இப்படி உயர்த்தியதும் மக்கள் ஒடிந்து போனார்கள். அப்போது வரி செலுத்தியவர்கள் விவசாயிகள் மட்டும்தான். அப்போதெல்லாம் தொழில் செய்பவர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் வருமான வரி கிடையாது.விவசாயிகள் பெரும் கஷ்டத்துக்கு மத்தியில் வரியை செலுத்தினார்கள். அப்படி வசூலான வரியில் இருந்து ஒரு தொகையை கொடுத்து, விவசாயிகளின் அனைத்து உற்பத்தி பொருட்களையும் கம்பெனியே வாங்கியது. அதாவது, மொத்த வேளாண் உற்பத்தியையும் கம்பெனி இலவசமாகவே எடுத்துக் கொண்டது என்பதே இதன் பொருள்.

வரி வசூலையும் பொருள் கொள்முதலையும் கம்பெனி ஆட்களே செய்திருந்தால் மக்களுக்கு இந்த பகல் கொள்ளை புரிந்திருக்கும். ஆனால் கம்பெனி சாமர்த்தியமாக வரி வசூலுக்கு தனியாக ஒரு கூட்டத்தையும் கொள்முதலுக்கு இன்னொரு கூட்டத்தையும் பயன்படுத்தியது. இப்படி வரிகளை வர்த்தகத்தோடு இணைத்த முதல் சூத்ரதாரிகள் ஆங்கிலேயர்களே.நாட்டு மக்களில் அப்போது வசதியுடன் வாழ்ந்த ஒரே பிரிவினர் அந்த வசூல், கொள்முதல் தரகர்கள்தான். இன்று இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமங்களாக காட்சியளிக்கும் பெரும்பாலான நிறுவனங்களின் அஸ்திவாரம் அந்த தரகு வேலையில் அமைக்கப்பட்டதுதான்.


பஞ்சத்தில் 3 கோடி பேர் சாவு

அநியாய வரிகளை செலுத்திவிட்டு, பாடுபட்டு விளைவித்த தானியங்களையும் இதர பொருட்களையும் சொன்ன விலைக்கு கொடுத்த பிறகு விவசாயிகள் சாப்பிட என்ன மிச்சமிருக்கும்? அந்த கொடுமையின் விளைவாக வங்காளத்தில் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் பட்டினி கிடந்து கொத்துக் கொத்தாக மடிந்தார்கள். 1770களில் ஏற்பட்ட அந்த பஞ்சத்தில் வங்க மக்கள்தொகை 3 கோடியில் மூன்றில் ஒரு பங்கான ஒரு கோடி பேர் இறந்ததாக ஆங்கிலேயர்களே புள்ளிவிவரம் பதிவு செய்திருக்கிறார்கள்.

வரி வசூல் செய்வதை தவிர வேறு எந்த வேலையும் கம்பெனியின் நிர்வாகிகளுக்கு இருந்ததில்லை. அதனால்தான் அவர் பதவியின் பெயரையே கலெக்டர் என்று வைத்தது கம்பெனி. அதன் நிர்வாகத்தை பிரிட்டிஷ் ஆட்சி கையகப்படுத்திய பிறகும் கலெக்டர் பதவிக்கான பொறுப்பில் மாற்றம் இல்லை.வரிகள் மிக அதிகமாக இருந்த காரணத்தால், வளமான வாழ்க்கை என்பது மக்களை விட்டு விலகி விலகிச்சென்றது. இந்தியர்களின் உற்பத்தி, தயாரிப்பு, விளைச்சல் என மொத்தத்தையும் கிட்டத்தட்ட இலவசமாக கொள்முதல் செய்த பிரிட்டிஷ் அரசு அவற்றை நல்ல விலைக்கு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. அன்னிய செலாவணியில் சிங்கிள் டாலர் அல்லது பவுண்ட் இந்தியாவுக்குள் வரவில்லை.

அப்படி கொஞ்சமாவது வந்து அது இந்திய மக்களுக்காக செலவிடப்பட்டு இருந்தால் நமது மக்களின் உடல் நலமும் சமூக நலமும் எவ்வலவோ மேம்பட்டு இருக்கும். மாறாக, 1900ம் ஆண்டில் தொடங்கி ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கான புள்ளி விவரங்களை பார்த்தால், இந்தியர்களின் தனிநபர் வருமானம் ஒரு அணா கூட அதிகரிக்கவில்லை என்பது தெரியும். இத்தனைக்கும், அன்றைய காலகட்டத்தில் மிக அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததன் மூலமாக, மிக அதிகமான அந்நிய செலாவணி சம்பாதித்த உலகின் இரண்டாவது நாடாக இருந்தது இந்தியா. அந்த தொகை அரசாங்க பட்ஜெட்டில் மட்டும் காட்டப்பட்டதே தவிர, அது இந்தியாவுக்குள் வரவே இல்லை.

மொத்த பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்கை ''வெளிநாடுகளில் செலவு செய்ய” என்ற தலைப்பின்கீழ் ஒதுக்கி விடுவார் நிதி அமைச்சர். அவரது இருப்பிடமோ லண்டன். இந்தியாவில் இருந்து என்னென்ன பொருட்களை எல்லாம் நீங்கள் இறக்குமதி செய்ய விரும்புகிறீர்களோ, அதற்கான தொகையை இங்கே செலுத்தி விடுங்கள் என்பார். அவர்களும் பேங்க் ஆப் இங்கிலாந்தில் பிரிட்டிஷ் பவுண்டாக வோ தங்கமாகவோ செலுத்துவார்கள். அந்த தொகைக்குரிய பில்களை நிதி அமைச்சர் இந்திய ரூபாய் மதிப்பில் தயார் செய்வார்.

“வெளிநாடுகளில் செலவு செய்ய” என்ற தலைப்பில் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து அந்த தொகை பட்டுவாடா செய்யப்படும். இப்படித்தான் இந்திய விவசாயிகள், உற்பத்தியாளர்கள் சம்பாதித்த சர்வதேச செலாவணி மொத்தமும் இங்கிலாந்து அரசின் முழு ஆதிக்கத்தில் சேர்ந்தது.அதில் கொஞ்சம் தொகையை இந்தியாவுக்கு அனுப்பி இருந்தால், தொழில் புரட்சியின் விளைவாக உருவான நவீன தொழில் நுட்பங்களையும் இயந்திரங்களையும் இந்தியா இறக்குமதி செய்திருக்க முடியும். அது 1800களின் கடைசி பகுதி. மிகவும் பின்தங்கிய நாடாக கருதப்பட்ட ஜப்பான் நவீன தொழில்நுட்ப நாடாக மாறுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் அப்போதுதான் தொடங்கின என்பதை கவனிக்க வேண்டும்.

ஜப்பானையும் தாண்டி இந்தியா வெகுதுாரம் முன்னேறி இருக்கக்கூடிய சந்தர்ப்பம் இவ்வாறாக பறிபோனது.குப்புறத்தள்ளிய குதிரை குழியும் பறித்த கதையாக, இந்தியாவை சுரண்டி கொண்டும், அதன் முன்னேற்றத்தை தடுத்துக் கொண்டும் இருந்த இங்கிலாந்து அரசு அதன் ஏனைய தோல்விகளுக்கும் இந்தியாவை பகடைக்காய் ஆக்கியது. இது ஒரு சுவாரசியமான கொடுமை.


22 ஆண்டுகளாக வீழ்ச்சி

எப்படி என்றால், இங்கிலாந்து ஒரு சிறிய நாடு. இந்தியாவை சகட்டுமேனிக்கு சுரண்டி கொழுத்தால், அந்த பலன் முழுவதையும் கிரகித்துக் கொள்கிற சக்திகூட அதற்கு கிடையாது. அப்படியானால் உபரி செல்வத்தை என்ன செய்வது? ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மானாவாரியாக முதலீடு செய்தது இங்கிலாந்து. ரயில் பாதைகள், நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் அமைப்பது, பிரமாண்ட தொழிற்சாலைகள் நிர்மாணிப்பது என்று எல்லாவற்றிலும் இறங்கி ஆடியது.அதே சமயம், அந்த நாடுகளில் இருந்து எதெல்லாம் கிடைக்குமோ அனைத்தையும் இறக்குமதி செய்தது.

தொழில்புரட்சியை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற அதன் வெறி புரிந்துகொள்ளக் கூடியதுதான். ஆனால், அதன் விளைவாக இரட்டைப் பற்றாக்குறைகளை அது எதிர்கொண்டது. ஏற்றுமதியைவிட பல மடங்கு அதிகரித்த இறக்குமதியால் விளைந்த கரன்ட் அக்கவுன்ட் டெபிசிட்; வெளிநாடுகளில் முதலீடுகள் எகிறியதால் உண்டான கேப்பிடல் அக்கவுன்ட் டெபிசிட்.

இந்த மெகா பற்றாக்குறையை சமாளிக்க இந்தியாவின் தங்கம் மற்றும் அந்நிய செலாவணியில் கைவைத்தது. இந்தியாவை போல வேறு பல அடிமை நாடுகள் இருந்தாலும், அவை எதுவும் நம்மைப்போல இங்கிலாந்துக்கு அள்ளிக் கொடுக்கும் சக்தி கொண்டவை இல்லை. இங்கிலாந்தின் மகுடத்தில் இடம்பெற்ற மாணிக்கக்கல் என்று அவர்களே சொன்ன தன் அர்த்தம் அதுதான். பற்றாக்குறை நெருக்கடி தவிர போர்களாலும் காலனிகளை தக்கவைத்துக் கொள்ள நடத்தும் சண்டைகளாலும் ஏற்பட்ட இழப்புகளை சரிக்கட்டவும் இந்தியர்கள் மீது வரிகளை விதித்துக் கொண்டே இருந்தது இங்கிலாந்து அரசு. ஏதாவது வரி வசூலில் சுணக்கம் நிகழ்ந்தால் அது நிலுவையாக குறிக்கப்பட்டு அதற்கு வட்டியும் விதித்து நம்மிடம் வசூல் செய்தனர்.

இப்படி நினைத்தும் பார்க்க முடியாத வழிகளில் இந்தியர்களை கசக்கிப் பிழிந்த காரணத்தால் நமது மக்கள் சாப்பாட்டுக்கு வழியில்லாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார்கள். ஆங்கிலேய அரசுக்கு விசுவாசமாக இருந்து பலன்களை அனுபவித்தவர்களை தவிர்த்து சாமானிய மக்கள் நிலைமை சொல்லி மாளாது.


இதை பாருங்கள்:


1900ம் ஆண்டில் இந்தியாவில் தனி நபரின் வருடாந்திர சராசரி தானிய நுகர்வு 200 கிலோவாக இருந்தது. 30 ஆண்டுகளில் அது 157 கிலோவாக சரிந்தது. சுதந்திரம் அடைவதற்கு முந்தைய ஆண்டில் 137 கிலோவாக வீழ்ந்தது. உலகில் பஞ்சம் பசி பட்டினிக்கு ரொம்பவும் பழக்கப்பட்ட எந்த ஒரு ஏழை நாடும்கூட இந்த அளவுக்கு மோசமான தனி நபர் தானிய நுகர்வு நிலைக்கு வந்தது இல்லை என்றால், வெள்ளையர் ஆட்சியின் விளைவு குறித்து உணர முடியும்.

பட்டினியாலும் நோய்களாலும் மக்கள் கூட்டம் கூட்டமாக செத்து விழுந்தார்கள். 1911ல் இந்தியர்களின் சராசரி ஆயுள் காலம் வெறும் 22 ஆண்டுகளாக வீழ்ச்சி அடைந்த உண்மையை ஆங்கிலேய அதிகாரிகளின் பதிவேடுகளிலேயே நாம் பார்க்க முடியும்.


குறிவைப்பது ஏன்


நம்மை அடிமைப்படுத்தி சுரண்டியது இங்கிலாந்து என்றாலும், சுரண்டப்பட்ட நமது செல்வத்தால் பயன் அடைந்த நாடு அது மட்டுமல்ல. நம்மிடம் எடுத்த செல்வத்தைதான் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ரஷ்யாவிலும்கூட தாராளமாக முதலீடு செய்தது இங்கிலாந்து. அந்த நாடுகள் அனைத்தின் பிரமிக்க வைக்கும் வளர்ச்சி எல்லாமே நமது நாட்டில் இருந்து கவர்ந்து சென்ற செல்வத்தால் மட்டுமே சாத்தியப்பட்டது. நமது செல்வம் இல்லாமல் இத்தகைய அடிப்படை கட்டமைப்பை கனவிலும் அவை கண்டிருக்க முடியாது என்பது உறுதி.

ஆண்டுகள் பல கடந்து விட்டாலும், இன்றைக்கும் மேலை நாடுகளின் போக்கு மாறவில்லை. முன்னேறாத நாடுகளை காலனிகளாக மாற்றி சுரண்டிய அதே வேலையை இன்று அவை நம்மை அடிமைப்படுத்தாமலே செய்யத் துடிக்கின்றன. அந்த நாடுகள் எல்லாம் பூமியின் வட பகுதியில் அமைந்திருக்கின்றன. அங்கு குளிர்காலம் கடுமையானது. விவசாயம் செய்ய முடியாது. ஆனால் நமது நாடு வெப்ப பூமி. ட்ராப்பிக்கல் ரீஜன் என்று சொல்லப்படும் இந்தியா போன்ற நாடுகளில் வருடம் முழுவதும் விவசாயம் செய்ய முடியும்.

அதனால் பணக்கார நாடுகள் குளிர் காலத்தில் தங்களுக்கு வாய்க்காத பூக்களையும், காய்களையும் பழங்களையும் நமது மண்ணில் விளைவித்து அள்ளிச் செல்ல விரும்புகிறார்கள். அதனால்தான் நமது விவசாய நிலங்களை குறி வைக்கிறார்கள். நமது பாரம்பரிய வேளாண்மை மரபுகளையும் தொழில்நுட்பத்தையும் அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏற்றவகையில் மாற்றி அமைக்க திட்டமிடுகிறார்கள். என்னதான் வளர்ந்த நாடு என சொல்லிக் கொண்டாலும், நம்மைப் போன்ற வளரும் நாடுகளின் தயவு இல்லாமல் அவர்கள் வாழவே முடியாது.


ஆசைகள் அடங்கவில்லை


இதை மனதில் கொண்டு ட்ராப்பிக்கல் நாடுகள் கைகோர்த்து மேலை நாடுகளிடம் பேரம் பேச வேண்டும். ஏனென்றால் தங்களின் மிக முன்னேறிய வாழ்க்கைத்தரத்தை பாதுகாக்க அவர்களுக்கு நமது பங்களிப்பு அத்தியாவசியமாகி விட்டது.இன்றும் ஒரு மேலைநாட்டில் எந்த ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கும் போய் பாருங்கள். அங்கே விற்கப்படும் 12,000 பொருட்களில் 70 சதவீதம், அதாவது 8,000 பொருட்களுக்கு மேல் இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளின் தயாரிப்பாக இருக்கும்.இந்தியாவும் சீனாவும் இப்போது ஆப்ரிக்காவில் வர்த்தகத்தை விரிவுபடுத்த முயற்சிகள் எடுக்கின்றன. இதை நவீன காலனியாதிக்கம் அல்லது புதிய ஏகாதிபத்தியம் என்று சிலர் வர்ணிக்கின்றனர். இது மேலை நாடுகளின் தந்திரம்.

அவர்கள் செய்த பழைய பாவங்களில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப அப்படி பிரசாரம் செய்கின்றனர். ஏனென்றால் சீனாவோ இந்தியாவோ ஆப்ரிக்காவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளோடுதான் ஒப்பந்தம் போடுகிறார்கள். தனிநபர்கள் அல்லது குழுக்களோடு அல்ல.இங்கிலாந்தும் ஏனைய மேலை நாடுகளும் பிற நாடுகளை கைப்பற்றி அரசியல் அதிகாரத்தை சுவீகரித்து அடிமைப்படுத்திய மக்களை வரிகளால் சுரண்டி, அவர்களின் வளங்களை அபகரித்து, பசியாலும் பட்டினியாலும் சாகடித்தார்கள். இந்தியாவோ சீனாவோ அந்த வழியில் பயணிக்கப் போவதில்லை.

முகலாயர்கள் இந்தியாவை சுரண்டவில்லையா, அவர்களும் அன்னியர்கள் தானே என்ற வாதமும் விவரம் தெரியாத பேச்சு. வெளியே இருந்து வந்தாலும் முகலாய மன்னர்கள் தங்கள் பூர்வீக தொடர்புகளை பாதுகாக்கவில்லை. வந்த இடத்தையே சொந்த இடமாக பாவித்தனர். மக்களிடம் வரி வசூலித்தாலும் அதை வெளியே கொண்டு செல்லாமல் இங்கேயே செலவிட்டனர். எனவே ஆங்கிலேயர்களோடு முகலாயர்களை ஒப்பிடுவது தவறு.

மேற்கத்திய நாடுகள் எல்லா வகை சுரண்டல்களையும் செய்துமுடித்த பிறகும் அவர்களின் ஆசைகள் அடங்கவில்லை. சொந்த மக்களின் நலன்களை பாதுகாப்பது என்ற பெயரில் பிற நாட்டு பொருட்களின் வருகையை தடுக்கப் பார்க்கிறார்கள். இந்தியாவை காலனியாக வைத்திருந்த காலத்திலேயே இங்கிலாந்து கையாண்ட உத்திதான் இது.

இந்த வரலாறுகூட இங்கிலாந்து மாணவர்களுக்கு தெரியாமல் மறைக்கப்படுகிறது. இக்கனாமிக் ஹிஸ்டரி ஆப் இண்டியா என்கிற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக புத்தகத்தில் 146 ஆண்டுகளாக இந்திய துணிகளுக்கு எதிராக இங்கிலாந்து அரசு அமலில் வைத்திருந்த தடை குறித்து ஒரு வார்த்தை குறிப்பிடவில்லை. இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானத்தை 180 ஆண்டுகளாக இங்கிலாந்து அப்படியே ஸ்வாஹா செய்தது பற்றிய தகவலும் அந்த புத்தகத்தில் இல்லை.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா போன்றவை எல்லாம் அங்குள்ள மக்களின் புதுமையான சிந்தனையாலும் தொழில் முயற்சிகளாலும்தான் இவ்வலவு துாரம் முன்னேறி இருக்கின்றன என்று நமது நாட்டில் பலரும் நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறான கருத்து. 200 ஆண்டுகளாக இந்தியாவை சுரண்டியதன் மூலமே அந்த நாடுகள் எல்லாம் இன்று வளமாக இருக்கின்றன என்பதுதான் வரலாற்று உண்மை.

துரதிர்ஷ்டம் என்ன என்றால் இந்த உண்மையான வரலாறு இந்திய மாணவர்களுக்கும் சொல்லப்படவில்லை; இங்கிலாந்து மாணவர்களுக்கும் தெரிவிக்கப்படவில்லை.சுதந்திர வர்த்தகம், ப்ரீ ட்ரேட் என்ற பதமே மேலை நாடுகள் உருவாக்கிய ஏமாற்று வார்த்தைதான். தங்கள் நலன்களை பாதுகாக்க மற்ற நாடுகளுக்கு அவை எடுக்கும் பாடத்தின் தலைப்பு அது. உண்மையில் அது நமக்கு தேவையே இல்லை. நாம் அவர்களை சார்ந்து நிற்க வேண்டிய அவசியமே இல்லை. நமது பொருட்களை அவர்களுக்குதான் விற்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.

நமது மக்களே அதிகம் இருப்பதால் தேவையும் அதிகமாக இருக்கிறது. இது தவிர நம்மைப் போன்ற நாடுகளுடன் கைகோர்த்து கூட்டுறவு முயற்சிகள் எடுக்கலாம். எனவே மேலைநாடுகள் தமது மக்களின் நலனை காப்பது என்ற பெயரால் விதிக்கும் தடைகளை நாம் பொருட்படுத்த வேண்டியதும் இல்லை. நமது மக்களின் வேலை வாய்ப்புக்கு தேவையான முயற்சிகளை யாருடைய வாழ்வாதாரத்தையும் பாதிக்காத வகையில் மேற்கொண்டால் போதுமானது.


கொடிய நிகழ்வு

இந்தியர்களும் வேறு பல வளரும் நாடுகளின் மக்களும் சிந்திய வேர்வையிலும் ரத்தத்திலும் பூத்ததுதான் நவீன முதலாளித்துவ உலகம். ஆங்கிலேயர்களின் காலடித்தடம் பதிந்த வட அமெரிக்காவில் ஆரம்பித்து ஆஸ்திரேலியா வரையிலும் பரந்து கிடக்கும் பணக்கார நாடுகள் தமது வருடாந்திர வருமானத்தில் ஒரு பகுதியை வளரும் நாடுகளுக்கு, குறிப்பாக ஏழை நாடுகளுக்கு, தொடர்ந்து வழங்க கடமைப்பட்டிருக்கின்றன.

மற்ற நாடுகளைவிட முக்கியமாக பிரிட்டனுக்கு இதில் பெரும் பங்கு உண்டு. வங்காள பஞ்சத்தில் மடிந்துபோன 30 லட்சம் மக்களுக்கும் அது திருப்பி செலுத்த வேண்டிய கடமை இருக்கிறது. ஏனென்றால் அந்தப் பஞ்சம் இயற்கைப் பேரழிவு அல்ல; இங்கிலாந்து அரசால் உருவாக்கப்பட்ட கொடிய நிகழ்வு.

-ரே

Advertisement
வாசகர் கருத்து (216)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manivannan - chennai,இந்தியா
06-டிச-201806:54:12 IST Report Abuse
manivannan இந்த கட்டுரை உள்ளத்தை உலுக்குகிறது. வயிறு எரிகிறது. கோபம் வருகிறது. ஆனால் நம்முடைய அறிவு பஞ்சம் நம்மால் எதுவும் செய்ய முடியாது.
Rate this:
Share this comment
Cancel
Sangeedamo - Karaikal,இந்தியா
04-டிச-201812:00:16 IST Report Abuse
Sangeedamo உண்மை வரலாற்றை மறைத்து, பொய் கதைகள் புனைந்து இந்திய பாரம்பரியம் என்பதையே கலை இழக்க செய்த கைக்கூலிகளிடமிருந்து, நம் பாரம்பரிய வழிமுறைகளையும், முன்னோர்களின் அறிவுத்திறன்களையும் பற்றி நம் இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும், போதிக்க இன்னும் பல நபர்கள் தன்னலம் இல்லாது செயல் படவும், இம்மாதிரி உண்மை கருத்துக்களை தெரிய படுத்துவதிலாவது நம் கடமையை செய்வோம் நம் வருங்கால சமுதாயமாவது துரோகிகள், விஷமிகள், கைக்கூலிகள் இவர்களை அடையாளம் கண்டு கொள்ள உதவுவோம் வாருங்கள் நம் பாரம்பரியத்தை காப்போம் உண்மை வரலாற்றை போதிப்போம் ஊழலில்லா சமுதாயத்தை உருவாக்கி, குறைவில்லா வாழ்வை நம் பிள்ளைகளாவது வாழட்டும் கைகொடுப்போம் வாருங்கள்
Rate this:
Share this comment
Cancel
Shanmuganathamuthaliar Sasikaramuthaliar - scarborough,கனடா
04-டிச-201810:44:05 IST Report Abuse
Shanmuganathamuthaliar Sasikaramuthaliar இன்றும் வெள்ளையனை நம்பினால்தான் இந்தியனுக்கு வாழ்க்கை என்ற எண்ணத்தில் இந்திய நாட்டின் ஆட்சியாளர்கள் உள்ளனர். அத்துடன், இந்தியாவில் கொள்ளையடித்த பணம் படைத்தவனெல்லாம் வாழும் இடங்கள் வெளிநாடுதானே அதனாலும் வருமானம் வெளிநாட்டானுக்குத்தான். இதை மக்களும் - அரசியல்வாதிகளும் என்று அறிந்துகொள்ளப்போகின்றனர்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X