Vice chancellor postings sold for money | துட்டுக்கு விற்கப்படும் துணைவேந்தர் பதவிகள்: தடுத்து நிறுத்துமா தமிழக அரசு?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

துட்டுக்கு விற்கப்படும் துணைவேந்தர் பதவிகள்: தடுத்து நிறுத்துமா தமிழக அரசு?

Added : ஜூன் 01, 2011 | கருத்துகள் (36)
Advertisement
துட்டுக்கு விற்கப்படும் துணைவேந்தர் பதவிகள்: தடுத்து நிறுத்துமா தமிழக அரசு?

"குறைந்த செலவில் துணைவேந்தர் பதவி வேண்டுமா? உடனடியாக இந்த எண்ணில் தொடர்புகொள்ளவும்' என, பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்படாத குறை தான். அந்தளவுக்கு துணைவேந்தர் பதவியைப் பெறும் விதம், விமர்சனங்களுக்கு உள்ளாகிவிட்டது.


"துணைவேந்தர்' என்றாலே, கல்வியாளர்கள் முதல் கட்சிக்காரர்கள் வரை, எழுந்து நின்ற காலம் போய், கரைவேட்டிகளைக் கண்டால், துணைவேந்தர்கள் எழுந்து நிற்கும் காலம் வந்துவிட்டது. காரணம் மிக எளிமையானது. அந்தக் கரைவேட்டிகளின் தயவில், அவர்கள் துணைவேந்தர் பதவியை அடைந்தது தான்.கடந்த பத்து ஆண்டுகளாகத் தான் இந்த நிலைமை. குறிப்பாக, கடந்த ஐந்தாண்டுகளில், மிக மோசம். கிட்டத்தட்ட, எல்லா பல்கலையின், எல்லா துணைவேந்தர்கள் மீதும், ஏதேனும் ஒரு புகார் அல்லது சர்ச்சை இருந்தது.கோவை அண்ணா பல்கலை துணைவேந்தராக இருந்த ராதாகிருஷ்ணன் மீது, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு புகுந்தது. "சர்ச்சைக்குரியவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம்' என, அப்போதைய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. "திருச்சி பாரதிதாசன் பல்கலை துணைவேந்தராக இருந்த பொன்னவைக்கோ மீதும் புகார்கள் இருந்தன; அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது' என்பதே, அரசின் பிரமாணப் பத்திரம் மூலம் தான் உலகத்துக்கு தெரிந்தது.இவர்கள் இரண்டு பேர் தான் என்றில்லை. சர்ச்சையில் சிக்கியவர்களின் பட்டியல் போட்டால், பக்கம் போதாது. தற்போதைய வேளாண் பல்கலை துணைவேந்தர் முருகேசபூபதி, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திடம் உதவியாளராக இருந்தவர். சென்னைப் பல்கலை துணைவேந்தர் திருவாசகம், தி.மு.க., ஆதரவாளராக அறியப்பட்டவர்; முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புத்தகங்களை முழுமூச்சாக மொழி பெயர்த்தவர். அதனால் தானோ என்னவோ, கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தர் பதவிக்காலம் முடிந்ததுமே, சென்னை பல்கலைக்கு நியமிக்கப்பட்டார்.


எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையின் துணைவேந்தராக பணியாற்றும் மயில்வாகனன் நடராஜன், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்ப டாக்டராகத் திகழ்ந்தவர். அவர் மீது, ஜாதிச் சாயமும் பூசப்பட்டது. யாரும் எதிர்பாராத விதத்தில், சென்னை அண்ணா பல்கலை துணைவேந்தராக நியமிக்கப்பட்ட விஸ்வநாதன், அதற்கு முன், எந்தக் கல்லூரியிலும் துறைத் தலைவராகக் கூட இருந்ததில்லை. கூட்டணிக் கட்சித் தலைவரின் கடும் நெருக்கடி காரணமாக நியமிக்கப்பட்டதாக புகார்.திறந்தவெளி பல்கலை துணைவேந்தர் கல்யாணி அன்புச்செல்வன், முன்னாள் நிதியமைச்சர் அன்பழகனின் உறவினர். கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனின் மருமகன் மா.ராஜேந்திரன், தஞ்சை தமிழ்ப் பல்கலைத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். இவர், எந்தப் பல்கலையிலும் பணிபுரிந்ததில்லை.


பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன், கல்வியாளர் தான் என்றாலும், அப்பகுதியில் உள்ள பெரும்பான்மை சமூகத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், அவர் நியமிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. திருச்சி பாரதிதாசன் பல்கலை துணைவேந்தராக மீனா அறிவிக்கப்பட்டது, கல்வியாளர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தியது. எல்லாவற்றுக்கும் மேலாக, ம.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,வுக்கு தாவிய, தி.மு.க.,வில் எம்.எல்.ஏ., சீட் கேட்ட, ஊரறிந்த அரசியல்வாதியான சபாபதி மோகனுக்கு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணைவேந்தர் பதவி தாரைவார்க்கப்பட்டது தான், "ஹைலைட்!'


ஆட்சியாளர்களின் அபிலாஷைகள் ஒருபுறம் என்றால், அதிகார வர்க்கத்தின் உச்சத்தில் இருப்பவரின் மகன், தனது நண்பரோடு இணைந்து, வசூல் வேட்டை நடத்தியதாக பெரியளவில் பேச்சு அடிபட்டது. அந்த நண்பருக்கு என்ன கல்வித் தகுதி; துணைவேந்தர் நியமனத்தில் கூட புரோக்கர்களின் தலையீடு சரிதானா என்பதெல்லாம், விடை தெரியாத வினாக்கள். இவர்கள் தரப்பிலிருந்து, துணைவேந்தர் பதவிக்கு, இரண்டு கோடி ரூபாயில் இருந்து ஏழு கோடி ரூபாய் வரை விலை பேசப்பட்டது. இதெல்லாம், பிரபல பல்கலைகளுக்குத் தான். ஒருமைப் பல்கலை, கால்நடை பல்கலைக்கெல்லாம், "கட்டணம்' கம்மி.சரி, எல்லாமே முறைகேடு தானா? எதுவுமே உருப்படியாக நடக்கவில்லையா என்றால், ஒன்று மட்டுமே சொல்லும்படி இருந்தது. சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தராக முத்துச்செழியன் நியமிக்கப்பட்டது, முழுக்க முழுக்க வெளிப்படையாக நடந்தது. ஆன்-லைனில் தான் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. எதனால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும், அவரது தேர்விலேயே விளக்கப்பட்டிருந்தது. அதனால், அந்த நியமனத்தில் மட்டும் தான் எந்த சர்ச்சையும் எழவில்லை.


தமிழகத்தில் உள்ள 23 பல்கலைக் கழகங்களில் தற்போது மதுரை காமராஜர், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார், கொடைக்கானல் அன்னை தெரசா, தஞ்சை தமிழ்ப் பல்கலை ஆகியவற்றில் துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. இவற்றின் நியமனங்களிலாவது சர்ச்சையோ, புகாரோ இல்லாமல், வெளிப்படையான, நேர்மையான முறையில் துணைவேந்தர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.


கோடிகள் புரள்வது ஏன்?சில கல்வியாளர்கள், துணைவேந்தர் பதவியை லட்சியமாக நினைப்பர். அவர்களால் இவ்வளவு தொகையைச் செலவழிக்க முடியாது. எனவே, பெரிய பெரிய தொழில் நிறுவனங்கள் அல்லது கல்வி நிறுவனங்கள் மூலம் பணம் கொடுத்து, "ஸ்பான்சரில்' பதவியைப் பிடிப்பர். முதலீடு செய்த பணத்தை மீட்க, தொழில் நிறுவனங்கள் முயற்சி செய்யாதா, என்ன?பல்கலைக் கழகங்களில் படிப்பு தான் வரும்; பணம் எங்கிருந்து வரும்? புது கல்லூரிகளின் இணைப்பு, பணியிட நியமனம், புதிய பாடத்திட்டங்களுக்கு அனுமதி, கூடுதல் மாணவர் ஒதுக்கீடு, தர நிர்ணயம் என ஏராளமான விஷயங்களில், பல்கலைக் கழகங்களை நம்பி கல்லூரிகள் இயங்குகின்றன. தரத்தின் அடிப்படையில் நடந்துவந்த இவ்விஷயங்கள் தான் இப்போது பணத்தை நம்பி செயல்படத் தொடங்கிவிட்டன.


துணைவேந்தராக தகுதி எது?துணைவேந்தர் பதவிக்கான தகுதிகள் பற்றி யு.ஜி.சி.,யில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தில், குறைந்தது பத்து ஆண்டுகளாவது பேராசிரியராக பணியாற்றியிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான, தகுதிவாய்ந்த நிறுவனத்தில் பத்து ஆண்டுகளாவது ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும்.மூன்று அல்லது ஐந்து நபர் கொண்ட குழு தான், துணைவேந்தரை தேர்ந்தெடுக்க வேண்டும். இக்குழுவின் தலைவராக, கவர்னரின் பிரதிநிதி இருக்க வேண்டும். ஒருவர், யு.ஜி.சி.,யின் பிரதிநிதியாகவும், இன்னொருவர் பல்கலை சிண்டிகேட் பிரதிநிதியாகவும் இருக்க வேண்டும்.இவர்கள் வெளிப்படையான மற்றும் நேர்மையான முறையில், தகுதிவாய்ந்த கல்வியாளர்கள் மூன்று பேரின் பட்டியலை, கவர்னரிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்களில் ஒருவரை புதிய துணைவேந்தராக, கவர்னர் நியமிப்பார். பட்டியலில் உள்ள மூன்று பெயர்களையும் நீக்கிவிட்டு, புதுப் பட்டியலை தயாரிக்க உத்தரவிடும் அதிகாரமும், பல்கலைக் கழகங்களின் வேந்தராகிய கவர்னருக்கு உண்டு. அப்படி ஒரு சம்பவம், மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தில் ஏற்கனவே ஒரு முறை நடந்திருக்கிறது.


- நமது சிறப்பு நிருபர் -


Advertisement