நகராட்சியுடன் பஞ்சாயத்தை இணைக்க எதிர்ப்பு :உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு | நகராட்சியுடன் பஞ்சாயத்தை இணைக்க எதிர்ப்பு :உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சியுடன் பஞ்சாயத்தை இணைக்க எதிர்ப்பு :உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு

Added : ஜூன் 21, 2011

ஓசூர்: "பஞ்சாயத்தை நகராட்சியுடன் இணைத்தால், வரும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம்' என, சானசந்திரத்தில் நடந்த சென்னத்தூர் பஞ்சாயத்து கிராம மக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஓசூர் நகராட்சியுடன், புறநகரில் உள்ள சென்னத்தூர், மூக்கொண்டப்பள்ளி, ஜுஜுவாடி, ஆவலப்பள்ளி மற்றும் மத்திகிரி டவுன் பஞ்சாயத்து ஆகியவற்றை இணைக்க, கடந்த தி.மு.க., ஆட்சியில் முடிவு செய்து அரசு ஆணை பிறக்கப்பட்டது. அதன்படி, தற்போது நகராட்சி கமிஷனர் விமலா தலைமையில், அதிகாரிகள், ஐந்து பஞ்சாயத்துகள், ஒரு டவுன் பஞ்சாயத்து ஆகியவற்றை இணைக்க நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். பஞ்சாயத்து கிராமங்கள், மக்கள் தொகை, அரசு கட்டிடங்கள், நிலம் மற்றும் பணியாளர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை கணக்கெடுத்து வருகின்றனர். இந்நிலையில், பஞ்சாயத்துகளை நகராட்சியுடன் இணைக்க, பஞ்சாயத்து கிராம மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த வாரம், ஆவலப்பள்ளி பஞ்சாயத்து குடியிருப்போர் நலச்சங்க பொதுமக்கள் கண்டன தீர்மானம் நிறைவேற்றியும், இணைக்கும் முடிவை கைவிட வலியுறுத்தியும், தமிழக அரசுக்கு மனு அனுப்பினர். சென்னத்தூர் பஞ்சாயத்து கிராம மக்கள், நேற்று சானசந்திரம் கிராமத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில், சென்னத்தூர், சானசந்திரம், சூடச்சந்திரம், அலசநத்தம், ஜீவா நகர், முல்லைநகர், திரு.வி.க., நகர், திருவள்ளுவர் நகர், நரசம்மாகாலனி, பிருந்தாவனம் நகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள், காலனிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். முன்னாள் யூனியன் கவுன்சிலர் வாசுதேவரெட்டி தலைமை வகித்தார். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சிவப்பரெட்டி, சென்னத்தூர் பஞ்சாயத்து துணை தலைவர் சுபாஷினி சிவக்குமார், கவுன்சிலர்கள் நாகம்மாள் மாணிக்கவாசகம், வெங்கடேஷ், யசோதா, பஞ்சாயத்து அ.தி.மு.க., செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொன்ணுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், சென்னத்தூர் பஞ்சாயத்தை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றினர். பின், முன்னாள் யூனியன் கவுன்சிலர் வாசுதேவரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: சென்னத்தூர் பஞ்சாயத்தில் முழுமுழுக்க கிராமங்கள்தான் அமைந்துள்ளது. இங்கு, விவசாயிகள், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி தொழில் ஆகியவைதான் நடக்கிறது. மத்திய, மாநில அரசின் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் ஏழை மக்கள் பிழைப்பு நடத்துகின்றனர். நகராட்சியுடன் பஞ்சாயத்தை இணைத்தால், கிராமங்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பு திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள் கிடைக்காமல் போகும். நகராட்சியுடன் சென்னத்தூர் பஞ்சாயத்தை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும். இதையும் மீறி பஞ்சாயத்தை இணைத்தால், வரும் உள்ளாட்சி தேர்தலை சென்னத்தூர் பஞ்சாயத்து ஒட்டுமொத்த கிராம மக்களும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X