dinamalar nilagiri news | 12 ஆண்டுக்கு பின் நிரம்புகிறது அப்பர் பவானி அணை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

12 ஆண்டுக்கு பின் நிரம்புகிறது அப்பர் பவானி அணை

Added : செப் 07, 2011

மஞ்சூர் : தொடர் மழையால், 12 ஆண்டுக்கு பின் அப்பர் பவானி அணை நிரம்பும் நிலையில் உள்ளது.நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே அப்பர்பவானி அணை உள்ளது. இந்த அணையில் அமைக்கப்பட்ட ராட்சத குழாய் மூலம் அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை, பரளி மற்றும் பில்லூர் மின் நிலையம் வரை தண்ணீர் எடுத்து செல்லப்பட்டு மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து உபரி நீர் பவானி அணைக்கு செல்கிறது. கடந்த 12 ஆண்டுக்கு முன்பு, அப்பர்பவானி அணை நிரம்பியுள்ளது. தொடர்ந்து மாவட்டத்தில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தாலும் அப்பர்பவானி பகுதிகளில் போதுமான மழை பெய்வதில்லை; அணையில் தண்ணீர் இருப்பு குறைவாகவே இருந்தது. கடந்த ஆண்டுகளில் அணையின் மொத்த கொள்ளளவான 210 அடியில் 100 அடி அளவுக்குத் தான், தண்ணீர் இருப்பு இருந்து கொண்டே வந்தது. இந்நிலையில், அப்பர் பவானி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த ஒரு மாதமாக இரவு பகலாக பரவலான மழையும், அவ்வப்போது கன மழையும் பெய்து வருகிறது. நீரோடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து வருவதால், அணைக்கு 4,700 கன அடி தண்ணீர் வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 210 அடியில் தற்போது 207.5 அடிக்கு நீர் மட்டம் உயர்ந்து, அணையின் முழு கொள்ளளவையும் எட்டும் நிலையில் உள்ளது. இந்த அணையை நம்பியுள்ள மின் நிலையங்களில் தடையின்றி மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மின் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X