Ellora caves | உள்ளம் கவரும் எல்லோரா | Dinamalar

உள்ளம் கவரும் எல்லோரா

Added : செப் 24, 2011
Advertisement

எல்லா மதங்களும் அன்பøத்தான் போதிக்கின்றன என்றாலும். நவீன விஞ்ஞான யுகத்தில் மதங்கள் என்ற பெயரில் அடித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதைத் தவிர்த்து. வேற்றுமையில் ஒற்றுமையை காண அற்புதமான கலை பொக்கிஷங்களை நம் முன்னோர்கள் உருவாக்கி சென்றிருக்கிறார்கள். அவற்றுள் ஒன்றுதான் சரணதாசி குன்றுகளின் மடியில் அமர்ந்திருக்கும் எல்லோரா குகைக்கோயில்கள்.
அவுரங்காபாத்திலிருந்து 29 கி.மீ வடமேற்கு திசையில் பயணித்தால் எல்லோரா கோயில்களை அடைந்துவிடலாம். எல்லோரா ஒரு அழகிய சிறு கிராமாகவும் பண்டைய இந்தியாவின் வர்த்தக இணைப்புத் தலமாகவும் இருந்திருக்கிறது. இந்த கிராமத்தை சுற்றி இருந்த குன்றுகளில் கோயில்களை, 14வது நூற்றாண்டு வரை மக்கள் சென்று வழிப்பட்டிருக்கின்றனர். 17 இந்து கோயில்கள், 5 சமணக்கோயில்கள் என பௌத்த குகைகளை பார்த்துவிட்டு வரலாம்.
அடுக்குமாடி தோற்றத்துடன் அமைந்திருக்கும் பௌத்த குகைகளின் உள்ளே துறவிகள் வாழ்வதற்கான மடங்கள் அமைந்திருக்கின்றன. சமையல் கூடம், ஒன்றாக கூடி பிரார்த்தனை செய்யும் இடங்கள் என அமைந்திருப்பது ஆச்சர்யம். சில குகைகளில் கௌதம புத்தரின் சிலையும், பௌத்த துறவிகளின் சிலைகளும் செதுக்கப்பட்டிருக்கின்றன. 10வது எண் குகையை விஸ்வகர்மா குகை என்று அழைக்கிறார்கள். " கார்பன்டர்ஸ் கேவ்' என்ற செல்ல பெயரும் இதற்கு உண்டு. பார்ப்பதற்கு மரப்பலகைகள் போல் இருக்கும் மேற்கூரைகள், நிஜத்தில் குடைந்து மரப்பலகைப் போன்ற அமைப்பைக் கொடுத்திருக்கிறார்கள் கல்தச்சர்கள். பார்த்த கணத்தில் "வாவ்' என்று நம்மையும் அறியாமல் நம் உதடுகள் உச்சரிக்கும்.
அடுத்து இந்துக்களின் குகைக் கோயில்கள் இதில் 16வது எண் குகையில் உள்ள கைலாசநாதர் கோயில் உலகப் புகழ் பெற்றது. சிவபெருமானின் உறைவிடமான கைலாய மலையை, அப்படியே கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கும் இந்த குகைக் கோயில் ஒரே பாறையினால் உருவாக்கப்பட்டது. ஏதென்ஸில் இருக்கும் பார்த்தினானைப் போல, இரண்டு மடங்கு சுற்றளவு கொண்டது. இந்த கோயிலை சிற்பிகள் மேலிருந்து கீழ்நோக்கி செதுக்கி வந்திருக்கிறார்கள். இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்த கோயிலின் நுழைவாயில் அழகிய வடிவிலான ராஜசபையில் முடிகிறது. பல்வேறு தெய்வச்சிலைகள் அலங்கரிக்கும் இந்த கோயிலை, பெரிய பெரிய கல்யானைகள் தாங்கி நிற்பது போன்ற தோற்றத்துடன் வடிவமைத்திருக்கிறார்கள்.
ஜன்னல்கள், பக்தர்கள் கூடும் பிரார்த்தனைக் கூடங்கள், பர்த்தவுடன் காதலாகி கசிந்து உருக வைக்கும் பிரம்மாண்டமானலிங்கம், நந்தி, ஆண், பெண் உருவங்கள், நுழைவாயிலின் இடது புரம் நயன்மார்கள், வலதுபுறம் ஆழ்வார்கள், இரண்டு கொடிக்கம்பங்கள் என்று அழகு மிளிரும் இந்த இடத்தை காண கண்கோடி வேண்டும். இந்தக் கலைப் பொக்கிஷத்தின் கிரீடத்தில் பதித்த வைரமாக ஜொலிக்கிறது... கைலாய மலையைத் தன் பலத்தையெல்லாம் கொண்டு தூக்க முயலும் இந்தக் கோயிலை குடைந்து உருவாக்க கட்டிட வல்லுனர்களுக்கும், சிற்பிகளுக்கும் 100 வருடங்கள் ஆனதாம், இந்தகோயில் பணியை தொடங்கியவர் ராஷ்ட்ரகூட வம்சத்தை சேர்ந்த அரசர் கிருஷ்ணா,
இவரால் தான் தென்னிந்திய முறையில் இந்த கோவில் அழகுமிளிர கட்டப்பட்டது. இந்த கோயிலை பற்றி, ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் பிரமிக்க வைக்கிறார் கைலாய நாதர். அடுத்த முக்கியமான குகைக் கோயில் தசாவதராக் கோயில், இதில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களைச் செதுக்கி வைத்திருக்கிறார்கள்.
சமண குகைக் கோயில்கள் மற்ற இரண்டு குகைக்கோயில்களைப் போன்று பெரியதாக இல்லாவிட்டாலும், கலை நுணுக்கம் மிகுந்து இருக்கிறது. 30வது எண் குகைக் கோயிலின் கூரையை ஒரு அழகான தாமரை மலர் அலங்கரிக்கிறது. மற்றொரு குகையில் மாமரத்தின் கீழே ஒரு யக்ஷி புலி மீது அமர்ந்திருக்கிறார். மரத்தில் தொங்கும் மாங்கனிகள் தத்ரூபாக இருப்பதால், பறித்து தின்னும் ஆவல் நமக்குள் தானாக எழும்புகிறது.
"மார்வல்ஸ்! ஆஸம்!'' என்று ஆர்ப்பரித்தபடியே ஒரு ஜரோப்பிய தம்பதியர், புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தனர். அருகில் சென்று விசாரித்த போது'' உலகையே சுற்றி வந்திருக்கிறோம். ஆனால் எங்கள் மனதை இந்த இடம் கொள்ளை கொண்டது போல வேறு எந்த இடமும் ஈர்க்கவில்லை!'' என்றனர். நீங்களும் புறப்படுங்கள்! எல்லோரா குகைக் கோயில்களை கண்டு மகிழுங்கள். இந்த ஜென்மத்திற்கான பயனை அனுபவியுங்கள்.
எப்படி செல்லலாம்?: விமானம் மூலமாக அவுரங்காபாத் சென்று, அங்கிருந்து எல்லோரா குகைக் கோயிலை அடையலாம். ரயில் மார்க்கமாக செல்வதென்றால், ஜல்கான் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து கார் மூலமோ, பேருந்து மூலமோ எல்லோராவுக்கு செல்லலாம். செலவு: ரூ.3000 - ரூ. 5000 / ஒரு நபருக்கு.


- சாந்த குமாரி சிவகடாட்சம்


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X