Advertisement
19. எந்த ஊரு... எப்படி வந்துச்சு பேரு...?
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

ஊர் என்றிருந்தால் அதற்கொரு பேர் இருக்கும்; அதற்கொரு கதையும் இருக்கும்; வாழ்க்கையின் நெருக்கடிகளில் உதை பட்டுத் தவிக்கும் நமக்கு அந்தக்கதையை தெரிந்து கொள்ள ஏது நேரம்? கோவை தினமான இன்று, இங்குள்ள ஒவ்வொரு ஊரின் பெயர்க்காரணத்தையும் நீங்கள் அறிந்து கொள்ள...
ஒப்பனை இல்லாத வீதி!: யானைக்கு யர்ரம்...குதிரைக்கு குர்ரம்; நம்மவர்களின் கற்பனைத்திறன் அப்படி. ஒப்பணக் கலைஞர்கள் குடியிருந்த வீதிதான், ஒப்பணக்கார வீதி என்று யாரோ, எப்போதோ கிளப்பி விட்ட கற்பனை, இன்னும் இங்கே உலாவிக்கொண்டிருக்கிறது. ஒப்பனைக் கலைஞர்களுக்கும் ஒப்பணக்கார வீதிக்கும் தொடர்பு உண்டா என்று கேட்டால், இல்லை என்கிறது வரலாற்றுச்சான்று. விஜயநகர பேரரசில் சேனைகளில் வேலை பார்த்த பலிஜா சமூகத்தினர் பணம் ஒப்புவிக்கும் (அட அதுதாங்க பட்டுவாடா) பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள்தான் இந்த வீதியின் பெயருக்கு காரணமான ஒப்பணக்காரர்கள். விஜயநகர பேரரசின் சார்பில் நாயக்கர்கள் இம்மண்ணை ஆண்ட போது, ஒப்பணக்காரர்கள் என்றழைக்கப்பட்ட பலிஜா சமூகத்தினர், இப்பகுதியில் குடியேறினர். அதனால்தான் இது ஒப்பணக்காரத்தெரு ஆனது.
ஆர்.எஸ்.ன்னா யாரு?: 1903ல் கோவையில் வேகமாகப் பரவிய பிளேக் நோயால் ஏராளமான உயிர்பலிகள் நிகழ்ந்தன. எண்ணற்றோர் தங்கள் இருப்பிடங்களை காலி செய்து இடம் மாறினர். மேலும், மக்கள் நெருக்கம் மிகுந்த நகரில் சுகாதாரக் குறைபாடுகள் அதிகம் இருந்து. என்வே நகரை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போது மேட்டுப்பாளையம் ரோடு மற்றும் தடாகம் ரோட்டுக்கு இடையே இருந்த பல நூறு ஏக்கர் நிலத்தை வாங்கிய நகரசபை நிர்வாகம் அதை மனைகளாகப் பிரித்தது. பின் அப்பகுதிக்கு கோவை நகராட்சி மன்றத் தலைவராக இருந்த இரத்தினசபாபதி முதலியாரின் பெயர் வைக்கப்பட்டது. எம்.ஜி.ராமச்சந்திரன் என்ற பெயர் சுருங்கி எப்படி எம்.ஜி.ஆர். ஆனதோ, அதேபோல ரத்தின சபாபதிபுரம் என்னும் பெயர் சுருங்கி ஆர்.எஸ்.புரம் என்று புழக்கத்தில் இருக்கிறது. இன்றைய ஆர்.எஸ்.புரம், ராஜஸ்தான் சேட்டுகள் அதிகம் வசிக்கும் பகுதியாக மாறிவிட்டது.
அதென்ன...சபர்பன்?: பிளேக் நோய் காரணமாக நகரம் விரிவாக்கப்பட்ட போது, ஆர்.எஸ்.புரம், கெம்பட்டி காலனி, தேவாங்கப் பேட்டை உள்ளிட்ட புற நகரங்கள் உருவாக்கப்பட்டன. அந்த நாளில் பிராமணர்களுக்காக உருவாக்கப்பட்ட ராம்நகரும் கூட ஒரு புறநகரமே. அந்த புறநகரில் துவக்கப்பட்டதால் இப்பள்ளி சப்-அர்பன் பள்ளி என்று அழைக்கப்பட்டது; அது மருவி சபர்பன் பள்ளியாயிற்று. இன்றைக்கு கோவை நகரின் பிரதான பகுதியில் இருந்தாலும் கூட, அதே பெயரே நிலைத்து விட்டது.
இது யாரோட பேட்டை?: கன்னடம் மற்றும் தெலுங்கில் "சுக்கிர வராம்' என்றால் வெள்ளிக்கிழமை என்று பொருள். கடைகள் நிறைந்த வியாபாரப் பகுதியை "பேட்டை' என்பார்கள். சுக்கிரவார்பேட்டைக்கு ஏன் அந்த பெயர் வந்ததென்று இப்போது புரிந்திருக்குமே? ஆம், அன்றைய நாளில் வெள்ளிக் கிழமை தோறும் சந்தை கூடிய இடத்துக்கு பெயர்தான் சுக்கிரவார் பேட்டை. தேவாங்க செட்டியார்கள் அதிகம் வசித்த பகுதியில் நெசவுத் தொழிலும் புகழ்பெற்று விளங்கியதால் தேவாங்கப் பேட்டை ஆயிற்று.
காடுகள் சூழ்ந்த ஊர்...காட்டூர்!: அவினாசி ரோடு மேம்பாலம் முதல் வடகோவை சிந்தாமணி வரையில் முன்பொரு காலத்தில் பனங்காட்டுக் குளம் என்ற குளம் இருந்தது. அந்த குளத்தில் தேங்கும் மழைநீர், பாசனம், கால்நடைகளுக்கான குடிநீர், நிலத்தடி நீர் மேம்பாடுக்கு பயன்பட்டது. நாளடைவில் படிப்படியாக அக்குளம் அழிய, குளமிருந்த இடத்தில் பனை மரங்கள் வளர்க்கப்பட்டன.நாட்கள் செல்லச் செல்ல பனை மரங்கள் நிறைந்த காடாக மாறியதால், குள்ளநரி, உடும்பு, கீரி உள்ளிட்ட வனவிலங்குகளின் வசிப்பிடமாக உருவெடுத்தது. அதனால், அப்பகுதிக்குச் செல்லவே மக்கள் அஞ்சினர். 1906ல் மேட்டுப்பாளைத்துக்கு அமைக்கப்பட்ட ரயில் பாதை, மக்களின் அந்த அச்சத்தை போக்கியது; மக்கள் நடமாட்டம் அதிகரித்தது.அதைத் தொடர்ந்து, நுங்கு போடுதல் உள்ளிட்ட பனை சார் தொழில்கள் அப்பகுதியில் மேம்பட்டன. பனை மரங்கள் அழிக்கப்பட்டு விலை நிலங்களாக மாற்றப்பட்டன. அப்படி உருவான ஊர்தான் பனங்காட்டூர். எந்த பெயரையும் சுருக்கி அழைத்தே பழக்கப்பட்ட நமது நாவுகள், பின்னாளில் பனங்காட்டூரை காட்டூர் என்று சுருக்கி அழைக்கத் துவங்கின.
பனங்காட்டு நரியில்லை...ஆஸ்பத்திரி!: இன்றைய புரூக் பீல்ட்ஸ் ரோட்டில் இருக்கும் சீதாலட்சுமி மகப்பேறு மருத்துவமனையை பனங்காட்டு ஆஸ்பத்திரி என்று சொன்னால்தான் நம்மூர் பெருசுகள் பலருக்கும் புரியும். பனங்காடு அழிக்கப்பட்ட பனங்காட்டூரில் அமைக்கப்பட்டதால் அந்த மருத்துவமனைக்கு பனங்காட்டு ஆஸ்பத்திரி என்று பெயர் வந்தது.
மாதேராஜா...பராக் பராக்!: மாதேராஜா மஹாலைத் தெரியுமா உங்களுக்கு? இன்றைக்கு, ஆசிரியப் பயிற்சி பள்ளியும், பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் இயங்கும் கட்டடம்தான் அன்றைய மாதேராஜா மஹால். மைசூர் அரசின் அதிகாரியான அந்த மாதேராஜா, அந்த வீதியில் குடியிருந்து ஆட்சி செலுத்தியதால்தான் இந்த வீதிக்கு இராஜவீதி என்று பெயர். இன்றைக்கும் செல்வம் செழிக்கும் நகைக்கடைகளின் ராஜ்யமே, இந்த வீதியில்தான் விரிந்து கிடக்கிறது. ராஜா வருகிறார் பராக்....பராக்...என்று முழங்கிய வீதியிலே, இன்றைக்கு "பராக்கு' பார்க்கவே முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல், விழி பிதுங்க வைக்கிறது.
ஒரு ஹாலுக்குள்ளே...!: சூரியன் மறையாத பேரரசு என்று அழைக்கப்படுகிற பிரிட்டீஷ் பேரரசில் விக்டோரியா ராணி பதவியேற்று 50 ஆண்டுகள் ஆனதை நினைவூட்டும் வகையில் 1887ல் கோவை நகராட்சியின் மையப்பகுதியில் நகர மண்டபம் ஒன்று கட்டப்பட்டது. 1892ல் திறக்கப்பட்ட அந்த நகர மண்டபம்தான், இன்றைக்கு நமது மாநகரத்தந்தையும், 100 மாமன்ற உறுப்பினர்களும் கூடி, நகரின் வளர்ச்சியைப் பற்றி விவாதிக்கும் (!?) மாமன்றம். அது இருக்கும் இடம்தான் டவுன்ஹால்.
திப்பு செஞ்ச தப்பு!: லாங் லாங் எகோ....டவுன்ஹாலுக்கு பின்புறம் கோட்டை ஒன்று இருந்தது. பிரிட்டீஷ் மற்றும் மைசூர் படைகளுக்கு இடையே நடந்த யுத்தத்தில் சிக்கி அந்தக் கோட்டை சின்னாபின்னமானது. 1972ல் திப்புவின் உத்தரவின் பேரில் இந்த கோட்டை தரைமட்டமாக்கப்பட்டது. அந்த கோட்டை இருந்த இடம்தான் இன்றைய கோட்டை மேடு.
சின்ன கடை...பெரிய கடை!: கடைவீதிகள் இல்லாத ஊர்கள் உண்டா? ஆனாலும், நம்மூரில்தான் இருக்கிறது, பெரிய கடைவீதி, சின்ன கடைவீதி என்று இரண்டு கடைவீதிகள். சுக்கிரவார் பேட்டை சவுடாம்பிகை கோவில் அருகிலு<ள்ள கடைகளுக்கு சின்னக்கடை வீதி என்று பெயர்; தெலுங்கு பேசும் தேவாங்க செட்டியார் மக்கள் இதை "சின்னங்கிடி வீதி' என்று அழைத்தனர். தமிழ் பேசுவோர், "சின்னகடை வீதி' என்றனர். சின்னக்கடைவீதிக்குப் பக்கத்திலே பெரிதாக ஒரு கடை வீதி உருவானால், அதற்கு என்ன பெயர் வைக்க முடியும். அதுதானுங்கோ பெரிய கடை வீதி.


AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்