Real Story- Governer Narasimhan | கவர்னர் நரசிம்மன் சாய்பாபாவின் பக்தரான கதை- எல்.முருகராஜ்| Dinamalar

கவர்னர் நரசிம்மன் சாய்பாபாவின் பக்தரான கதை- எல்.முருகராஜ்

Added : ஏப் 28, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

சத்ய சாய்பாபா ஸித்தியடைந்து ஒராண்டு நிறைவானதை, அடுத்து புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபா சமாதியில் மகா ஆராதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து கடந்த 23,24,25-4-12 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு தங்களுக்கு சாய்பாபாவுடன் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அவர்களில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, சாய்பாபா பற்றிய புத்தகத்தை வெளியிட்டு பேசிய ஆந்திரா மாநில கவர்னர் நரசிம்மன் பேச்சு பலரையும் கவர்ந்தது.உயர்ந்த பதவி என்பதால் சம்பிரதாயமான பேச்சு தயாரிக்கப்பட்டு, அவர் பேச இருந்து மேடையிலும் (போர்டியம்) வைக்கப்பட்டது. ஆனால் அந்த தயாரிக்கப்பட்ட பேச்சை தொடக்கூட செய்யாமல் தனது மனதில் இருந்து பேசத்துவங்கியவர் கொஞ்சம்,கொஞ்சமாக உணர்ச்சி மேலிட பேசினார். அவரது பேச்சிலிருந்து..


"இந்த புத்தகத்தை எழுதிய டாக்டர் வெங்கட்ராமன் ஒரு விஷயத்தை குறிப்பிட்டார். இந்த புத்தகத்தை நான் எழுதவில்லை, என்னுள் இருந்து எழுதியவர், எடிட் செய்தவர் எல்லாம் சாய்பாபாவே என்றார். அவருக்கு மட்டுமல்ல இங்கு இருப்பவர்களுக்கும் ஒரு கூடுதல் தகவல், இந்த புத்தகத்தை வெளியிடுவது நான் அல்ல, அதுவும் சாய்பாபாவேதான்'', என்று கூறியவர் புத்தகத்தை பிரித்து எடுத்து கொண்டுபோய் சாய்பாபாவின் சமாதி அருகே வைத்துவிட்டார். பின் தொடர்ந்து பேசுகையில்...


எனக்கும் சாய்பாபாவிற்குமான உறவு மிகவும் சுவராசியமானதாகும். நான் ஆந்திரா மாநில கவர்னரானதும் சாய்பாபா பார்த்து ஆசி பெற விரும்பினேன். எனது விருப்பத்தை புட்டபர்த்திக்கு தெரிவித்தேன். அவர்களும் ஒரு மாதம் கழித்து ஒரு நாளில் வரச் சொன்னார்கள். அந்த நாளும் வந்தது. ஆனால் அதற்கு முன்பே ஒரு செய்தி வந்தது, பாபா அன்றைய தினம் தங்களை சந்திக்கவில்லை என்பதே அந்த செய்தி. எனக்கு பயங்கர அதிர்ச்சி, இப்படிப்பட்ட பதிலை, தகவலை, செய்தியை நான் எதிர்பார்க்கவே இல்லை.


ஏன் என்னை பாபா சந்திக்கவில்லை என்று ஆஸ்ரமத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தேன், இதற்கான பதிலை பாபாவைத் தவிர வேறுயாரும் சொல்லமுடியாது என்று தெரிவித்து விட்டனர். நான் கவர்னர் என்ற சிந்தனையில் இருந்து யோசித்தவன் பிறகு என் நிலையை மாற்றி சாதாரண நரசிம்மனாக பாபாவை பார்க்கவிரும்பினேன். திரும்பவும் எனது விருப்பத்தை புட்டபர்த்தியில் தெரிவித்தேன், ஒரு நாள் எனக்கு ஒதுக்கப்பட்டது. அந்த நாளில் ஆஸ்ரமத்திற்கு வந்தேன். இதோ இந்த மேடையின் ஒரு ஒரத்தில் எனக்கு நாற்காலி போடப்பட்டது. பாபாவும் வந்தார், என்னைக்கடந்து சென்றார், ஆனால் கவனிக்காமல் சென்றார், பக்தர்களை பார்த்தார், பஜன் கேட்டார், ஆரத்தியும் முடிந்து அவரது அறைக்கு திரும்பிவிட்டார்.


என்னைவிட என் பக்கத்தில் இருந்தவர்களுக்கு இன்னும் அதிர்ச்சி, எனக்கோ என்ன செய்வது என்று தெரியாத நிலை, மிகவும் சஞ்சலப்பட்டு போனேன், இந்த நிலையில் திடீரென பாபா என்னை அழைப்பதாக கூறி அழைத்துச் சென்றனர். "கடந்த மாதம் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டதும், இப்போது பார்வையால் தவிர்கப்பட்டதும் ஏன்?,' என்பது உள்பட பல கேள்விகளுடன் அவரது அறைக்குள் நுழைந்த எனக்கு, அவரை அருகே பார்த்ததும் எல்லா கேள்விகளும் மறந்து போனது, அவரையே பார்த்துக்கொண்டு இருக்கிறேன், என்னையறியாமல் எனது கண்களில் இருந்து தாரை, தாரையாக கண்ணீர் வருகிறது, அவர் என் தலையில் கைவைத்து "உன்னால் நல்லதே நடக்கட்டும் ஒரு காலத்திலும் தப்பு செய்திடாதே' என்று கூறி அனுப்பிவைத்தார். அவரை பிரிய மனமில்லாமல், ஆனால் மனசு லேசான நிலையில், மகா ஆனந்தத்துடன் வெளியே வந்தேன், ஏதோ ஒரு சசந்தோஷம், நிறைவு என்னைச்சுற்றி இருந்தது, இதற்கு முன் இல்லாத அனுபவம் இது.


அதன் பிறகு ஒரு முறை எனக்கு ஒரு பெரிய பிரச்னை, கவர்னருக்கு என்ன பிரச்னை என்று கேட்காதீர்கள், நானும் ஒரு சாதாரண மனிதன்தானே ஆகவே எனக்கு ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு எதுவும் புலப்படாத நிலையில், எந்தவித முன்னேற்பாடு எதுவும் சொல்லாமல், செய்யாமல் நேரிடையாக புட்டபர்த்திக்கு சாதாரண பக்தனைப்போல வந்தேன், என்ன ஆச்சர்யம் உடனே என்னை பார்க்க வரச்சொன்னார், அவரிடம் எனது பிரச்னையை சொல்லவேயில்லை அவரே தெரிந்து கொண்டவர் போல உனக்கு ஒரு பிரச்னையும் வராது போய்வா என்று தலையில் கைவைத்து ஆசீர்வாதம் செய்து அனுப்பிவைத்தார். அந்த பிரச்னைக்கும் தீர்வு ஏற்பட்டது.


அதன் பிறகு அவர் மீதான அன்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போனது, தற்போதும் அவர் இங்கு இருப்பதாக உணர்கிறேன், அதனால்தான் அவரே புத்தகத்தை வெளியிட்டதாக கருதுகிறேன், நான் பிரசாந்தி நிலையத்தில் பாபாவிற்கு அடுத்தபடியாக மிகவும் நேசிப்பது, பாராட்டுவது எல்லாம் அவரது தொண்டர்களைத்தான். யாரும் யாரையும் இப்படி போ, இதைச் செய் என்று கட்டுப்படுத்தவில்லை, ஆனால் ராணுவ கட்டுப்பாட்டை மிஞ்சும் வகையில் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளும் பக்தர்களை, தொண்டர்களை இங்குதான் பார்க்கிறேன், அவர்களை மதிக்கிறேன், வணங்கி மகிழ்கிறேன் என்று பேசி முடித்ததும் எழுந்த கைதட்டல் அடங்க நீண்ட நேரமானது.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை