சென்னை: மெரீனா கடற்கரையில், சித்த மருத்துவக் கல்லூரியின் சார்பாக நேற்று, மூலிகை உணவுத் திருவிழா நடந்தது.சென்னைவாசிகளிடையே மூலிகை உணவு முறைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, சித்த மருத்துவக் கல்லூரியின் சார்பாக மெரீனாவில், மூலிகை உணவு திருவிழா நடந்தது.மேயர் சைதை துரைசாமி, விழாவை துவக்கிவைத்தார். சர்க்கரை நோய், உடல் பருமன் முதலான நோய்களுக்கு மூலிகை கசாயம் வழங்கினர். சர்க்கரை நோய், முடி உதிர்தல், முகப்பரு, மூட்டுவலி, உடல்பருமன், பன்றிக்காய்ச்சல் முதலான நோய்கள் வராமல் தடுப்பது குறித்து இலவச ஆலோசனை முகாம் நடந்தது.சித்த மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், ஆலோசனைகளை வழங்கினர். மூலிகை உணவுத் திருவிழாவை முன்னிட்டு, உளுத்தங்களி, வரகரிசி பொங்கல், சாமை அரிசி கொழுக்கட்டை, இதிரை வாலி உப்புமா, கம்பு தோசை, சோளதோசை, கொள்ளு தோசை, கருப்பட்டி தோசை, தூதுவளை தோசை, முடக்கத்தான் தோசை, அமுக்கரா சப்பாத்தி, சரக்கொன்றை சப்பாத்தி, மணத்தக்காளி சப்பாத்தி, ஆவாரம்பூ சப்பாத்தி, பிரண்டை துவையல், பனங்கருப்பட்டி பால்கோவா போன்றவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.காலை 7 மணிக்கு துவங்கிய திருவிழா, நண்பகல் 11 மணி வரை நடந்தது. மீண்டும், மாலை 4 மணிக்கு துவங்கி, இரவு 10 மணி வரை நடந்தது. இந்த மூலிகை திருவிழா, இன்றும், நாளையும் விவேகானந்தர் இல்லத்திற்கு எதிரே நடக்கும்.