delhi ushh... | காங்கிரசை மிஞ்சும் பா.ஜ.,| Dinamalar

காங்கிரசை மிஞ்சும் பா.ஜ.,

Added : மே 13, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
காங்கிரசை மிஞ்சும் பா.ஜ.,

தமிழக காங்கிரசில் தான், கோஷ்டி பூசல்கள் அதிகம் என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு, ஒரு அதிர்ச்சி. இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் நிலையில் உள்ளது, பிரபல எதிர்க்கட்சியான பா.ஜ., கட்சி. "எங்கள் கட்சிக்குள் நடக்கும் விவகாரங்களை, வெளியே சொன் னால் வெட்கக்கேடு' என்று நொந்து போய் சொல்கின்றனர், பா.ஜ., சீனியர் எம்.பி.,க்கள். பா.ஜ.,விற்குள், ஒன்று இரண்டு அல்ல. பல கோஷ்டிகள் இயங்குகின்றன. அத்வானி, கட்காரி, ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் என்று, பல கோஷ்டிகள். இது போக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, எதிலும் சேராமல் ரஜினி ஸ்டைல் போல, தன்னந் தனியாக உள்ளார். இப்படி, அனைத்து கோஷ்டிகளும் தனி தீவுகளாக உள்ளனர். இதில், அதிகம் சண்டையில் ஈடுபடுவது அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ். அருண், ராஜ்ய சபாவில் பா.ஜ., தலைவர், சுஷ்மா லோக்சபாவில் பா.ஜ., தலைவர். 2014 தேர்தலில், பா.ஜ., தரப்பிலிருந்து தங்களை பிரதமர் வேட்பாளராக, கட்சி அறிவிக்க வேண்டும் என்று, இருவருமே விரும்புகின்றனர். இதனால், ஒருவரை ஒருவர் வேவு பார்க்கும் நிலைக்கு வந்துவிட்டனர். அருண் ஜெட்லியை, யார் பார்க்கின்றனர். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது குறித்து, சுஷ்மா வேவு பார்க்கிறார். அதே போல, சுஷ்மா இடத்தில் என்ன நடக்கிறது எந்த பா.ஜ., தலைவர்கள் அங்கே செல்கின்றனர் என்பதை அருண், தெரிந்து வைத்துள்ளார். சுஷ்மாவை சந்தித்துவிட்டு, ஒரு பா.ஜ., தலைவர் அருண் ஜெட்லியை சந்தித்தால், அவருடைய கதி அதோ கதிதான். சுஷ்மாவிடம் என்ன பேசினீர்கள் என்று ஆரம்பிப்பதோடு, மரியாதையும் குறைவாகத்தான் கிடைக்கிறதாம். "காங்கிரசிலிருந்து மாறுபட்ட கட்சி என்று மார் தட்டிக் கொள்கிறோம். எங்கள் நிலையோ, படுமோசம் என்கின்றனர்' பா.ஜ., எம்.பி.,க்கள். "நம் கட்சியில் துக்க ஆத்மாக்கள் நிறைய உள்ளன. பகவத் கீதையைப் போல, பலனை எதிர்பாராமல் வேலை செய்யுங்கள். உங்கள் கர்ம வினையை பொறுத்துதான், எல்லாம் நடக்கும்' என்று உட்கட்சி கூட்டத்தில் சொன்னார் பா.ஜ., தலைவர் கட்காரி.


ஐ.பி.எல்., பாஸ் படும் பாடு: இந்தியா முழுவதும், தற்போது ஐ.பி.எல்., கிரிக்கெட் ஜூரம் படு தீவிரமாக உள்ளது. "டிவி'யில் பார்ப்பவர்களுக்கு தூக்கம் கெட்டு, மறுநாள் அலுவலகத்தில் தூங்கி வழிய வேண்டியுள்ளது. டில்லியில் உள்ள அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இலவச பாஸ்களுக்கு அலைகின்றனர். ஐ.பி.எல்., கமிட்டிக்கு தலைவர் காங்கிரசை சார்ந்த மத்திய அமைச்சர் ராஜிவ் சுக்லா. டில்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பா.ஜ., தலைவர் அருண் ஜெட்லியும், ஐ.பி.எல்., கிரிக்கெட் விவகாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார். எம்.பி.,க்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என, பலரும் சுக்லா, ஜெட்லி இருவருக்கும் போன் செய்து பாஸ்க்காக காத்திருக்கின்றனர். போதாக் குறைக்கு, நீதிபதிகளும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளனர். வழக்கமாக, போனிலே பேசக் கூட தயங்கும் நீதிபதிகள் கிரிக்கெட் இலவச பாஸ்க்காக, பல நிமிடங்கள் போனில் காத்திருக்கின்றனர். சில அமைச்சர்களும், அதிகாரிகளும் முதலில் சுக்லாவிடம் பாஸ் வாங்கிக் கொண்டு, பிறகு அருண் ஜெட்லிக்கும் போன் செய்து, அங்கும் பாஸ் வாங்கிக் கொள்கின்றனர். இந்த விஷயம், இருவருக்கும் தெரிய வந்ததும் உஷாராகிவிட்டனர்.


தாய் பாசம்: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில், பலத்த எதிர்பார்ப்புடன் போட்டியிட்ட காங்கிரஸ், படு தோல்வியை சந்தித்தது. 2009 பார்லிமென்ட் தேர்தலில், 22 லோக்சபா தொகுதிகளைக் கைப்பற்றிய காங்கிரஸ், வெறும் 29 சட்டசபை தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. தோல்விக்கான காரணங்களை ஆராய, அந்தோணி தலைமையில் குழுவை அமைத்தார் சோனியா. அந்தோணியும், தன் அறிக்கையை சோனியாவிடம் கொடுத்துவிட்டார். சிறுபான்மையினருக்கு சாதகமாக, பல அமைச்சர்கள் உ.பி., பிரசாரத்தில் பேசியதால் தான் தோல்வி ஏற்பட்டது என்று சொன்ன அந்தோணி, பல குறைகளை சுட்டி காட்டினார். ஆனால், ஒரு முக்கியமான விஷயத்தில் அவர் மவுனமாகி விட்டார். உ.பி., தேர்தலில், ராகுல் தலைமையில் காங்கிரஸ் படு தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டது. ராகுல் தலைமையைப் பற்றி, அந்தோணி அறிக்கை வாயைத் திறக்கவில்லை. சோனியாவும், அந்த அறிக்கையை அப்படியே வாங்கி பெட்டிக்குள் மூடி வைத்துவிட்டார். அந்தோணி அறிக்கை, கட்சிக்குள் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்த, சீனியர் காங்கிரஸ் தலைவர்களுக்கு பலத்த ஏமாற்றம். "இனிமேல், எதுவும் நடக்கப் போவதில்லை. தாய் பாசம் சோனியாவின் கண்ணை மறைத்துவிட்டது. நாங்களும் வழக்கம் போல, எங்கள் வேலையைப் பார்க்கப் போக வேண்டியது தான்' என்று வருத்தப்படுகின்றனர், உ.பி., காங்கிரசார்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை