சென்னை: ""மோனோ ரயில் திட்டத்தை விட, மெட்ரோ ரயில் திட்டம் தான் சிறந்தது என, டெல்லி மெட்ரோ ரயில் திட்ட ஆலோசகர் ஸ்ரீதரன் போன்றோர் தெரிவித்தும், அதை ஏற்காமல் மோனோ ரயில் திட்டத்தை கொண்டு வருகின்றனர். இந்த ஆட்சியாளர்கள், யார் சொன்னாலும் கேட்க மாட்டார்கள் என்பதற்கு, இது உதாரணம்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள் ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையில், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, மோனோ ரயில் நிலையங்கள் அமைப்பது இறுதி செய்யப்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட, மெட்ரோ ரயில் திட்டத்தை ஏற்க முடியாமல், மோனோ ரயில் திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். மோனோ ரயில் திட்டத்தை விட, மெட்ரோ ரயில் திட்டம் தான் சிறந்தது என, டெல்லி மெட்ரோ ரயில் திட்ட ஆலோசகர் ஸ்ரீதரன் போன்றோர் தெரிவித்தும், அதை ஏற்காமல் மோனோ ரயில் திட்டத்தை கொண்டு வருகின்றனர். இந்த ஆட்சியாளர்கள், யார் சொன்னாலும் கேட்க மாட்டார்கள் என்பதற்கு, இது உதாரணம்.
எங்கே போய் முடியுமோ? மறைந்த பத்திரிகையாளர் சின்னகுத்தூசி நினைவு அறக்கட்டளை சார்பில், கட்டுரையாளர்களுக்கு விருது வழங்கும் விழாவுக்கு, தேவநேய பாவாணர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு அனுமதி அளித்த நூலகத்துறை, திடீரென்று அனுமதியை ரத்து செய்துள்ளது. இதை எதிர்த்து, வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், நூலகத் துறையினர் நீதிமன்ற உத்தரவை ஏற்காமல், விழா ஏற்பாட்டாளர்களை அரங்கிலிருந்து வெளியேற்றி, நீதிமன்ற அவமதிப்பைச் செய்துள்ளனர். கூடங்குளம் அருகே, இரு குழுவினருக்கும் இடையே, வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. இந்த செயல் எங்குபோய் முடியுமோ தெரியவில்லை.
சாதனைக்கு சான்று: பழுதடைந்த மின் இணைப்புப் பெட்டிகளை சீர் செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு பதில் அளிக்க மின் வாரியத்துக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மின் வாரிய அதிகாரிகள் பதில் அளிக்கவில்லை. இதனால், மின் வாரிய தலைவருக்கு உயர் நீதிமன்றம், 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. வாரியத்தின் சாதனைக்கு இதுவே சான்று. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.