ஒரு பக்கம் மனிதன் தான் வாழும் சூழ்நிலையின் வசதியை அதிகரித்துக்கொண்டே போகிறான்
இன்னோரு பக்கம் விலங்கிலும் கீழான நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறான்
கீழான நிலை என்றால்...கழிப்பறைக்குள் நிர்வாணமாய் வாழ்ந்துகொண்டு இருக்கிறான்
அதிர்ச்சியாக இருக்கிறதா.
இது ஏதோ ஆப்பிரிக்காவிலோ,தான்சானியாவிலோ அல்ல
நமது தமிழகத்தில் மஞ்சளுக்கு பெயர் பெற்ற ஈரோட்டில்தான்
ஈரோட்டில் இருந்து கரூர் போகும் ரோட்டில் பாரதிநகர் என்ற இடத்தில் இருக்கிறது அந்த இல்லம்
இல்லம் தனித்தனி அறைகளைக் கொண்டுள்ளது.இதில் ஒரு அறை திறந்த நிலையிலான கழிப்பறையைக் கொண்டுள்ளது அதில் 15 பேர் வரைதங்கவைக்கப்பட்டுள்ளனர், தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது தவறு அடைத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இதில் சிலர் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்,அவர்கள் ஆடைகள் எதுவுமின்றி காணப்படுகின்றனர்,மற்றவர்கள் குடும்பத்தாரால் விரட்டப்பட்டு இங்கே வந்தவர்கள்,ஆதரவின்றி ரோட்டில் சுற்றி திரிந்து, பொதுமக்கள் புகாரின் பேரில் போலீசாரால் கொண்டுவந்து விடப்பட்டவர்கள்,என பலதரப்பட்டவர்கள் உள்ளனர்,அனைவருமே மொட்டையடிக்கப்பட்டு உள்ளனர்.
அந்த அறைக்குள்ளேயே மலம் கழித்து,அங்கேயே சாப்பிட்டு,அங்கேயே தூங்கி என்று ஒரு நரக வாழ்க்கை வாழ்கின்றனர்.இல்லத்திற்கு வெளியே வந்தால் ரோட்டில் வாகனத்தில் அடிபட்டு இறந்துவிடுவார்கள் என்று சொல்லி பூட்டு போட்டு பூட்டியே வைத்துள்ளனர்,ரேஷன் அரிசி சாப்பாடு கொடுக்கும் போது மட்டும் அறையை திறந்து சாப்பாடு தண்ணீரை வைத்துவிட்டு வந்துவிடுவார்கள். மற்றபடி வாரத்திற்கோ ஒரு முறையோ அல்லது மாதத்திற்கு ஒரு முறையோ அறையை திறந்து வெளியே கூட்டிவந்து குளிக்கவைப்பது உண்டாம்.
அறையை சுத்தம் செய்து பல நாளானதால் அந்த பக்கமே போகமுடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது.யாரும் வாயைத்திறந்து பேசவும் பயப்படுகிறார்கள் பலரது உடலில் உள்ள தழும்புகளும்,காயங்களுமே அவர்கள் பயப்படுவதற்கான காரணத்தை நமக்கு விளக்குகிறது.
போலீசார் தாங்கள் பிடிக்கும் சிலரை "தர்மத்திற்கு' கொண்டுவந்து விடுவதால் அவர்களும் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்.பொதுமக்களிடம் இருந்து நன்கொடை என்ற பெயரில் கிடைக்கும் அபரிமிதமான வருமானத்திற்கு ஆசைப்பட்டு தனியாரால் நடத்தப்படும் இந்த இல்லத்தை உடனடியாக தடை செய்யவேண்டும்., மனிதர்களை மகா கேவலமாக அடைத்து வைத்திருக்கும் இந்த அருவருப்பான சிறைக்கூடத்தில் உள்ளவர்களை மனநல ஆஸ்பத்திரிக்கும்,மற்றவர்களை அரசு நடத்தும் சுகாதராமான இல்லங்களுக்கும் அனுப்பிவைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மிகவும் வேதனையான மனதோடு அந்த இல்லத்தில் உள்ளவர்களுக்கு விடிவுகாலம் கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் திரும்பினோம்,சொல்லமறந்துவிட்டோமே அந்த இல்லத்திற்கு பெயர் "அன்பு இல்லம்'.