Eurozone contagion a major worry for India: Montek | சர்வதேச தலைவர்களை சந்திக்கிறார் பிரதமர் -இல. ஆதிமூலம் - | Dinamalar
Advertisement
சர்வதேச தலைவர்களை சந்திக்கிறார் பிரதமர் - இல. ஆதிமூலம் -
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

லாஸ் கபோஸ் (மெக்சிகோ): மெக்சிகோவிலுள்ள லாஸ் கபோஸ் நகரில், நடைபெற்று வரும் 7வது ஜி-20 உச்சி மாநாட்டில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், பலநாட்டு அதிபர்களைச் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

பொருளாதாரத் தள்ளாட்டம் : உலகின் ஒட்டுமொத்த உற்பத்தியில், ஜி-20 நாடுகளின் பங்கு 80 சதவீதம். ஜூன் 19ல் நடக்கும் நிறைவு நாள் மாநாட்டில் ஜி-20 நாடுகளின் தீர்மானம் வெளியாகிறது. திட்டக் குழுத் துணைத்தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் அதிகாரிகள் இந்தியா சார்பில் கலந்து கொள்கிறார்கள். ஜி-20 அமைப்பில், இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்பட 19 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. தவிர, ஐரோப்பிய ஒன்றியமும் இதில் உறுப்பினர். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தள்ளாட்டத்தால், உலகின் பல நாடுகள் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஏற்கனவே உள்ளூர் பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிட மோசமாக இருக்கும் இந்நேரத்தில், ஐரோப்பியப் பொருளாதார நெருக்கடி, இந்தியாவிலும் நேரடியாகப் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.



ஒரு கடுமையான பொருளாதார நெருக்கடியை நோக்கி இந்தியா போய்க் கொண்டிருந்தாலும், கடந்த 2008ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை இந்தியா சமாளித்தது போல, இப்போதும் சமாளித்துவிடும்' என்று மாநாட்டில் பங்கேற்றுள்ள வல்லுனர்கள் கருதுகிறார்கள். இதற்கு ஜி-20 மாநாட்டில் வெளியிடப்படும் தீர்மானம் உதவியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


" கடனுக்காக கையேந்த வரவில்லை " - மான்டேக் சிங் அலுவாலியா : சீனாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதம் உள்ள நேரத்தில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக உள்ளது. எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சி இந்தியாவில் இல்லாவிட்டாலும் கூட, தற்போது ஐரோப்பிய நாடுகளின் மொத்த பொருளாதார வளர்ச்சி, பூஜியத்துக்கும் கீழே எதிர்மறையாகக் சென்றுள்ளதை ஒப்பிடும் போது, நம் பொருளாதாரம் அபாயகரமான நிலையில் இல்லை. சர்வதேச நாணய நிதியத்திடமோ (ஐ.எம்.எப்.) அல்லது உலக வங்கியிடமோ கூடுதலான கடனுக்காக கையேந்தி வரவில்லை என்று இங்கு நிருபர்களைச் சந்தித்த மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கும் கடுமையான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையிலும், பொருளாதாரச் சிக்கலிலிருந்து மீண்டு வெளியில் வர உதவி செய்யும் வகையிலும் ஜி-20 தீர்மானம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, இம்மாநாட்டில் உடனடியான பெரிய மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது. கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, ஐரோப்பிய நாடுகளை ஆட்டம் காண வைத்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள கிரீஸ் தேர்தல் முடிவில், அந்நாட்டின் பொருளாதாரச் சிக்கலைத் தீர்க்க உறுதியளித்த நியூ டெமாக்ரசி கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதன் தலைவர் , இந்த வெற்றி ஐரோப்பிய நாடுகள் அனைத்துக்குமானது என்றும், கிரீஸ் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறாது என்றும் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள இதுவே நல்ல ஆரம்பம். ஐரோப்பியப் பொருளாதாரம் மீளும் போது, இந்தியப் பொருளாதாரம் ஓரளவுக்காவது சீரடையும் என்று எதிர்பார்க்கலாம் என்று இங்கு வந்திருக்கும் வல்லுனர்கள் கூறுகின்றனர். மெக்சிகோ மற்றும் பிரான்ஸ் அதிபர்களையும், ஜெர்மன் சான்சலரையும், கனடா மற்றும் இங்கிலாந்து பிரதமர்களையும் தனித்தனியே சந்திக்கும் பிரதமர், ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரச் சிக்கல் குறித்தும் உலகப் பொருளாதாரம் சீரான நிலையை அடைவது குறித்தும் விவாதித்து வருகிறார்.

பாலைவனம், கடல் மற்றும் மலை சூழ்ந்த லாஸ் கபோஸ்: இந்தியாவிலிருந்து, பிராங்க்பர்ட் வழியாக 22 மணிநேரப்பயண முடிவில், பிரதமர் மன்மோகன் சிங், ஏர் இந்தியா 1 விமானத்தில் மெக்சிகோவிலிலுள்ள சான் ஜோஸ் விமான நிலையத்தை வந்தடைந்தார். மாநாட்டில் பங்கேற்கும் நாடுகளைச் சேர்ந்த அதிகாரப்பூர்வ விமானங்கள் அனைத்தும், அதன் பெயர்களுடன் 1 எனும் எண்ணுடனும் அந்தந்த நாட்டுக் கொடிகளுடனும் வரிசையாக நின்றிருந்தன. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பாலைவனம் சூழ்ந்த இடத்தில், சான் ஜோஸ் விமானத் தளம் அமைந்துள்ளது. 10-12 அடி உயரத்தில், ஆங்கில எழுத்தான யு வடிவில் வளர்ந்துள்ள கள்ளிச் செடிகள் இங்கு ஏராளம். இச்சிறிய விமானத் தளம், மாநாட்டில் பங்கேற்கும் அனைத்துத் தலைவர்களும் வந்திறங்கிய பெருமையைப் பெற்றுவிட்டது.

இந்தியாவைப் போலவே இங்கும் வெப்பநிலை : லாஸ் கபோஸ் நகர் முக்கியச் சுற்றுலாத்தளமாக விளங்குகிறது. பாலைவனம், மலை, கடல் சூழ்ந்த வித்தியாசமான ரம்மியமான சூழ்நிலையில் இந்நகர் அமைந்துள்ளது. அமெரிக்காவின் தென் மேற்கில் அமைந்துள்ளது மெக்சிகோ. இருநாடுகளுக்கு இடையே எல்லைக்கோடு சுமார் 3 ஆயிரத்து 153 கி.மீ., அளவிற்கு உள்ளது . இதுவே போதை மருந்து கடத்தலுக்கு வழிவகுக்கிறது. போதை கடத்தல் என்பது இங்கு சர்வசாதாரணம். இதனால் குற்றச்சம்பவங்கள் மெக்சிகோவில் அதிகம். லாஸ் கபோஸ்தான் மெக்சிகோவில் குற்றச் சம்பவங்கள் குறைந்த நகரம் என்பதால், இம்மாநாடு இங்கு நடத்த முடிவானது. இந்தியாவைப் போலவே இங்கும் வெப்பநிலை 35 டிகிரி செல்சியசுக்கும் மேல் இருக்கிறது. இந்தியாவிலிருந்து 50 பத்திரிகையாளர்கள் உள்பட சர்வதேச அளவில் சுமார் 600 பத்திரிகையாளர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

பிரதமர் மன்மோகன் மாநாட்டில் பேசுகையில், பொருளாதார சரிவிலிருந்து மீள வேண்டுமானால் கடுமையான முடிவுகள் எடுக்கபட வேண்டும்.‌ நிலவும் பொருளா‌‌தார சரிவை விரைவில் தீர்க்காவிட்டால் ‌‌மேலும் நிதிப்பிரச்சினைக‌ளுக்கு வழிவகுக்கும். தற்போதைய ஐரோப்பிய பொருளாதார சரிவுக்கு கிரீஸின் அரசியல் நடவடிக்கையே காரணம். ஐரோப்பிய பொருளாதார சரிவை தீர்க்க இந்தியா, தனது பங்களிப்பாக ஐ.எம்.எப்.,பிற்கு 10 பில்லியன் டாலர் அளிக்கும் . ‌ உள்நாட்டு முதலீடு மற்றும் அந்நிய முத‌லீடு வரைமுறை செய்யப்படும். இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.



Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
19-ஜூன்-201216:33:24 IST Report Abuse
g.s,rajan Indian economy is already in direstraits. Do not compare India with Europe. India is ruled and ruined by black money. Previously Prime minister Manmogan singh, Finance minister Pranab Mukarji also stated that Indian Economy is very very strong and it will not affect India but now every body points the finger on sliding European economy. It is quiet upsurd to tell this kind of himalayan lies. g.s.rajan,chennai.
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
19-ஜூன்-201208:00:00 IST Report Abuse
rajan ஒருத்தர ஒருத்தர் பார்த்து ஒரு பொருளாதார தும்மல் தும்மிகிட்டு வரவேண்டியது தான். ஏன்னா சளி ஐரோப்பாவில புடிசிருக்குல்ல.. அங்கெ நல்ல குளிர் அடிக்குது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்