Good bye to Garbage | குப்பைக்கு "குட்பை': மாத்தி யோசிக்குது கோவை மாநகராட்சி!| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (3)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

நகரங்களில் நாள்தோறும் குவிந்து வரும் குப்பைகள், இமாலய பிரச்னையாக உயர்ந்து, பயமுறுத்தி வரும் நிலையில்,கோவை மாநகராட்சியில் குப்பையில் இருந்து உரம் தயாரித்தும், மீதமுள்ள கழிவுகளை அறிவியல்சார் முறையில், பாதுகாப்பாக மண்ணில் புதைத்தும், தீர்வு கண்டு வருகின்றனர். மூடப்படும் குப்பை மேட்டில், சோலார் கலன் மற்றும் காற்றாலை அமைத்து, மின்சாரம் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, பள்ளிக்கரணை குப்பைக் கிடங்கு, தீ பற்றிக் கொண்ட பிரச்னை, மாநிலம் முழுவதும் புகைந்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும், தினமும் டன் கணக்கில் குவியும் குப்பைகளை, என்னதான் செய்வது என்பதுதான் பிரச்னை. சென்னைக்கு அடுத்தபடியாக கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற, நகரங்களில், தினமும் குவியும் 300-600 டன் குப்பை, சுற்றுச்சூழலுக்கும், மக்களின் சுகாதாரத்துக்கும், பெரும் அச்சுறுத்தல் ஆக மாறி வருகிறது. கோவையில், கடந்த பத்தாண்டுகளாக, சிறு மலைகளாக குவிக்கப்பட்டுள்ள குப்பைகளால், குடியிருப்புவாசிகள் நிம்மதி இழந்துள்ளனர். இப்பிரச்னைக்கு மெல்லத் தீர்வு காணத் துவங்கியுள்ளது கோவை மாநகராட்சி. மக்கும் குப்பை, மக்காத குப்பை என, இரண்டு வகைகளாக குப்பைகளை பிரித்து, உரம் தயாரித்து, பிற மாநகராட்சிகளுக்கு வழிகாட்டுகிறது. இதற்காக, தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது மாநகராட்சி. முன்பு 72 ஆக இருந்த வார்டுகளின் எண்ணிக்கை, இப்போது 100 ஆக உயர்ந்தபின், பிரச்னை இன்னும் தீவிரமாகியுள்ளது. நகரில் இருந்து, 15 கி.மீ., தொலைவில் உள்ள வெள்ளலூரில், 654 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தில், குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. 2003 முதல் 2006 வரை, சுமார் 3.36 லட்சம் கன மீட்டர் கொள்ளளவு உள்ள திடக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இந்த குப்பையை, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாமல், அறிவியல்சார் முறையில் மூடும் திட்டத்துக்கு, 5.52 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2006க்குப் பின், 2011 மார்ச் மாதம் வரை, கூடுதலாக 5.15 லட்சம் கன மீட்டர் திடக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இவற்றையும், அறிவியல்சார் முறையில் மூட திட்டமிட்டுள்ளது மாநகராட்சி. தினமும் குவியும் சுமார் 550-600 குப்பையை குவியலாக்கி, விஞ்ஞான முறையில் மூடும் பணி, தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டம்: ஜவகர்லால்நேரு நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்துக்கு, 96.51 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது மாநகராட்சி.
உரம் தயாரிப்பது எப்படி? "ஏரோபிக் பிராசஸ்' முறையில், குப்பையில் இருந்து உரம் தயாரிக்கப்படுகிறது. திட்டத்தின் முதல் கட்டமாக, நகரின் பல்வேறு பகுதிகளில், 1,840 லட்சம் ரூபாயில் நான்கு நவீன குப்பை மாற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வீடுகளில் தொட்டிகளில் சேகரிக்கப்படும் குப்பை, லாரிகளில் இங்கு கொண்டு வரப்படுகின்றன. எடை பார்க்கப்பட்ட பின், லாரி மூலம், வெள்ளலூரில் உள்ள குப்பைக் கிடங்குக்கு, கொண்டு செல்லப்படுகின்றன. இங்கு அமைக்கப்பட்டுள்ள, உரம் தயாரிப்பு பிளான்டின், கன்வேயரில் கொட்டப்படுகின்றன. கன்வேயரின் இருபுறமும் அமர்ந்துள்ள துப்புரவு தொழிலாளர்கள், கன்வேயர் பெல்ட்டில் குப்பை பயணித்துக் கொண்டிருக்கும் போதே, அதில் கலந்துள்ள பாலிதீன் பைகள், பாட்டில், தேங்காய் சிரட்டை, பால் கவர், பாய், படுக்கை, தலையணை, இரும்பு பொருட்கள் போன்றவற்றை அப்புறப்படுத்துகின்றனர். இதன் பின், "டிரோமெல்' எனும் பிரமாண்ட டிரம்மின் உள்ளே கழிவுகள் செல்கின்றன. 100 மி.மீ., அளவுக்கு கீழ் உள்ள பொருட்கள், டிரம்மின் துளைகள் வழியாக வடிகட்டப்படுகின்றன. இதன் பின், அடுத்த கன்வேயரில் கொட்டப்படும் குப்பைகள், இரண்டாவது டிரோமெல்லின் உள்ளே கொண்டு செல்லப்பட்டு, மீண்டும் சலிக்கப்படுகிறது. கன்வேயரின் கீழே சலித்து எடுக்கப்படும்

பொருட்களை, தொழிலாளர்கள் தனியாக சேகரிக்கின்றனர். மூன்று கட்டங்களாக சலிக்கப்படும் குப்பை, தண்ணீர் தெளித்து ஈரப்படுத்தப்படுகிறது. பின் லாரியில் ஏற்றிச்செல்லப்பட்டு, திறந்தவெளியில் குவிக்கப்படுகிறது. சுமார் 15 நாள் பதப்படுத்தப்பட்ட பின், மீண்டும் மூன்று கட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள, டிரோமெல்லில் சலிக்கப்படுகின்றன. இறுதியில், பவுடர் ஆக சேகரிக்கப்படும் உரம், பாலிதீன் பைகளில், "பேக்'செய்யப்பட்டு, விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இருபது ஆண்டுக்கு, இத்திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு, தனியார் நிறுவனம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆறு கட்டங்களில் சலிக்கப்படும், 600 டன் குப்பை, உரத்தை அகற்றியபின் 150 டன் (25 சதவீதம்) ஆக குறைக்கப்படுகிறது. "லேண்ட்பில்' முறையில், பாதுகாப்பான முறையில், பிரமாண்ட குழியில் நிரந்தரமாக புதைக்கப்படுகிறது.
பழைய குப்பைக்கு "கேப்பிங்': கடந்த 2007க்குப் பின், தினமும் சேகரிக்கப்படும் குப்பை, உரமாக மாற்றப்படும் நிலையில், 2003 முதல், மலைகளாக கொட்டிக் கிடக்கும், பழைய குப்பைதான், இப்பகுதி குடியிருப்புவாசிகளை பாடாய் படுத்தி வருகிறது. இதில் ஈரப்பதம் இல்லாததால், உரம் தயாரிக்க முடியாது. ஆனால், இந்த குப்பையை அகற்றவும், தீர்வு கண்டுள்ள மாநகராட்சி, "கேப்பிங்' எனும் முறைப்படி, இவற்றையும் சிறுக, சிறுக மண்போட்டு புதைத்து வருகிறது. இதனால், நிலத்தடி நீரின் தரம் கெடாமலிருக்க, தகுந்த நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது.
"சும்மா ஏமாற்று வேலை': இப்படி இரண்டு முறைகளில், குப்பையை அகற்றும் மாநகராட்சியின் திட்டங்கள், வெள்ளலூர் பகுதி மக்களுக்கு, திருப்தி அளிக்கவில்லை. பிளாஸ்டிக் குப்பைகள் பறந்து குடியிருப்பு பகுதிக்குள் வந்து குவிவது, உயர்த்தி கட்டப்பட்ட மதில் சுவர் வாயிலாக, ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு விட்டாலும், காற்றில் மிதந்து வரும், துர்நாற்றத்தை யாராலும் தடுக்க முடியவில்லை. வெள்ளலூர், கோணவாய்க்கால்பாளையம், மகாலிங்கபுரம், ஸ்ரீராம் நகர், அன்பு நகர் உள்ளிட்ட பகுதிகளில், நிலத்தடிநீர் மஞ்சள் கலராக மாறி விட்டதே காரணம். குப்பை தூசு கலந்து வரும் குடிநீரைதான், மக்கள் குடிக்கின்றனர்.மாநகராட்சி செயல்படுத்தி வரும் மேம்பாட்டு திட்டங்களை, "சுத்த ஏமாற்று வேலை' என, விமர்சிக்கிறார், "குறிச்சி, வெள்ளலூர் மாசு தடுப்புக்குழு' செயலாளர் மோகன்.
அவர் கூறியதாவது: குப்பையை குழிதோண்டி புதைக்கும் பணி, முறையாக நிறைவேற்றப்படுவதில்லை. மாசுக்கட்டுப்பாடு வாரிய விதிமுறைகளின்படி, குப்பைக் கிடங்குக்குள் கொண்டு வருவதற்கு முன், மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட வேண்டும். ஆனால், அப்படியே கொண்டு வந்து, "லேண்ட் பில்லிங்', "கேப்பிங்' என்ற பெயர்களில் புதைக்கின்றனர். இதனால், நிலத்தடி நீர் மாசுபடுகிறது. 600 டன் குப்பையில் 10 டன் மட்டுமே, உரமாக மாற்றப்படுகிறது. மீதமுள்ள குப்பை, அப்படியே குவிக்கப்பட்டு, பின் லேண்ட் பில்லிங் என்ற பெயரில் புதைக்கப்படுகிறது. கழிவுகளை புதைப்பதாக கூறினாலும், பத்தாண்டுகளாக பாழாகிப் போன நிலத்தடி நீருக்கு என்ன தீர்வு?. ஒவ்வொரு ஆட்சியிலும், ஏதாவது ஒரு நிறுவனத்தினர், ஏதாவது ஒரு புது திட்டத்துடன் வருகின்றனர். "டிரையல் அண்டு எர்ரர்' முறையில் திட்டத்தை, செயல்படுத்துகின்றனர். இது தொடர்பாக, பல்வேறு நாடுகள், மாநிலங்களுக்கு அரசு பணத்தில் அதிகாரிகள் "டூர்' அடிப்பதால், அரசின் கோடிக்கணக்கான பணம்தான் விரயமாகிறது. இன்னும் தீர்வு கிடைத்தபாடில்லை. மக்களின் மூச்சிரைப்பு, ஆஸ்துமா போன்ற நுரையீரல் கோளாறுகள் நின்றபாடில்லை. வெள்ளலூரில் குப்பை கொட்டுவதை, நிரந்தமாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி, மீண்டும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.
மாசு தடுப்புக்குழு தலைவர் அய்யாவு: மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும், "பிளான்ட்' அமைத்து, அந்தந்த மண்டலங்களில்

Advertisement

சேரும் குப்பைகளை, அங்கேயே தரம் பிரித்து, உரம் தயாரிக்கலாம். இதனால், குறிப்பிட்ட ஓரிடத்தில் மட்டும் குப்பை, மலையளவு குவியாது. உடனுக்குடன் உரமாக மாற்றப்பட்டு விடுவதால், தீ பரவி, புகையும் வெளிவராது. முதல்வர் இப்பிரச்னைக்கு நல்ல தீர்வு தருவார் என நம்பிக்கை உள்ளது, என்றார்.
பாலித்தீன் பை தடை: கமிஷனர் நிராகரிப்பு: மாநகராட்சியில் பாலித்தீன் பைக்கு தடை விதித்தால், பாதி பிரச்னை தீர்ந்து விடும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்து. ஆனால் "பாலித்தீன் பைகளுக்கு தடை விதிப்பது சாத்தியமில்லை' என்கிறார், மாநகராட்சி கமிஷனர் பொன்னுசாமி.குப்பைகளை அறிவியல்சார் முறையில் புல்மேட்டால் மூடியபின், அந்த இடத்தை மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப் போவதாக கூறுகிறார்.
மேலும் அவர் கூறியதாவது: மும்பைக்கு அடுத்தபடியாக, கோவையில்தான் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம், சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. பழைய குப்பைகள், 25 ஏக்கர் பரப்பளவுள்ள படகு போன்ற பிரமாண்ட பள்ளத்தில், 25 மீட்டர் உயரத்துக்கு கொட்டி மூடப்படும். களிமண், ஜியோ டெக்ஸ்டைல்ஸ், வலை, ஜல்லி கற்கள் ஆகியவற்றால், படிப்படியாக நிரப்பப்படும். கழிவுகளால் நிலத்தடி நீரின் தரம் பாதிக்கப்படாமல் தடுக்க, நிலத்தடி நீர் மட்டத்தில் இருந்து, இரண்டு மீட்டர் உயரே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஐ.ஐ.டி., பேராசிரியர் மனோஜ் தத்தா வடிவமைத்த திட்டம் இது. திட்டம் செயல்படுத்தப்படும் முறையை, ஐ.ஐ.டி., மற்றும் கோவை அரசு தொழில் நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த நிபுணர் குழுவினர் பார்வையிட்டு திருப்தி தெரிவித்துள்ளனர்.
மழை பெய்தால் என்ன செய்வது?: மழை பெய்யும்போது, குப்பையில் இருந்து நிலத்தடிக்கு, கழிவு நீர் கசிவதை
தடுக்க, சுற்றிலும் மேல்பகுதி மட்டும் துளைகள் கொண்ட குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. குப்பைகளில் இருந்து வெளியேறும் மீதேன் வாயுவை வெளியேற்ற, 38 குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. குழாய்களில் சேகரிக்கப்படும் கழிவு நீரும், வாயுவும் பாதுகாப்பாக வெளியேற்றப்படும். மேட்டின் மேற்பகுதியை புல்மேட்டால் மூடி, "சோலார் களன்கள்' அமைத்து, மின்சார உற்பத்தி செய்யும் திட்டம் உள்ளது. காற்று அதிகமாக உள்ளதால், காற்றாலைகள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம். உற்பத்தியாகும் மின்சாரத்தை மறு சுழற்சி செய்யும் பிளான்ட்டுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினால், "கார்பன் கிரெடிட்' கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இதற்கான பணிகள், தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளன. இவ்வாறு, பொன்னுசாமி கூறினார்.
காற்றில் மிதக்கும் நாற்றம்; வீட்டுக்குள் ஜெயில் வாசம்குப்பையால் ஏற்படும் பிரச்னைகளை கூறி குமுறுகின்றனர் வெள்ளலூர் பகுதி மக்கள்.வினிதா: நாத்தம் தாங்க முடியலீங்க. பலாப்பழ சீசன் டைம்ல, ஈ தொந்தரவு ஜாஸ்தியா இருக்கும். இதனால கதவு, ஜன்னல்களை திறந்து வச்சே, பல நாளாச்சுங்க. குப்பைத் தொட்டிய, வேற இடத்துக்கு மாத்தினா நல்லது.
லதா: பிளாஸ்டிக் குப்பைங்க பறந்து வீட்டுக்குள்ள வருது. மூச்சடைக்கிற ஸ்மெல்ல இன்னும் எத்தனை நாள்தான் இருக்கறதோ தெரியல. கொசு அதிகமா வர்றதால, அடிக்கடி உடம்புக்கு முடியறதில்லீங்க. புதுசா குடி வர்றவுங்க ஒரே மாசத்துல காலி பண்ணிட்டு போயிர்றாங்க. சொந்தமா வீடு கட்டிட்டதால வேற வழியில்லாம இருக்கோம்.
ஜெயமணி, செல்வி: அடிக்கடி உடம்புக்கு சுகமில்லாம போயிருதுங்க. காத்து சீசன்ல குப்பை தூசெல்லாம் வீட்டுக்குள்ளே வந்திரும். குழந்தைங்களுக்கு வீசிங் பிரச்னை வந்துருது. இதனால அவங்கள, ப்ரீயா வெளியே விளையாட விட முடியறதில்லீங்க. வீட்டையே ஜெயிலா மாத்திட்டோம். லீவுல வர்ற உறவு முறைங்க எப்படியும் நாலு நாள் படுத்து எந்திரிச்சுதான் போவாங்க. யாராவது தீ வச்சு விட்டுட்டா, புகை நெடியை சகிக்கவே முடியாது.
புகழேந்தி: அடிக்கடி உடம்பு சரியில்லாம போயிருது. லேடீசுக்கு மூட்டுவலி அதிகமா வருது. குப்பைகளை ஆழமா குழி தோண்டி புதைக்கலாம். அப்புறமா பிளாஸ்டிக் பயன்படுத்த மாநகராட்சி தடை விதிக்கணும். பிளாஸ்டிக்கை ஒழிச்சுட்டா பாதி பிரச்னை முடிஞ்சுரும்.- நமது சிறப்பு நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raju Perur Coimbatore - Coimbatore,இந்தியா
24-ஜூன்-201204:47:10 IST Report Abuse
Raju Perur Coimbatore நான் தினமும் அலுவலகம் முடித்து omni bus stand வழியாக தான் வரவேண்டும். அங்கு இருக்கும் குப்பை சேகரிக்கும் இடமே கடும் துர்நாற்றம் வீசும். உதாரணம் - குப்பய இறக்கிட்டு காலியா 50 அடி தூரம் போகும் லாரியிலிருந்து வீசும் பாருங்க ஸ்மெல், குடல புடுங்கிட்டு வாந்தி வரும்.காலி வண்டிக்கே இந்த கதினா புல் லோடு?
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
23-ஜூன்-201201:50:20 IST Report Abuse
மதுரை விருமாண்டி You must all see this Trash Inc: The Secret Life of Garbage - CNBC ... கூகுளாண்டவரின் உதவியை நாடுங்கள்... video(dot)cnbc(dot)com/gallery/?video=1620084176&play=1 இந்தியாவில், தமிழ்நாட்டில் குப்பை அள்ள இப்பொழுது இருக்கும் நடைமுறைகள், 1881 இல் நியூயார்க்கில் இருந்ததை விட மோசமாக இருப்பதைக் காணுங்கள்.. போயஸ் கார்டனில் குப்பை இல்லை, கொடநாட்டில் குப்பை இல்லை, கோட்டூர்புரத்தில் குப்பை இல்லை... மம்மியைப் பொறுத்த மட்டில் ஹெலிகாப்டரில் குப்பை பார்த்தால் போதும், சிங்கப்பூர் குப்பை அள்ளும் கம்பெனியிடம் கணிசமாக கமிஷன் வாங்கிக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டால் போதுமா ??
Rate this:
Share this comment
Cancel
shyam - ALLENTOWN PA,யூ.எஸ்.ஏ
19-ஜூன்-201217:22:41 IST Report Abuse
shyam நம்ம வீட்டு குப்பையும் ஏதோ ஒரு விதத்தில் நம்மவர்களை பாதிக்கிறது. அதனால் நாம் ஒவ்வொருவரும் குப்பையை முறையாக ( முடிந்தவரை குறைந்த அழவில் ) பயன்படுத்தினால் நம் மக்கள் துன்பத்திலிருண்து விடுபடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.