புதுடில்லி:""எனக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு தவறானது; நியாயமற்றது; சுய ஆதாயம் தேடும் செயல்; உள்நோக்கம் கொண்டது; தீய எண்ணத்துடன் சொல்லப்படுவது; பொறுப்பற்றது,'' என, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
அன்னா ஹசாரே அணியின் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு, பதில் அளித்த அவர் எழுதியுள்ள கடித விவரம் வருமாறு:கெட்ட நோக்கத்துடன், எனக்கு எதிராக, தவறான குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இதன்மூலம், உண்மைகள் மறைக்கப்படுகின்றன. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறியதன் மூலம், அன்னா ஹசாரே அணியினர், ஒழுக்க பண்புகளை மீறியுள்ளனர். எந்த விதமான பொறுப்பும் இல்லாமல்ல இந்தக் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
விசாரணையில், முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்படை ரகசியங்கள் கசிந்த வழக்கில், விமானப்படை அதிகாரி ஒருவரும், கடற்படை அதிகாரிகள் மூன்று பேரும், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இந்த விவகாரம் தொடர்பாக, அப்போது ராணுவ அமைச்சராக இருந்த நான், சி.பி.ஐ., விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளேன். அதனடிப்படையிலேயே, அபிஷேக் சர்மா உட்பட, சிலர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.
மற்ற அமைச்சர்களை விட பிரணாப் சிறந்தவர்: ஹசாரே: இது குறித்து சமூக சேவகர் அன்னா ஹசாரே கூறியதாவது: ஜனாதிபதி பதவிக்கு நேரடி தேர்தல் நடந்தால் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எளிதாக வெற்றி பெற்றிருப்பார். தற்போது மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள அமைச்சர்களில் பிரணாப் முகர்ஜி சிறந்தவர். பிரணாப் முகர்ஜி திறமையான அமைச்சர். மத்திய அரசின் பல்வேறு முக்கிய முடிவுகளில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. அவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார். மற்ற அமைச்சர்கள் போட்டியிட்டிருந்தால் அது ஏற்றுக்கொள்ள முடியாது என கூறினார்.