திருப்பூர் : பவானி ஆற்றின் குறுக்கே, கேரள அரசு அணை கட்டினால், திருப்பூருக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள, தமிழக வனப்பகுதியில், பவானி ஆறு உற்பத்தி ஆகிறது. நீலகிரியில் உற்பத்தி ஆகி, கேரள மாநிலம் வழியாக பாய்ந்து, மீண்டும் கோவை மாவட்டம் பில்லூர் அணைப் பகுதியில் தமிழகத்துக்குள் வந்து, காவிரி ஆற்றில் கலக்கிறது. கடந்த 2002ல் முக்காலி என்ற இடத்தில் அணை கட்டி, அந்த தண்ணீரை மன்னார்காட்டுக்கு திருப்ப, கேரள அரசு முடிவு செய்தது; அதற்காக கால்வாய் தோண்டும் பணியை துவக்கியது. மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைக்காததால், அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், அட்டப்பாடி என்ற இடத்தில், பவானி ஆற்றின் குறுக்கே, புதிதாக அணை கட்டி, தண்ணீரை திருப்ப, கேரள அரசு முயற்சிக்கிறது. இந்நடவடிக்கைக்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பில்லூர் அணையும், பவானி சாகர் அணையும், பவானி ஆற்று நீரை ஆதாரமாக கொண்டு கட்டப்பட்டுள்ளன. பில்லூர் அணை நீர், குடிநீராகவும், பவானி சாகர் அணை நீர், ஈரோடு மாவட்ட பாசனத்துக்கும் பயன்படுத்தப் படுகிறது. மேட்டுப்பாளையம், பவானி ஆற்றில் இருந்து திருப்பூர், அன்னூர், அவிநாசி மற்றும் வழியோர கிராமங்களுக்கு, 58 எம்.எல்.டி., (ஐந்து கோடியே 80 லட்சம் லிட்டர்) தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதில், திருப்பூர் மாநகராட்சிக்கு மட்டும், முதல் மற்றும் இரண்டாவது குடிநீர் திட்டத்தின் மூலம், 27.75 எம்.எல்.டி., தண்ணீர் எடுக்கப்படுகிறது. மூன்றாவது குடிநீர் திட்டமாக, காவிரி ஆறு பவானியில் இருந்து, 42 எம்.எல்.டி., தண்ணீர் எடுத்து, குழாய் மூலம் வினியோகிக்கப் படுகிறது. திருப்பூருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானி ஆற்றின் குறுக்கே, அட்டப்பாடியில் கேரளா புதிதாக அணை கட்டினால், நீர் வரத்து, முற்றிலும் குறைந்து விடும். இதனால் திருப்பூர், கோவை மாநகராட்சிகள், மேட்டுப்பாளையம் நகராட்சி, பெரியநாயக்கன் பாளையம், நரசிம்மநாயக்கன் பாளையம், சிறுமுகை, காரமடை ஆகிய பேரூராட்சிகளில், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது; மேலும், ஈரோடு மாவட்டத்தின் பாசனமும் பாதிக்கப்படும். எனவே, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.