sambavam news | செம்மரங்களை கடத்தும் பின்னணியில் பெரும்புள்ளிகள்: வனத்துறையில் பிடிபட்டவர்கள் ரகசிய தகவல்| Dinamalar

செம்மரங்களை கடத்தும் பின்னணியில் பெரும்புள்ளிகள்: வனத்துறையில் பிடிபட்டவர்கள் ரகசிய தகவல்

Added : ஜூன் 19, 2012
Advertisement
செம்மரங்களை கடத்தும் பின்னணியில் பெரும்புள்ளிகள்: வனத்துறையில் பிடிபட்டவர்கள் ரகசிய தகவல்

நகரி: திருமலை சேஷாசலம் காட்டுப் பகுதியிலிருந்து வெட்டிச் சாய்க்கப்பட்ட செம்மரக் கட்டைகளை தமிழகத்திற்கு கடத்தும் முயற்சியில் ஈடுபட்ட, 163 பேரை திருப்பதி வனத்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், அவர்களின் பின்னணியில் முக்கிய பெரும் புள்ளிகள் இருப்பது தெரியவந்துள்ளது.


தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை பகுதிகளைச் சேர்ந்த 300 பேர் கொண்ட செம்மரக் கடத்தல்காரர்கள், கடந்த, 16ம் தேதி நள்ளிரவுக்குப் பின், மூன்று பஸ்கள், இரண்டு கார்களில் செம்மரங்களை வெட்டும் ஆயுதங்களுடன் திருமலை காட்டுக்குள் நுழைய முயன்றனர். இத்தகவல் அப்பகுதியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. திருமலை காட்டுப் பகுதிக்கு அருகில் உள்ள சாமல என்ற இடத்தில் இரண்டு குழுக்களாகப் பிரிந்திருந்த கடத்தல்காரர்களில், 163 பேர் தமிழக போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த, இரண்டு பஸ்களிலும், ஒரு மினி பஸ்சிலும் பயணிகளைப் போன்று இந்த இடத்திற்கு வந்தனர். மற்றொரு குழுவினர் வேறு வழியாக காட்டுக்குள் நுழைந்துள்ளதாக, வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.


வனத்துறையினர் முற்றுகை: இதையடுத்து, வனத்துறையினர் திருப்பதி, ரங்கப்பேட்டை, சந்திரகிரி பகுதியில் உள்ள வனத்துறை அதிகாரிகளையும் உஷார்படுத்தி, பூதலப்பட்டு அடுத்த ரங்கம்பேட்டை அருகே காவலுக்கு நிறுத்தப்பட்டனர். அப்போது அந்த வழியாக, கடத்தல்காரர்கள் பயணம் செய்யும் பஸ்களும் வந்தன. அந்த பஸ்சை கண்ட வனத் துறையினர் முற்றுகையிட்டு, பஸ்சில் பயணம் செய்த கடத்தல்காரர்களுடன், தமிழக அரசுக்குச் சொந்தமான, இரு பஸ்களை பறிமுதல் செய்தனர். அப்போது பஸ்களை பின் தொடர்ந்து பாதுகாப்பாக, ஒரு ஸ்கார்பியோ காரும், தற்காலிக பதிவு எண்ணுடன் இருந்த "ஸ்விப்ட் டிசைனர்' காரும் வந்தது. சந்தேகமடைந்த வனத்துறை அதிகாரிகள், இரு கார்களின் டிரைவர்களையும் கைது செய்தனர்.


163 பேரிடம் விசாரணை: பின்னர் கார்களை சோதனை செய்தபோது, கடத்தல்காரர்கள் மரம் வெட்ட உபயோகப்படுத்தும் கோடரி, பெரிய கத்திகள் அதிக எண்ணிக்கையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதலான இரண்டு அரசு பஸ்கள், ஒரு மினி பஸ், இரு கார்கள் ஆகியவை வனத்துறை அதிகாரிகளின் பாதுகாப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 163 பேர் மீதும் வழக்குத் தொடரப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது. இவர்களின் பின்னணியில் உள்ள சில முக்கிய கடத்தல் புள்ளிகளின் விவரங்களும், இவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டுள்ளன. சித்தூர் மாவட்ட கலெக்டர் உதவியுடன் தமிழக- ஆந்திர எல்லைப் பகுதியில் செம்மரக்கட்டை கடத்தலைத் தடுக்க, பாதுகாப்பு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு உள்ளது என வனத்துறை அதிகாரி சக்கரபாணி தெரிவித்தார்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை