மதுரை : தென் மண்டல தபால் துறைத் தலைவர் பணியிடம் ஓராண்டிற்கு மேல் காலியாகவுள்ளதால், முக்கிய முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுகிறது தபால் துறை. மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தபால் துறை தென் மண்டலத்தில், ஒன்பது மாவட்டங்கள் உள்ளன. தபால் துறை தொடர்பான குறைகள், ஊழியர் மாற்றம், அவர்களது கோரிக்கைகள் குறித்து தென் மண்டல தலைவர் முடிவு எடுப்பார். ஏற்கனவே இங்கு தலைவராக இருந்த செல்வக்குமார் சென்னைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பின், சென்னை மண்டல தலைவர் ராமச்சந்திரன் கூடுதலாக இப்பொறுப்பை கவனித்தார். அவரும் ஓய்வு பெற்ற பின், பல மாதங்களாக இப்பணியிடம் காலியாகவுள்ளது. சென்னையில் உள்ள, முதன்மை தபால் துறைத் தலைவர் சாந்தி நாயர் கூடுதலாக இப்பொறுப்பை கவனித்தாலும், முக்கிய முடிவுகள் எடுப்பதில் இழுபறி நீடிக்கிறது. இப்பணியிடத்தை விரைந்து நிரப்ப, தபால் துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.