மதுரை:மதுரையில், டூவீலரில் சென்று நகை பறித்த இருவரை போலீசார் கைது
செய்தனர்.சமீபகாலமாக, டூவீலர்களில் சென்று, நகைபறிப்பது தொடருகிறது. இதில்
குழுவாக ஈடுபடுவதாகவும் போலீசார் சந்தேகப்படுகின்றனர். நேற்று முன் தினம்
இரவு நரிமேட்டில் தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் போலீசார்
வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டூவீலரில் சென்ற இருவர், போலீசாரை
பார்த்ததும், டூவீலரை நிறுத்தி விட்டு ஓடினர்.
அவர்களில் ஒருவரை பிடித்து
விசாரித்தபோது, வண்டியூர் சங்குநகர் மாரிமுத்து, 34, எனவும், தப்பியவர்
தாசில்தார்நகர் ரவிக்குமார் எனவும் தெரிந்தது.இவர்கள் ஜூன் 10ல்,
கே.கே.நகரில், நண்பர் சதாம்ஹூசேனுடன் சேர்ந்து புஷ்பவதி,65, என்பவரிடம்
நாலேகால் பவுன் தாலிச்செயினை பறித்தனர். மறுநாள் இவ்வழக்கில், சதாம்ஹூசேனை
அண்ணாநகர் போலீசார் கைது செய்தனர். ஜூன் 13ல், காந்திமியூசியம் ரோட்டில்,
முத்துமணி,65, என்பவரிடம் மாரிமுத்துவும், ரவியும் 5 பவுன் நகையை
பறித்தனர். நகைகளை காரியாபட்டி தங்கபாண்டியிடம், பாதி விலைக்கு விற்றனர்.
இவ்வழக்கில், மாரிமுத்து, தங்கபாண்டியை போலீசார் கைது செய்து, ரூ.1.85
லட்சம் மதிப்புள்ள நகைகளை மீட்டு, டூவீலர் மற்றும் கத்தியை போலீசார்
பறிமுதல் செய்தனர். தப்பிய ரவிக்குமாரை தேடி வருகின்றனர்.