ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளியில், பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட மாணவர்கள், வாந்தியுடன் மயக்கடைந்தனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், இடையன்குளம் வெங்கடசாமி நாயுடு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, நேற்று மதியம் சத்துணவு வழங்கப்பட்டது. மாணவர் புதியராஜுக்குப் பரிமாறப்பட்ட சாம்பார் சாதத்தில், பல்லி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனிடையே, பல்லி விழுந்த சாம்பாரை சாப்பிட்ட மாணவர்கள், ஆறு பேருக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, சத்துணவு சாப்பிட்ட, 60 மாணவர்களை, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக அனுமதித்தனர். டாக்டர்கள், காளிராஜ், ரமேஷ்பாபு, தனலட்சுமி, சிகிச்சையளித்தனர். டாக்டர் காளிராஜ் கூறியதாவது: மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. சாப்பாட்டில் பல்லியை பார்த்த அதிர்ச்சியில், மாணவர்கள் பயந்து உள்ளனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. வாந்தியுடன் மயக்கமான மாணவர்களும், நன்றாகவே உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.