SAMBAVAM NEWS | நச்சுக் கழிவை திறந்துவிட்டு தரணி சர்க்கரை ஆலை, "அடாவடி' : கழிவுநீர் கலப்பதால் கிராம மக்கள் அச்சம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நச்சுக் கழிவை திறந்துவிட்டு தரணி சர்க்கரை ஆலை, "அடாவடி' : கழிவுநீர் கலப்பதால் கிராம மக்கள் அச்சம்

Added : ஜூன் 19, 2012
Advertisement

தியாகதுருகம் : விழுப்புரம் மாவட்ட, மேற்குப் பகுதியை வளப்படுத்தி வரும், மணிமுக்தா ஆற்றில், தரணி சர்க்கரை ஆலையில் இருந்து திறந்துவிடப்பட்ட நச்சுக் கழிவுகள் கலப்பதால், மீன்கள் செத்து மிதக்கின்றன. ஆற்றில், "போர்வெல்' மூலம் குடிநீர் பெறும், 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், அச்சமடைந்துள்ளனர். கழிவுநீர் திறந்து விடுவதை நிறுத்தாவிட்டால், போராட்டம் நடத்தவும், மக்கள் முடிவு செய்துள்ளனர். நள்ளிரவில் அடாவடி விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் அடுத்த, கலையநல்லூரில், தரணி சர்க்கரை ஆலை, இரண்டு ஆண்டுகளுக்கு முன், அரவையைத் துவக்கியது. இந்த ஆலையில் தேக்கி வைத்திருந்த கழிவுநீரை, 2010ம் ஆண்டு, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது, ஆலைக்கு அருகே ஓடும் மணிமுக்தா ஆற்றில், திறந்து விட்டது.
நள்ளிரவு நேரத்தில் திறந்து விடப்பட்ட நச்சுக் கழிவு நீர், பூனைக் கண் ஓடை மூலம், வீரசோழபுரம் அருகே ஆற்றில் கலந்து, ஆற்று நீர் கருப்பு நிறமாக மாறியது. இதைப் பார்த்த மக்கள், அச்சமடைந்தனர். இதனால், ஆற்றில் போர்வெல் அமைத்து தண்ணீர் எடுத்து, குடிநீருக்குப் பயன்படுத்தி வந்த, வீரசோழபுரம், பிரிதிவிமங்கலம், மடம், பானையங்கால், சித்தலூர், வடபூண்டி, கொங்கராயபாளையம், புதுஉச்சிமேடு, கூத்தக்குடி உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பாதிக்கப்பட்டனர். அதிகாரிகள் "ஜிங்சாக்' மக்கள் பாதிப்பு குறித்து, "தினமலர்' நாளிதழ் சுட்டிக் காட்டியதையடுத்து, நச்சுக்கழிவு கலப்பதை, ஆலை உரிமையாளர்கள் நிறுத்தினர். மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், "ஆற்று நீரை சோதனைக்கு அனுப்பி, எந்த ஆபத்தும் இல்லை' என, பூசி மெழுகி, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது, மணிமுக்தா ஆற்றில், கழிவுநீர் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டதால், மக்கள் நிம்மதியடைந்தனர். மாசுபட்டது குடிநீர் கடந்த, 10 நாட்களுக்கு முன், தரணி ஆலையில் இருந்து, பூனைக் கண் ஓடை வழியாக, மீண்டும் நச்சுக் கழிவுநீர், திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், கோடையிலும் வற்றாத ஜீவநதியாக ஓடிய மணிமுக்தா ஆற்று நீர், மாசுபட்டு, கழிவுநீர் ஓடுகிறது. தண்ணீர் கருப்பு நிறமாக மாறி, துர்நாற்றம் வீசுகிறது. ஆற்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. ஆற்றில் போர்வெல் போட்டு தண்ணீர் குடித்து வந்த கிராம மக்கள், அச்சமடைந்துள்ளனர். ஆற்றுநீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்த விவசாயிகளும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில், நேற்று, 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், ஆலைக்குள் சென்று, பொது மேலாளர் ஆறுமுகத்தை முற்றுகையிட்டு, கழிவுநீர் ஆற்றில் கலப்பதை, உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறினர். "கழிவுநீர் எதுவும், ஆற்றில் கலக்கவில்லை' என, அவர் கூறியதால், ஆத்திரமடைந்த விவசாயிகள், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகள் ஆத்திரம் தொடர்ந்து, ஆலை ஊழியர் ஒருவரை அழைத்துச் சென்று, பூனைக்கண் ஓடை அருகே நச்சுக்கழிவு நீர் கலப்பதை, விவசாயிகள் சுட்டிக் காட்டினர். இது குறித்து, உயர் அதிகாரிகளிடம் கூறுவதாகக் கூறி, ஆலை ஊழியர், அங்கிருந்து நழுவினார். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், நச்சுக்கழிவு, ஆற்று நீரில் கலப்பதை, நிரந்தரமாக தடுத்து நிறுத்தாவிட்டால், போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து, வீரசோழபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராஜ் கூறியதாவது: பத்து நாட்களுக்கும் மேலாக, தரணி சர்க்கரை ஆலையினர், கழிவுநீரை ஆற்றில் திறந்து விட்டுள்ளனர். இதனால் எங்கள் ஊராட்சிக்கு, ஆற்றில் இருந்து குடிநீர் சப்ளை செய்வதை நிறுத்தி விட்டோம். ஆற்றை ஒட்டி ஊர் அமைந்துள்ளதால், ஊருக்குள் துர்நாற்றம் வீசுகிறது. மீன்கள் செத்து மிதப்பதால், நீரைப் பயன்படுத்த, அச்சமாக உள்ளது. ஆலைக்கழிவு, ஆற்றில் கலப்பதை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்தா விட்டால், மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு, செல்வராஜ் கூறினார்.
நொய்யல் ஆறு போல மாறும் ஆலையில் இருந்து நச்சுக்கழிவுகளை, அரசு விதிகளை மீறி ஆற்றில் திறந்து விடும் நிலை தொடர்ந்தால், ஈரோடு மாவட்டத்தில், சாயப் பட்டறைக் கழிவுகள் கலந்து, மாசுபட்ட நொய்யல் ஆற்றைப் போலவே, மணிமுக்தா ஆறும் மாறும் என்பதில் சந்தேகமில்லை. ஆலையில் கழிவுகளை சுத்திகரிக்க, போதிய சாதனங்களைப் பொருத்தாமல், ஆற்றில் நச்சுக்கழிவைத் திறந்துவிட்டு மக்களின் உயிருடன் விளையாடும் தரணி சர்க்கரை ஆலையின் அடாவடி போக்கைத் தடுத்து நிறுத்த, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை