DISTRICT NEWS | டாக்டர் சரோஜா உட்பட 5 பேர் தகவல் ஆணையர்களாக நியமனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டாக்டர் சரோஜா உட்பட 5 பேர் தகவல் ஆணையர்களாக நியமனம்

Added : செப் 02, 2012

சென்னை: ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி அக்பர், வழக்கறிஞர்கள் மீனாம்பிகை, தமிழ்ச் செல்வன் உள்ளிட்ட ஐந்து பேர், தமிழக தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக தகவல் ஆணையத்தில், ஒரு தலைமை ஆணையர் மற்றும் ஆறு ஆணையர் பணியிடங்கள் உள்ளன. இதில், தலைமைத் தகவல் ஆணையராக ஸ்ரீபதியும், ஆணையராக சீனிவாசன் ஆகியோர் மட்டுமே, நியமிக்கபட்டு இருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் தகவல் ஆணையர்களை நியமிப்பதற்கான குழு, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கூடி, ஐந்து பேர் அடங்கிய பட்டியலை, கவர்னர் பரிந்துரைக்கு அனுப்பியது. இதன் படி, முன்னாள் எம்.பி., டாக்டர் சரோஜா, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி கிறிஸ்டோபர் நெல்சன், வழக்கறிஞர்கள் மீனாம்பிகை, தமிழ்ச்செல்வன் மற்றும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி அக்பர் ஆகியோர், புதிய தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், ஐந்தாண்டுகள் அல்லது 65 வயது வரை, இப்பதவியில் இருப்பர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. சரோஜா: நாமக்கல், ராசிபுரத்தைச் சேர்ந்த இவர், மகப்பேறு மருத்துவராக, சென்னை ஸ்டான்லியில் பணியாற்றியுள்ளார். ராசிபுரம் எம்.பி., மகளிர் மேம்பாட்டு ஆணையம், விளையாட்டு ஆணைய உறுப்பினராக பணியாற்றியுள்ளார். அ.தி.மு.க., மகளிர் அணி இணைச் செயலராக இருந்தார். கிறிஸ்டோபர் நெல்சன்: ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியான கிறிஸ்டோபர் நெல்சன், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், தமிழ்நாடு திட்டக்கமிஷன் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது, தகவல் ஆணையர்களில் ஒருவராகியுள்ளார். புதிய பதவியைத் தொடர்ந்து, திட்டக்கமிஷன் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மீனாம்பிகை: ஐகோர்ட் வழக்கறிஞரான இவர், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். முன்னதாக, தமிழ்நாடு பணியாளர் தேர்வு ஆணைய உறுப்பினராக பணியாற்றினார். தற்போது, இவரது கணவர் பாலசுப்ரமணியம், தேர்வாணையத்தில் உறுப்பினராக உள்ளார்.
தமிழ்ச்செல்வன்: 1983ம் ஆண்டு வழக்கறிஞராக பணியைத் துவக்கிய தமிழ்ச்செல்வன், பார் கவுன்சில் உறுப்பிராகவும், அம்பேத்கர் சட்டப் பல்கலையின் செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினராக இருந்துள்ளார்.
அக்பர்: நெல்லை மாவட்டம், கடையநல்லூரைச் சேர்ந்த இவர், 1973ம் ஆண்டு, வழக்கறிஞராக பதிவு செய்தார். மாவட்ட நீதிபதியாக பணியாற்றி, அதன் பின், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைய குழு உறுப்பினராகவும், தடா கோர்ட் நீதிபதியாகவும் பணியாற்றினார். இறுதியாக, தொழில் தீர்ப்பாய நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X