district news | அக்., 28ல் நவநீதகிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அக்., 28ல் நவநீதகிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேகம்

Added : அக் 07, 2012

கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள கொட்டையூரில், ருக்மணி சத்யபாமா சமேத நவநீதகிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. பழமையும், பெருமையும் பெற்ற இக்கோவில் கடந்த, 39 ஆண்டுகளாக திருப்பணி செய்யப்படாமல், மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டது.
பின் கிராம மக்களால், கிருஷ்ண பக்த சபா எனும் திருப்பணி கமிட்டி அமைக்கப்பட்டது. பக்தர்களின் நன்கொடைகள் மூலம் 13 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணி வேலைகள் நடந்தது. சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக, கோடீஸ்வரர் கோவிலுக்கு வடக்குப்பகுதியில் குழந்தைப்பேரு அருளும் நவநீதகிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது.குழந்தை கண்ணனுக்கு வெண்ணெய் என்றால் மிகவும் பிடிக்கும். குழந்தைப்பேறு வேண்டுவோர், ஏழு வாரம் வியாழக்கிழமை, ஏழுமுறை கோவிலை வலம் வந்து கிருஷ்ணனுக்கு அர்ச்சனை செய்து, வெண்ணெய் நைவேத்யம் செய்து, அங்குள்ள குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு, மீதியுள்ள வெண்ணெயை உண்டால், குழந்தைப்பேறு நிச்சயம் என்பது காலம், காலமாக நம்பப்பட்டு வருகிறது.ஜெயந்தி உற்சவத்தின்போது, உறியடி உற்சவத்துக்காக, குடந்தை ஆராவமுதன் மேலக்கொட்டையூர் நவநீதகிருஷ்ணன் கோவிலுக்கு எழுந்தருளுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ண பக்த சபா திருப்பணி கமிட்டி மூலம் முழுத்திருப்பணி வேலைகள் நடந்து, வரும், 28ம் தேதி காலை, 9 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. திருப்பணி மற்றும் கும்பாபிஷேகத்துக்கு உபயதாரர்களை வரவேற்பதாக திருப்பணி கமிட்டியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். விழா ஏற்பாடுகளை கிருஷ்ண பக்த சபா கவுரவ தலைவர் சிவசுப்ரமணியன், தலைவர் சேஷசாயி, உதவிதலைவர்கள் மாதவன், ரவிச்சந்திரன், கீர்த்திவாசன், செயலாளர் நாராயணன், இணை செயலாளர் ராமசாமி, பொருளாளர் கல்யாணராமன் மற்றும் கிராமமக்கள் செய்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X