Broiler manufacturers suffered | தடையின்மை சான்றிதழ் வழங்க தாமதம் : கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கவலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடையின்மை சான்றிதழ் வழங்க தாமதம் : கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கவலை

Added : நவ 11, 2012

பல்லடம்: கறிக்கோழிகளுக்கு தடையின்மை சான்றிதழ் வழங்க, கால்நடை பராமரிப்புத்துறை தாமதம் செய்வதால் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். பெங்களூரில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்கம் எதிரொலியாக, தமிழகத்தில் இருந்து, கேரளாவுக்கு நுழையும் கறிக்கோழிகள் மற்றும் முட்டைகளுக்கு, கேரள அரசு, கடந்த மாதம், 29ம் தேதி தடை விதித்தது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல லட்சம் கறிக்கோழிகள், கோடிக்கணக்கான முட்டைகள் தேக்கம் அடைந்தன. தமிழகத்தில் பறவை காய்ச்சல் நோய் இல்லை என தமிழக அதிகாரிகள், கேரள அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்தனர். கடந்த, 6ம்தேதி, தமிழக கறிக்கோழிகள் மற்றும் முட்டைகளுக்கான தடையை கேரள அரசு நீக்கியது. என்றாலும் கூட, கறிக்கோழிகளுக்கு தமிழக கால்நடைத் துறையினரிடம் பறவைக் காய்ச்சல் நோய் இல்லை என்ற, தடையின்மை சான்றிதழ் வாங்கி வர வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தது. கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் கறிக்கோழிகளுக்கு, தடையின்மை சான்றிதழ் வழங்க, கால்நடை பராமரிப்புத் துறையினர் மூன்று மணி நேரம், நான்கு மணி நேரம் என, காலதாமதம் ஏற்படுத்துவதால், கேரளாவிற்கு கறிக்கோழிகள் கொண்டு செல்லும் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

உற்பத்தியாளர்கள் கூறியதாவது: கேரளாவிற்கு மாலை முதல் இரவு வரை கறிக்கோழி லோடுகள் கொண்டு செல்லப்படுகின்றன. தடையின்மை சான்றிதழ் வழங்க கால்நடைதுறை அதிகாரிகள் தாமதம் செய்வதால், கோழிகளை வேன்களில் ஏற்றி, நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. கால்நடைத்துறை அதிகாரிகள், தடையின்மை சான்றிதழை விரைவாக வழங்கினால், கேரளாவிற்கு கோழிகளை விரைந்து எடுத்துச் செல்ல முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X