sivagangai district news | எல்லோராலும் பேசப்படும் "பேச்சில்லா கிராமம்':பே(ஊ)ருண்டு; வசிப்பதற்கு ஆளில்லை| Dinamalar

தமிழ்நாடு

எல்லோராலும் பேசப்படும் "பேச்சில்லா கிராமம்':பே(ஊ)ருண்டு; வசிப்பதற்கு ஆளில்லை

Added : டிச 25, 2012

திருப்புவனம்:விவசாயத்தை மட்டுமே தொழிலாய் கொண்ட கிராமத்தினர், தண்ணீரில்லா கண்மாய், தண்ணீர் வர தடையாய் இருக்கும் ஆக்கிரமிப்பாளர்களால், வாழ வழியின்றி இடம்பெயர்ந்ததால் காலியான கிராமங்கள் "பேச்சில்லா கிராமம்' என அழைக்கப்படுகிறது.கிராமங்களில் கண்மாய் நீரை நம்பி விவசாயம் நடக்கிறது. நிலத்தடி நீர் வளம் குறைவின்றி இருந்தால் கிணற்று பாசனம் மூலம் விவசாயம் செய்கின்றனர். கடும் உழைப்பாளிகளான கிராமத்தினர், விவசாயத்தில் பாடுபடும் அளவுக்கு பலன் இல்லை என்பதால், கூலி தொழிலாளர்களாக நகரங்களை நோக்கி நகர ஆரம்பித்து விட்டனர்.
இயற்கை இடர்பாடு, செயற்கை உரவிலையேற்றம், விளைவித்த பொருளுக்கு கட்டுபடி விலை கிடைக்காதது என பல காரணங்களால் விவசாயத்தை கைவிடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூரிலிருந்து 4 கி.மீ., தூரத்தில் உள்ள அல்லிநகரம் ஊராட்சி தவளைக்குளம் கிராமம் தற்போது "பேச்சில்லா கிராமமாக' அழைக்கப்படுகிறது. இருபது ஆண்டுக்கு முன் 50 குடியிருப்புகளோடு, செழிப்போடு இருந்தனர். நாளடைவில் இக்கிராமத்தின் கண்மாய், வரத்து கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு, தண்ணீர் வர வழியின்றி விவசாயம் பாதித்தது. பருவமழையை நம்பி விதை விதைத்தவர்கள் கடன்சுமையால் சிரமப்பட்டனர். தன் வாரிசுகளும் கஷ்டப்படக்கூடாது என கருதியவர்கள் இங்கிருந்து இடம் பெயர்ந்தனர். தற்போது இக்கிராமத்தில் ஆளில்லை. வீடு இருந்ததன் அடையாளமாக நட்ட கற்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறது.
தற்போது திருப்புவனம் ஒன்றியத்தில் தவளைக்குளம், வலையனேந்தல், கருப்பணம்பட்டி, மறக்குளம் போன்ற "பேச்சில்லா கிராமங்களின்' எண்ணிக்கை பெருகுகிறது. இக்கிராமங்கள் வருவாய்த்துறை ஆவணம்,வரைபடத்தில் மட்டுமே பெயரளவு கிராமமாக இடம் பிடித்துள்ளன. பேருண்டு, ஊருண்டு, வசிப்பதற்கு ஆளில்லை எனும் நிலையோடு இருக்கும் "பேச்சில்லா கிராமம்' எல்லோராலும் பேசப்படும் கிராமமாக தொடர்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X