மின் இணைப்புக்கான டிபாசிட், மின் மீட்டர் பொருத்துவது, பழுதடைந்த மீட்டர்களை மாற்றுவது போன்ற சேவை கட்டணங்களை உயர்த்த, மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. மின் மீட்டருக்கும் இனி, மாத வாடகை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், ஆண்டுக்கு, 2,500 கோடி ரூபாய் மின்வாரியத்துக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம், 2.30 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில், 35 லட்சம் மின் இணைப்புகள், வணிக ரீதியிலானவை. 19 லட்சம் இலவச மின் இணைப்புகள், விவசாயம் மற்றும் குடிசை பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.கடந்த சில ஆண்டுகளாக, மின்பற்றாக்குறை காரணமாக, தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்பட்டு, சேவையின் அடிப்படையில், குறைந்த விலையில் நுகர்வோருக்கு, மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இதனால், மின்வாரியம், 54 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதையடுத்து, செலவினங்களை குறைத்து, வருவாயை அதிகரிக்க, மின்வாரியம் முடிவு செய்தது.முதல்கட்டமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம், மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இதனால், மின்வாரியத்துக்கு ஆண்டுதோறும், 7,500 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைத்து வருகிறது.இந்நிலையில், புதிய மின் இணைப்பு, மின் மீட்டர் பொருத்துவது, பழுதடைந்த மீட்டர் பெட்டிகளை மாற்றுவது போன்றவற்றுக்கான கட்டணங்களை உயர்த்த, மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும், மின்சார கணக்கீடு எடுக்கவும், மின்சார அளவீடுகளை குறிக்க பயன்படும், வெள்ளை நிற அட்டைக்கான கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கைகளில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது.
இதன் அடிப்படையில், ஒரு முனை மின் இணைப்பு பெற, தற்போதைய கட்டணம், 250 ரூபாயில் இருந்து, 900 ரூபாயாகவும்; மும்முனை இணைப்புக்கான கட்டணம், 500 ரூபாயில் இருந்து, 1,600 ரூபாயாகவும்; வணிக ரீதியிலான மும்முனை இணைப்பு கட்டணம், 3,000 ரூபாயில் இருந்து, 10 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்படும் என தெரிகிறது.இதே போல், மின் மீட்டர்களுக்கு, மாதாந்திர வாடகை நிர்ணயம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, வீட்டு மின் மீட்டர்களுக்கு, 10 ரூபாயும், மும்முனை மின் மீட்டர்களுக்கு, 40 ரூபாயும், வணிக ரீதியிலான மின் மீட்டர்களுக்கு, 50 ரூபாயும் வாடகை வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.புதிய மீட்டர்களை பொருத்துவது, பழுதடைந்த மீட்டர்களை மாற்றுவது போன்றவற்றுக்கான கட்டணம், ஒரு முனை மின் இணைப்புக்கு, 150 ரூபாயில் இருந்து, 500 ரூபாயாகவும்; மும்முனை மின் இணைப்புக்கு, 150 ரூபாயில் இருந்து, 750 ரூபாயாகவும் உயர்த்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
மீட்டர்களுக்கான டிபாசிட் கட்டணம், ஒரு முனை மின் இணைப்புக்கு, 700 ரூபாயில் இருந்து, 825 ரூபாயாகவும்; மும்முனை எலக்ட்ரானிக் மீட்டர்களுக்கு, 2,000 ரூபாயில் இருந்து, 3,650 ரூபாயாகவும் உயர்த்தப்படலாம் என தெரிகிறது. மேலும், உயர் மின் அழுத்த மீட்டர்களுக்கான வைப்புத் தொகை, 40 ஆயிரம் ரூபாயில் இருந்து, 65 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மின்சார கணக்கீடு செய்ய, தற்போது எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை. ஆனால், இனி, ஒவ்வொரு வீட்டுக்கும் மின்சார கணக்கீடு செய்ய, 10 ரூபாயும், குறைந்த மின் அழுத்த இணைப்புக்கு, 100 ரூபாயும், உயர் அழுத்த தொழிற்சாலைகளுக்கு, 250 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட உள்ளது.மின்சார கணக்கீட்டை குறித்து வைக்கும், வெள்ளை அட்டையின் விலை, 5 ரூபாயில் இருந்து, 10 ரூபாயாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மின்வாரிய உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:மின்சார கட்டணங்களை உயர்த்தியன் மூலம், ஆண்டுதோறும், 9,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மின்வெட்டு பிரச்னையின் காரணமாக, நுகர்வோருக்கு முழுமையான மின்சாரம் வழங்க முடியவில்லை. இதனால், மின்சார கட்டண உயர்வால், ஆண்டுக்கு, 7,500 கோடி ரூபாய் மட்டுமே கூடுதல் வருவாய் கிடைத்து வருகிறது.மின்சார சேவை கட்டணங்கள், 10 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. எனவே, தற்போது மின்சார சேவை கட்டணங்களை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து, பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும். பொதுமக்களை பாதிக்காத வகையில், அவர்களின் கருத்துகளை அறிந்த பின்னரே, புதிய கட்டணங்களை அமல்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேற்கண்டவாறு கட்டணங்களை உயர்த்துவதன் மூலம், மின்வாரியத்துக்கு ஆண்டுதோறும், 2,500 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும். கட்டண உயர்வு தொடர்பாக, மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின், அனுமதி பெறுவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளில், மின்வாரியம் ஈடுபட்டுள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஒரே தீர்வு விலையுள்ள மின்சாரத்தை சீராக எல்லோருக்கும் சரியான விலையில் தருவது தான்.பெட்ரோல் விலைய ரோல் பேக் செய்ய சொல்ற மாதிரி இந்த கட்டண உயர்வையும் ரோல் பேக் செய்தால் நல்லது.தீவிரமாக மின்சார இழப்பை குறைத்தலினாலும்,மின் திருட்டை கடும் நடவடிக்கையால் தடுத்தாலும் போதும்.அதே போல இந்த கட்டண ஸ்லாப் உயர்த்த வேண்டும்.இப்போது இரண்டு மாதங்களில் 500 யூனிட்டில் இருந்து பயன்பாடு 501 ஆக உயர்ந்தால் கிட்ட தட்ட 200 ரூபாய் அந்த ஒரு யூனிட்டுக்கு கட்ட வேண்டும்.எனவே இந்த ஸ்லாபை 600 யூனிட்டாக மாற்ற வேண்டும்.மக்களை வாட்டுவதை விட Prudential Management தான் பலன் தரும்..அதை செய்யுமா இந்த அரசு??
மின்சார உற்பத்தியில் 100 %இல் 49% இலவசத்திற்கு போகிறது. மீதி 51 % உபயோகிப்பலர்களுக்கு போகிறது. இந்த 51லும் சுமாராக 80 டு 90 பெரிய கம்பனிகளுக்கு 60% போகிறது. மீதி உள்ளது தான் பொது மக்களுக்கு. இது தமிழக அரசாங்கம் வெளியிட்டுள்ள வெளியீடு. oct-2010. கம்பனிகளுக்கு 5 ஆண்டு கட்டண சலுகை. பாதிக்கு மேல் உள்ள இலவசத்திற்கும் , கம்பனிகளின் கட்டண சலுகை க்கான தொகை அவர்களது rotation இக்கும், மீதி உள்ள சுமாராக 22% ய் உபயோக படுத்தும் சுமார் 2.30 கோடி பயநீட்டளர்கள் தான் மொத்த 100% மான தொகையை செலுத்த வேண்டியுள்ளது. இதுதான் யதார்தம். இது தெரியாத இங்குள்ள 80 கமெண்ட் களுமே வேஸ்ட். இலவசத்திற்கு கொடுக்கும் முக்யதுவதை , வோட்டிற்காக செய்யும் முட்டாள்தனத்தை உணராமல் கமெண்ட் எழுதுவது அதைவிட முட்டாள் தனம். 49 0 வில் முத்திரை குதுவடல் மட்டுமே உங்கள் பட்ற்றக்குறை தீருமா.? என்ன கர்மமோ இப்படி ஒரு 60 ஆண்டு கால் ஆட்சி இப்படி இலவசத்தில் ஊறிப்போன மக்களோ விடிவு காலம் எப்போது
முதலில் மும்முனை மின்சாரத்தை முழுவதுமாக கொடுக்க அதற்கான ஏற்பாட்டை செய்து முடித்துவிட்டு அப்புறமாக மின் கட்டணத்தை ஏற்றுங்கள் தவறில்லை. முழுமையாக மின்சாரத்தை பெற்றுக்கொண்டு சென்னையில் நிம்மதியாக இருக்கும் நீங்கள் கட்டுங்கள் தவறில்லை. ( இந்நாள் முன்னால் முதல்வர்கள் மற்றும் மந்திரிகள் உறுப்பினர்கள் 4 மடங்கு ஏற்றி காட்டட்டும் ) கிராமத்தில் மின்சாரத்தையே வழங்காமல் இருப்பதனால் சென்னையில் வசூலிக்கும் கட்டணத்தை விட 50% க்கும் குறைவான கட்டணத்தையே வசூலியுங்கள்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.