புதுடில்லி : தே.ஜ., கூட்டணி ஆட்சி காலத்தில், கூடுதல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கியதில், நடந்த முறைகேடு குறித்த வழக்கில், கோர்ட் கோரியிருந்த ஆவணங்களை தாக்கல் செய்ய, சி.பி.ஐ., மேலும் அவகாசம் கேட்டது. இதையடுத்து, இரண்டு வார அவகாசத்தை, தயக்கத்துடன் நீதிபதி அளித்தார்.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு குறித்த வழக்கு, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, மத்தியில் ஆட்சியில் இருந்த போது, வழங்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்தும், விசாரணை நடத்த, சி.பி.ஐ.,க்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தி, குற்றப் பத்திரிகையை, கடந்த டிசம்பர், 21ம் தேதி தாக்கல் செய்தது. அதில் கூறியிருந்ததாவது: தே.ஜ., கூட்டணி ஆட்சி காலத்தில் நடந்த, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், கூடுதல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டதில், அரசுக்கு, 846 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த கூடுதல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை, பாரதி ஏர்டெல், வோடபோன் மற்றும் ஹட்சிசன் மேக்ஸ் - ஸ்டெர்லிங் செல்லுலர் ஆகிய மூன்று நிறுவனங்கள் முறைகேடு செய்து பெற்றுள்ளன.
இந்த மூன்று நிறுவனங்களுக்கு, அப்போது, தொலைதொடர்பு அமைச்சராக இருந்த பிரமோத் மகாஜன், கூடுதல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்துள்ளார். தொலைதொடர்பு கொள்கையை மீறி, மேற்கண்ட நிறுவனங்களுக்கு கூடுதல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், அவசரம் காட்டப்பட்டுள்ளது.
கூடுதல் ஒதுக்கீடு பெறுவதற்காக, மூன்று நிறுவனங்களும், தங்களின் ஒட்டு மொத்த வருவாயை குறைத்து காட்டியும், சந்தாதாரர்கள் எண்ணிக்கையை கூட்டிக் காட்டியும், சில முறைகேடுகளை செய்துள்ளன. தொலை தொடர்புத் துறை முன்னாள் செயலர் ஷியாமல் கோஷ், இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்துள்ளார்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து, கடந்த, 11ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது, "கூடுதல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கோருவதற்கு முன், மூன்று நிறுவனங்களும் தீர்மானத்திற்கு வந்து இருக்க வேண்டும். இந்த தீர்மானம் என்ன என்பது பற்றிய ஆவணங்களை, சி.பி.ஐ., தாக்கல் செய்ய வேண்டும்' என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதற்கு சி.பி.ஐ., வக்கீல்கள் கால அவகாசம் கேட்டதையடுத்து, விசாரணை 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று விசாரணை துவங்கியதும், சி.பி.ஐ., சார்பில் ஆஜரான வக்கீல் கே.கே.கோயல் நீதிபதி ஓ.பி., ஷைனியிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார். அதில்,"கோர்ட் கோரியுள்ள ஆவணங்களை மேலும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது; இதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுகிறது' என்றார். அதற்கு நீதிபதி, ""அரசு வக்கீல் குறுகிய அவகாசம் கேட்டார்; இதை விருப்பமின்றி அனுமதிக்கிறேன். மார்ச், 8ம் தேதி மறு விசாரணையின் போது தாக்கல் செய்ய வேண்டும்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.