கோவை: கோவை,திருப்பூர், நெல்லை குமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்தததால் வாட்டியெடுத்த வெயிலில் இருந்து விடுதலை கிடைத்தது. இதனால் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியது.
கோவையில் கனமழை; வாட்டியெடுத்த வெயிலுக்கு விடுதலை : கோவையில் கடந்தாண்டு தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை பொய்த்தது. மழை பெய்ய வேண்டிய காலத்தில் வெயில் சுட்டெரிந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவையில் கனமழை பெய்தது. மாநகரத்தில் வடகிழக்கு பகுதியில் இரவு 7:00 மணிக்கு துவங்கிய மழை ஒவ்வொரு பகுதியிலும் பல மணி நேரம் கொட்டித்தீர்த்தது. இதனால், கோவையில் நேற்று வாட்டியெடுக்கும் வெயிலில் இருந்து விடுதலை கிடைத்தது.மழை பெய்யாததால் கோவையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டது. மழைக்காக அனைவரும் தவமிருந்த நிலையில், மழை பெய்தது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆனால், தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளத்துடன் சாக்கடை கழிவு நீர் தேங்கியது சங்கடத்தை ஏற்படுத்தியது. கோவை மாநகராட்சி சார்பில், ஜவஹர்லால்நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தில் பாதாள சாக்கடை, மழை நீர் வடிகால் கட்டும் பணி நடக்கிறது.இதற்காக, கோவையில் முக்கிய ரோடுகள், குடியிருப்பு பகுதியிலுள்ள ரோடுகள் முழுமையாக தோண்டப்பட்டு பணிகள் நடக்கிறது. பணிகள் வேகமாக நடந்தாலும், நிறைவடையவில்லை. பணிகள் நிறைவு செய்யப்பட்ட பகுதிகளில் ரோடு போடவில்லை.இந்நிலையில் மழை பெய்ததால், பெரும்பாலான ரோடுகள், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கியது. பாதாள சாக்கடைகளில் மழை நீர் புகுந்து தேங்கியது. சாக்கடைகளில் பிளாஸ்டிக் கவர்களால் அடைப்பு ஏற்பட்டு, மழைநீரும் சாக்கடை கழிவுநீரும் ரோடு முழுவதும் தேங்கியது.ஆத்துப்பாலம் - உக்கடம் ரோட்டில் மழை நீர் வெளியேற வழியின்றி தேங்கியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அவிநாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மழை நீர் தேங்கியதால், வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.மழை நீர் தேங்கிய பகுதிகளில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில், மீட்பு பணிகள் நடந்தது. நீர் உறிஞ்சு இயந்திரங்கள் மூலம் ஒவ்வொரு பகுதியிலும் கழிவு நீர் அகற்றப்பட்டது. வடவள்ளி, சங்கனூர் பள்ளம், வாலாங்குளம், உக்கடத்தை ஒட்டியுள்ள குடிசைப்பகுதியில் கழிவு நீர் சூழ்ந்தது.பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் கட்டும் இடங்களில் ரோடு தோண்டப்பட்டுள்ளதால், ரோடுகள் அனைத்தும் சேறும் சகதியுமாக மாறியது. மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி, திட்டப்பணிகளை வேகப்படுத்தி நிறைவு செய்யாததால், ஒரு நாள் மழைக்கு கோவை மாநகரம் தாக்குப்படிக்கவில்லை. மழை காலம் துவங்குவதற்குள், மழைநீர் வடிந்து செல்லும் பகுதிகளை தூர்வாரி, சுத்தம் செய்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.
சிறுவாணியில் மழையில்லை: கோவையின் குடிநீர் ஆதார அணையான சிறுவாணியில் நேற்று முன்தினம் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும், அடிவாரப்பகுதியில் குறைந்த அளவு மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கவில்லை. சிறுவாணி அணையில் நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி, 864.80 மீட்டர் நீர்மட்டம் இருந்தது. அணையில் இருந்து 1.30 மீட்டர் தண்ணீர் மட்டுமே பயன்பாட்டிற்கும் எடுக்க முடியும்.
விவசாயிகள் மகிழ்ச்சி: பல்லடத்தில் பெய்துள்ள மழையால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பல்லடம் சுற்றுவட்டாரத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. மக்காச்சோளம், வெங்காயம், தக்காளி, வெண்டை, காலிபிளவர், புடலை, பாகல், மிளகாய், பீட்ரூட் ஆகியவை மிக அதிக அளவு சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை செய்யப்படுகிறது. எட்டு லட்சத்துக்கு மேல் தென்னை மரங்கள் உள்ளன.மழையின்மை காரணமாக காய்கறி பயிர்கள், தென்னைகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருந்தே கருகத்துவங்கின. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்து இருந்தனர். நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று காலை 7.30 மணி வரை, மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. பல்லடத்தில் மட்டும் 75.5 மி.மீ., மழை, பதிவாகியுள்ளது.கருகிய பயிர்களை காப்பாற்றும் வகையில், மழை பெய்திருந்ததால் பல்லடம் வட்டார விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
4 பேர் உயிர் தப்பினர்; ஒருவர் பலி?அவிநாசி அருகே மழை வெள்ளத்தில் மூழ்கியது கார்:அவிநாசி அருகே, தெக்கலூரில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டது; காரில் சென்றவரின் கதி, என்ன என்பது தெரியவில்லை. வெள்ளம் காரணமாக, வஞ்சிபாளையம் - தெக்கலூர் ரோடு துண்டிக்கப்பட்டது.அவிநாசி வட்டாரத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கனமழை பெய்தது. இரவு 12.30 மணிக்கு துவங்கிய அடைமழை, நள்ளிரவு 2.00 மணி வரை நீடித்தது. தெக்கலூர், புதுப்பாளையம், கானூர், உப்பிலிபாளையம், ராமநாதபுரம் ஊராட்சிகளில் பெய்த கனமழை காரணமாக, அப்பகுதியில் உள்ள குட்டைகள் நிரம்பி, தண்ணீர் வெளியேறியது. மழைவெள்ளம், தெக்கலூர் அருகே வண்ணாற்றங்கரை தடுப்பணையில் தேங்கி, அங்கு உடைந்து, வெளியேறியது. தெக்கலூர், காமநாயக்கன்பாளையம், புதுப்பாளையம், கோதபாளை யம் வழியாக சென்ற வெள்ளம், வஞ்சிபாளையம், மங்கலம் பாலத்தில் நொய்யலில் கலந்தது.
அடித்துச் செல்லப்பட்ட கார்:தெக்கலூர் பஸ் ஸ்டாப் அருகிலுள்ள ஆறுவழிச்சாலை பாலத்துக்கு கீழ், சர்வீஸ் ரோட்டில், வெள்ளம் கரைபுரண்டோடியது. திருச்சூரில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த மாருதி ஸ்விப்ட் காரை (கே.எல். 47 சி 5551), டிரைவர், தண்ணீரின் வேகம் தெரியாமல் செலுத்தியுள்ளார். கரை புரண்டோடிய வெள்ளத்தில் கார் தத்தளித்து அடித்துச் செல்லப்பட்டது. காரில் பயணம் செய்த பேக்கரி உரிமையாளர் ரஷீத் 49, உறவினர்கள் மஜீத் 60, பஷீர் 40, டிரைவர் யூசுப் அலி ஆகியோர் தண்ணீரில் நீந்தி தப்பினர். மற்றொருவரான சாதிக் 32, என்ன ஆனார் என்பது தெரியவில்லை.கார் அடித்துச் செல்லப்பட்ட அதே இடத்தில், கோவையிலிருந்து ஈரோடு நோக்கி சென்ற லாரி ஒன்றும் நீரில் மூழ்கியது. டிரைவரும், கிளீனரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வெள்ளம் காரணமாக, தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அவிநாசி வரை வாகனங்கள் தேங்கி நின்றன. போலீசார், தெக்கலூருக்கு சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். காலை 6.30 மணிக்குதான் போக்குவரத்து சீரானது.
சாலை துண்டிப்பு:வஞ்சிபாளையம் - தெக்கலூர் வரை செல்லும் ரிங் ரோட்டில், காமநாயக்கன்பாளையம் அருகே உடைப்பு ஏற்பட்டது. ரோட்டின் ஒருபகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அங்கிருந்த மின் கம்பம் சாய்ந்தது. செங்காளிபாளையம் பிரிவில், கார் மோதியதில், மின் கம்பம் சாய்ந்தது. காமநாயக்கன்பாளையத்தில் கரைபுரண்ட வெள்ளம் காரணமாக, அவ்வழியே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வெள்ளத்தில் மூழ்கிய காரையும், அதிலிருந்த சாதிக் என்பவரையும் தேடும் பணியில், கிராம நிர்வாக அலுவலர்களும், போலீசாரும் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி, உடுமலையில் கொட்டித் தீர்த்தது மழை :பொள்ளாச்சி, உடுமலை சுற்று வட்டாரங்களில் விடிய,விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இடி தாக்கியதில் டிரான்ஸ்பார்மர்கள் பழுதாகி, மின் வினியோகம் பாதிக்கப்பட்டது.தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்த நிலையில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்தது. மழை வராதா என மக்களிடம் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் பலத்த மழை பெய்தது.பொள்ளாச்சியில் நேற்று முன்தினம் இரவு 10.15 மணியளவில் துவங்கிய மழை, நேற்று காலை 7.00 மணி வரை பெய்து கொண்டிருந்தது. இதனால் தாழ்வான பகுதிகளிலும், வயல்களிலும் மழைநீர் தேங்கியது. பொள்ளாச்சி சுற்று வட்டாரங்களில் பல இடங்களில், இடி தாக்கி, டிரான்ஸ்பார்மர்கள் பழுதாகின. சுற்றுப்புற கிராமங்கள் பலவற்றில், நேற்று அதிகாலை வரை, மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. மின்வாரிய அதிகாரிகள், பழுதான மின்பாதைகளில், நேற்று காலை பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர். அம்பராம்பாளையம், ஜமீன்ஊத்துக்குளி, போடிபாளையம் பகுதிகளில், நேற்று பகல் 12.30 மணியளவில் மின்சார வினியோகம் சீரானது.வால்பாறையில் இடியுடன் பெய்த கனமழையால், பொள்ளாச்சி ரோட்டில் மண் சரிவு ஏற்பட்டது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. டிரான்பார்மர்கள் பழுதானதால், இரவு முழுவதும் மின் தடை நிலவியது.உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலையில், பல மாதங்களுக்கு பிறகு பலத்த மழை பெய்தது. காற்றுடன் பலத்த மழை பெய்த போதும் பெரியளவில் சேதம் ஏதுமில்லை. மழையால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.வறட்சியின் பிடியில் சிக்கி தவித்த உடுமலை, பொள்ளாச்சி பகுதியில் பெய்துள்ள மழை யால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உடுமலையில் 123 மி.மீ., மழை:நேற்று காலை 8.00 மணி வரை பதிவான மழையளவு: (மி.மீ.,யில்):உடுமலை- 123, சோலையாறு - 2, பரம்பிக்குளம் - 37, ஆழியாறு - 20.6, திருமூர்த்தி - 35, அமராவதி - 37, தூணக்கடவு - 28, பெருவாரிபள்ளம் - 33, மேல்நீராறு - 2, கீழ்நீராறு - 2, உப்பாறு -117, வால்பாறை - 4.6, வேட்டைக்காரன்புதூர் - 34.8, பொள்ளாச்சி - 75, மணக்கடவு - 49.2, சுல்தான்பேட்டை - 52, பொங்கலூர் - 43, நல்லாறு - 8, குண்டடம் - 54, பல்லடம்- 75.5 மி.மீ.,
புறநகரில் மழை: மரங்கள் முறிந்து போக்குவரத்து பாதிப்பு:பலத்த மழை காரணாக, புறநகர் பகுதிகளில் இரு பகுதிகளில் மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பேரூர் அருகே கோவைப்புதூரில் சிறுவாணிநகர் பகுதி உள்ளது. கோவைப்புதூர் டெர்மினஸ் பஸ் ஸ்டாப்பிலிருந்து தெற்கே இப்பகுதி அமைந்துள்ளது. இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. நேற்று முன் தினம் நள்ளிரவு பெய்த மழையால், சிறுவாணி நகருக்கு செல்லும் ரோட்டிலுள்ள 50 ஆண்டு பழமைவாய்ந்த மரம் முறிந்து ரோட்டின் குறுக்கே விழுந்தது. இதனால், நேற்று காலை பள்ளி, வேலைக்கு செல்வோர் அந்த வழியே செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். தொண்டாமுத்தூர் ரோட்டில் மரம் முறிவு: மாதம்பட்டி - தொண்டாமுத்தூர் செல்லும் ரோட்டோரத்தில் தனியார் நாற்றுப்பண்ணை அருகே பழமை வாய்ந்த பட்டுபோன மரம் உள்ளது. இந்த மரத்தை அப்புறப்படுத்த வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில்,நேற்று முன்தினம் பெய்த மழையால், பட்டுபோன மரத்திலிருந்த பெரிய கிளைகள் ஒடிந்து ரோட்டின் குறுக்கே விழுந்தன. இதனால், நேற்று அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளியில் குளம்போல தேங்கிய மழைநீர்: கோவைப்புதூர் அருகே குளத்துப்பாளையத்தில் அரசு மேல்நிலைபள்ளி மைதானத்தில் குளம்போல மழைநீர் தேங்கியது.
நெல்லை, குமரியில் பலத்த மழை பயிர்கள் நீரில் மூழ்கும் நிலை :நெல்லை, குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததுள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர் தண்ணீரில் சாய்ந்துள்ளது.நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையின் பாசன பகுதியான அம்பை, சேரன்மகாதேவி உள்ளிட்ட பகுதிகளில்,18 ஆயிரம் ஏக்கரில், நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில், அறுவடை செய்ய உள்ள நிலையில், தற்போது பெய்து வரும் திடீர் மழையால், வீரவநல்லூர், கல்லிடை குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஏக்கரில் நெற்பயிர் நீரில் சாய்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர்.இந்த மழையால், பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலத்திலும் தொடர் மழை பெய்ததால், அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது. கன்னியாகுமரி: இம்மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. பேச்சிப்பாறை அணையில் ஒரே நாளில் நீர் மட்டம் ஒரு அடி உயர்ந்தது. நேற்று மதியம் பெய்த மழையால், ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
ஒரத்துப்பாளையம் அணைக்கு 12 அடி நீர் வரத்து: கோவை, திருப்பூர் மாவட்ட பகுதிகளில் பெய்த கனமழையால், நொய்யல் ஆற்றில் பெரும் வெள்ள பெருக்கு ஏற்பட்டு, ஒரத்துப்பாளையம் அணைக்கு, ஒரே நாளில், 12 அடி நீர் வந்தது.தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில், பலத்த காற்றுடன், மழை பெய்து வருகிறது. சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட நொய்யல் ஆற்றின் குறுக்கே, சென்னிமலை அருகே கட்டப்பட்டுள்ள ஒரத்துப்பாளையம் அணைக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு ஒரே நாளில், 12 அடி நீர் வந்தது.நேற்று முன்தினம் காலை, அணைக்கு வரும் நீரின் அளவு, 2,000 கனஅடியாக இருந்து, மதியம், 800 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து நீர் வெளியேற்றம், 500 கனஅடியாக துவங்கி, தற்போது அணையில், அடி மதகு திறந்து, முழு அளவில் நீர் வெளியேற்றப்படுகிறது.நொய்யல் ஆற்று படுகையில் வெள்ளியங்கிரி மழைசாரல், கோவை, திருப்பூர் மாவட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், நொய்யல் ஆற்றில் கரைபுரண்டு வெள்ள நீர் ஓடுகிறது. திருப்பூர் பகுதியில் வெளியேறும் சாயக்கழிவு நீர், முழுமையாக ஒரத்துப்பாளையம் அணைக்கு வந்து சேர்கிறது.அதிகமாக சாயக்கழிவு நீர் கலந்து வருவதால், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, நான்கு மதகுகள் வழியாக, அப்படியே நீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு மழை, வெள்ள நீர், 12 அடி தேங்கும் நிலைக்கு வந்தும், விவசாயத்துக்கு பயன்படாததால், விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.நொய்யல் ஆற்றுப்படுகையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக சாய நீர் மட்டும் சென்ற நொய்யல் ஆறு, துர்நாற்றம் வீசிக் கொண்டு இருந்தது. தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கால், தற்போது ஆறு சுத்தமாகி வருகிறது.
சாரல் மழையால் இதம் :குன்னூரில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று பனி மூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. தென்மேற்கு பருவ மழை மற்றும் வடகிழக்கு பருவ மழை பொய்த்த காரணத்தினால், குன்னூர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதகிளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. மேலும், அவப்போது பனி பொழிவு ஏற்பட்டு வருவதால் தாவரங்கள் காய்ந்துள்ளன.இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, குன்னூர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் நேற்று காலை முதல் சாரல் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தள்ளனர்.மேலும், காலை முதல் பனி மூட்டமான காலநிலையும் நிலவுகிறது. இதன் காரணமாக வானங்கள் பகல் நேரத்திலேயே முகப்பு விளக்குகளுடன் செல்கின்றன.
கனமழை: பொள்ளாச்சி, உடுமலை விவசாயிகள் மகிழ்ச்சி:நேற்று முன்தினம் இரவில் வெளுத்து வாங்கிய மழையால் பொள்ளாச்சி நகரில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளித்தது.நேற்று முன்தினம் இரவு 11.00 மணிக்கு துவங்கிய மழை நேற்று அதிகாலை வரை தொடர்ந்து பெய்தது. இடிமின்னலுடன் பெய்த கனமழையை இருகரம் கூப்பி விவசாயிகளும், மக்களும் வரவேற்றனர். தண்ணீரின்றி காய்ந்து சறுகாக மாறிய விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. தண்ணீருக்காக ஏங்கியும் வாடியும் நின்ற பயிர்கள் நன்கு துளிர் விட்டு கம்பீரமாக காட்சியளித்தது.பொள்ளாச்சி நகரில் காணப்படும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி குட்டையை போன்று காட்சியளித்தது. மரப்பேட்டையிலிருந்து பத்ரகாளியம்மன் கோவில் வீதிக்கு செல்லும் பார்க்ரோடு பகுதியிலுள்ள தென்னை மரங்களை சுற்றிலும் குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது.பாலக்காடு ரோட்டிலுள்ள நல்லூர், காந்திநகர் பகுதியிலுள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் தேக்கமடைந்திருந்தது. அதேபோல் கோட்டூர் ரோடு அருகே உள்ள நந்தனார் காலனி, ஓம்சக்தி நகரிலுள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.வறட்சியால் வாடிக்கொண்டே இருந்த நிலையில், தற்போது நீண்ட இடைவெளிக்குப்பின் மழைநீர் பொள்ளாச்சியிலுள்ள தாழ்வான பகுதிகளில் தேங்கிநின்றது மக்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, மக்கள் மனதில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
வீடுகளுக்குள் மழை நீர்:உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், பருவமழை பொய்த்ததால், விளை பயிர்கள் போதிய நீர் இன்றி காய்ந்தன. கடும் வறட்சி காரணமாக அணைகளின் நீர்மட்டமும் குறைந்து, பாசனத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டது.மானாவாரி பயிர்கள் சாகுபடியும் பாதிக்கப்பட்டன. இதனால், பொதுமக்களும், விவசாயிகளும் அவதிப்பட்டு வந்தனர்.இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை 5:30 மணி முதலே மேக மூட்டங்கள் சூழ்ந்து, குளுமையான காற்று வீசியது; பின் சிறிது நேரத்தில் தூரல் மழை பொழிந்தது. இரவு 8:30 மணிக்கு பலத்த காற்றுடன் மழை இடைவிடாமல் பெய்து கொண்டிருந்தது. சில மணி நேரம் இடைவெளிக்கு பின், மீண்டும் காலை 4:00 மணி முதல் துவங்கி 5:30 மணி வரை பெய்தது. உடுமலை நகராட்சி பழைய பஸ் ஸ்டாண்ட் மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள ரோட்டில், மழை நீர் வெள்ளப்பெருக்காக ஓடியது. இதனால், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல மாதங்களுக்கு பின்பு, மழை பொழிய துவங்கியதை கண்ட பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.உடுமலை அருகே வரதராஜபுரம் பகுதியில், பெரிய மரம் ஒன்று சாய்ந்து ரோட்டில் விழுந்தது. உடுமலை நகராட்சிக்குட்பட்ட நாராயணன் காலனி, நெடுஞ்செழியன் காலனி பகுதியிலுள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதில், இரண்டு ஓட்டு வீடுகள் முன்பகுதி விழுந்தது; சில வீடுகளுக்குள் இருந்த பொருட்களும் மழை நீரில் நனைந்தது. ஒரு வீட்டில் யாரும் இல்லை; மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை.
வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு:உடுமலை அருகே வரதராஜபுரத்திற்கு நேற்று முன்தினம் இரவு சென்ற வருவாய் கோட்டாட்சியர் லதா மற்றும் தாசில்தார் சைபூதீன் சாய்ந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். தொடர்ந்து, நேற்று காலை முதல் நாராயணன் காலனி, நெடுஞ்செழியன் காலனி, மாரியம்மன் நகர், சாதிக்நகர், தங்கம்மாள் ஓடை, ஜெய்சக்திநகர், யு.கே.பி., நகர் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில், மழையால் ஏதாவது சேதம் ஏற்பட்டுள்ளதா என வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் ஆய்வு மேற்கொண்டனர்.
நொய்யலில் பெருக்கெடுத்து ஓடியது வெள்ளம்:திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 12.00 மணி முதல் நேற்று அதிகாலை 3.00 மணி வரை, கனமழை பெய்தது. அதனால், நொய்யலில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.கரையோரத்தில் வசித்தவர்கள், விடியும் வரை, தூங்காமல் கண் விழித்திருந்தனர்.நேற்று முன்தினம் இரவு 7.00 மணிக்கு, திருப்பூர் பல்லடம் ரோட்டில் லேசான தூறலுடன் மழை துவங்கியது. 9.00 மணிக்கு அவிநாசி ரோடு, மங்கலம் ரோட்டில் துவங்கிய மழை, 11.00 மணிக்கு மேல் நகர் முழுவதும் பெய்யத் துவங்கியது. நள்ளிரவு 12.00 மணி முதல் அதிகாலை 3.00 மணி வரை, தொடர்ந்து மூன்று மணி நேரம் இடைவெளியின்றி கொட்டியது.ஈஸ்வரன் கோவில் வீதி, மங்கலம் ரோடு ஜம்மனைப்பள்ளம், பி.என்.ரோடு, லட்சுமி நகர், கொங்கு மெயின் ரோட்டில் சாக்கடை கழிவுநீருடன் கலந்து மழைநீர் வீதிகளில் ஆறாக ஓடியது. பிரிட்ஜ்வே காலனி, லட்சுமி நகர் எக்ஸ்டன்சன் பகுதியில் இருந்து வந்த மழைநீரால், யூனியன் மில் ரோடு ராஜவாய்க்காலில் கழிவுநீர் கரைபுரண்டு ஓடியது; ஸ்ரீசக்தி தியேட்டர் ரவுண்டானா, வளம் பாலம் - பார்க் ரோடு தடைபட்டது. திருச்சி, கரூர், தஞ்சாவூரில் இருந்து வந்த வெளிமாவட்ட பஸ்கள், மெதுவாக ஊர்ந்து சென்றன.திருப்பூரின் மேற்கு பகுதியில் இருந்து வந்த கழிவுநீர் கலந்த மழைநீரால், நொய்யலில் வெள்ளம் காலை 5.00 மணிக்கு திடீரென அதிகரித்தது. கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள், அவ்வழியாக சென்றவர்கள், அதிர்ச்சியுடன் வெள்ளத்தை வேடிக்கை பார்த்தனர்.மாநகராட்சி 44வது வார்டு சுகுமார் நகர் - ஊத்துக்குளி ரோடு இடைப்பட்ட பாலத்தில் மழை வெள்ளம் அதிக அளவில் சென்றதால், போக்குவரத்து தடைபட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆறு கி.மீ., சுற்றி, பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக ஊத்துக்குளி ரோடு, பிற பகுதிகளுக்குச் சென்றனர். மதியம் 12.00 மணிக்கு பின்னரும் மழைநீர் வற்றாமல் இருந்ததால், இச்சாலையில் போக்குவரத்து தடைபட்டது.
ஊத்துக்குளி ரோடு பாளையக்காட்டில் இருந்து கோல்டன் நகர் செல்லும் ரயில்வே பாலத்தின் கீழ் எட்டு அடி அளவுக்கு மழைநீர் தேங்கியது. அதில், 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கஞ்சம்பாளையத்தில் இருந்து வந்த மினி பஸ் சேற்றில் சிக்கியது. டிராக்டர் வரவழைக்கப்பட்டு, கயிறு கட்டி இழுத்து, மினி பஸ்சை பத்திரமாக மீட்டனர்.கடந்த 2011 நவம்பரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு ஆளாகியிருந்த சத்யா காலனி, பெரியதோட்டம், பூளவாரி சுகுமார் நகர் பகுதி மக்கள், வீட்டுக்குள் வெள்ளம் புகுந்து விடுமோ என்ற அச்சத்தில், காலை வரை தூங்காமல் விழித்திருந்தனர். நொய்யலில் திடீரென அதிகமான வெள்ளம், அணைக்காடு அருகே இரண்டு வீடுகளுக்குள் புகுந்ததால், அப்பகுதியில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேறினர்.காங்கயம் ரோடு - ஊத்துக்குளி ரோட்டை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி, ராக்கியாபாளையம் பிரிவை அடுத்த மணியகாரம்பாளையத்தில் நடந்து வருகிறது. வட மாநிலத்தவர்கள், கட்டுமான பணியாளர்கள் தற்காலிகமாக குடிசை அமைத்து தங்கியுள்ளனர். கம்பி, ஜல்லி, மணல், செங்கல் உள்ளிட்ட பொருட்களை கரையோரத்தில் வைத்திருந்தனர். திடீரென அதி காலையில் வந்த மழை வெள்ளம், கட்டுமான பொருட்களை அடித்துச் சென்றது.பூளவாரி சுகுமார் நகர் கிழக்கு பகுதி மயானத்துக்குள் வெள்ளம் புகுந்தது. மழைநீரில், ஒன்றுக்கு மேற்பட்ட பிரேதங்கள் மிதந்து வருகின்றன என்ற தகவல் பரவியது. அதனால், நல்லூர், கூலிபாளையம், மாணிக்காபுரம், சிட்கோ கரையோர பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. புரளி என தெரிந்ததும், அமைதி ஏற்பட்டது.
தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:"தமிழகத்தின் தென்மாவட்டங்களில், அடுத்த, 24 மணி நேரத்தில், இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.சில நாட்களுக்கு முன், தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, லட்சத்தீவு வரை நீடிக்கிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில், மழை பெய்தது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது. அதிகபட்சமாக, திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறில், 22 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.கடந்த, 24 மணி நேரத்தில், உடுமலைப்பேட்டையில், 12, தென்காசி, பெரியநாயக்கன்பாளையம், குளச்சல், பெரியகுளத்தில், தலா, 11, கோவை விமான நிலையம், 10, தொண்டியில், 9, அன்னூரில், 8, பேச்சிப்பாறை, அம்பாசமுத்திரத்தில், தலா, 7, மேட்டுப்பாளையம், கோவை, கோபிசெட்டிப்பாளையம், ஆர்.எஸ்.மங்களத்தில், தலா, 6, கேளம்பாக்கத்தில், 5, மதுராந்தகம், தாம்பரத்தில், தலா, 2 செ.மீ., மழை பெய்துள்ளது.இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ""அடுத்த, 24 மணி நேரத்தில், திண்டுக்கல், தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியில் கனமழை பெய்யக்கூடும். வடக்கு மாவட்டம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும், சென்னை நகரில் சில இடங்களிலும், மழை பெய்ய வாய்ப்பு உள்ளது,'' என்றார்.
-நமது நிருபர் குழு-
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பருவம் தப்பிய மழையினால் பலன் சொற்பம் தான்... தமிழ் நாட்டில் உள்ள நதிகளையாவது இணைக்க தமிழர்கள் அனைவரும் ஒத்துழைப்பார்களா, என்பதே சந்தேகம் தான்... ஆக தண்ணீரினால் ஒருபுறம் அழிவும், அதே தண்ணீருக்காக ஒருபுறம் மனிதன் அடித்து கொண்டு சாவ போவதும் வருங்காலத்தில் நமது சந்ததியினரிடையே நடக்கபோகும் அன்றாட நிகழ்வுகள்... இதற்க்கு காரணம் வேற்று கிரகவாசிகள் அல்ல...சாட்சாத் நாமே தான்....
தமிழ்நாட்டில் தண்ணின்னா டாஸ்மாக் தான்.. மழைன்னா சாக்கடை, சகதி, கொசு தான்.. முடியாத மழைநீர் வடிகால், சாக்கடை திட்டங்கள்.. தூறல் விழுந்தாலே முட்டி வரை சேறும், தண்ணீரும் நகரங்களில்.. தூர்வாரப்படாத ஆறு, ஏரி, குளம், வாய்க்கால்கள்.. முட்டி மோதி அழுதால் கூட சேராத மழைநீர் என் விவசாயியின் நிலம் தன்னில்.. பட்ஜெட் போட்டு தின்னாச்சி.. அப்படி என்ன அசுரப் பசி இந்த ஆளும்கட்சி வியாதிகளுக்கு ??
...இது போன்ற காலங்களில் மழை நீரை தேக்கிவைத்து பின்னர் உபயோகப்படுத்த ஏதாவது வழிவகை செய்துள்ளதா??? நமது அரசு... ஏரி குளங்களை எல்லாம் அழப்படுத்தலாம், அகலப்படுத்தலாம்... இதை செய்தால் மற்ற மாநிலதவர்களிடம் தண்ணீருக்காக பிச்சையெடுப்பது கொஞ்சம் குறையலாம்... நமது மாநிலத்தின் நிலத்தடி நீராவது கொஞ்சம் உயரும், அதற்கு ஏதாவது வழி பிறக்கட்டும்... தமிழகத்தில் மழை எப்போதும் பெய்யும், ஏனென்றால் தமிழக மக்கள் வந்தாரை (வேற்று மாநிலத்தவர்களை கூட...) வாழ வைப்பவர்கள்...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.