மதுரை: பரமக்குடியில், போலீஸ் விசாரணைக்குச் சென்ற பெண் மர்மமான முறையில் தற்கொலை செய்த வழக்கில், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., உட்பட 4 பேருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை, நிறுத்தி வைக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
பரமக்குடி அருகே காட்டு பரமக்குடியை சேர்ந்த மீன்வள அதிகாரி சாமிராஜ். மனைவி ஆசிரியை பிரேமா. இவர்களது வீட்டில் சோனை மனைவி கருப்பி,45, வேலை செய்துவந்தார். 2002 ல் நவ.,25 ல் வீட்டுவேலை முடித்து, கருப்பி சென்றார். சாமிராஜ் வீட்டில் 16 பவுன் நகை மாயமானது. பரமக்குடி டவுன் போலீசார் கருப்பியை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். 2002 டிச.,1 ல், போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் உள்ள டவரில், மர்மமாக கருப்பி தூக்கில் பிணமாக தொங்கினார். சி.பி.சி.ஐ.டி.,யினர் விசாரித்து, ராமநாதபுரம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். கருப்பியை தற்கொலைக்கு தூண்டியதாக அப்போதைய இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீதுவுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, 1 லட்சம் ரூபாய் அபராதம், அதை செலுத்தத்தவறினால் 2 ஆண்டுகள் தண்டனை, எஸ்.ஐ.,கதிரேசனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல், ஏட்டுகள் அர்ஜூனனுக்கு 6 மாதம், ரங்காச்சாரிக்கு 3 ஆண்டுகள் தண்டனை விதித்து ராமநாதபுரம் கோர்ட் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சாகுல்ஹமீது உட்பட 4 பேர், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு: கருப்பியை, போலீசாரின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கவில்லை என முக்கிய சாட்சி ஒருவர் தெரிவித்துள்ளார். அவரை, ஆசிரியரின் உறவினர் தாக்கியுள்ளார். நாங்கள் விசாரணை மட்டும் நடத்தினோம். இதை கீழ்கோர்ட் கருத்தில் கொள்ளவில்லை. கீழ் கோர்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும், என குறிப்பிட்டனர். நீதிபதி அருணாஜெகதீசன் முன், விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் சுபாஷ்பாபு ஆஜரானார். மனுதாரர்கள் மீதான தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார். சாகுல் ஹமீது டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்றார். தற்போது ஓய்வு பெற்று, மதுரை எல்லீஸ்நகரில் உள்ளார். எஸ்.ஐ.,கதிரேசன், ஏட்டு அர்ஜூனன் ஓய்வு பெற்றுவிட்டனர்.