உன்னவ் : ஜன் லோக்பால் விவகாரத்துடன் தனது போராட்டம் முடியவில்லை என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். உத்திர பிரதேச மாநிலம் உன்னவ் மாவட்டத்தில் அரசின் கல்லூரிகளுக்கிடையேயான கிஷன் மகாபஞ்சாயத் விழாவில் உரையாற்றிய ஹசாரே இவ்வாறு தெரிவித்துள்ளார். கூட்டத்தில் அவர் பேசியதாவது : ஜன் லோக்பால் விவகாரத்துடன் எனது போராட்டம் முடியவில்லை; விலக்கும் உரிமை மற்றும் திரும்ப பெறும் உரிமைக்கு பார்லிமென்ட் ஒப்புதல் அளிக்கும் வரை எனது போராட்டம் தொடரும்; 2014 லோக்சபா தேர்தலுக்கு முன் 6 கோடி மக்களுக்காவது விழிப்புணர்வை ஏற்படுத்துவேன்; எனது இந்த முயற்சிக்கு பின்னர் அடுத்த 20 ஆண்டுகளுக்கும் மேல் மக்களிடமும், நாட்டிலும் மாற்றம் வரும்; கறிப்பாக இளைஞர்கள் மத்தியில் நாட்டுக்காக தங்களை தியாகம் செய்யும் மனப்பான்மை வரும்; சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளில் நாட்டின் விவசாயிகளிடம் எவ்வித மாற்றமும் வரவில்லை; நடுத்தர வர்க்கத்தினரிடம் மட்டுமே மாற்றம் வந்துள்ளது; விவசாயிகளின் நிலை மாற வேண்டுமானால் கிராம பஞ்சாயத்துக்கள் கூடுதல் உரிமைகளையும், அதிகாரங்களையும் பெற வேண்டும். இவ்வாறு ஹசாரே தெரிவித்துள்ளார்.