சென்னை: போர்க்குற்றம் புரிந்து அனைத்து தமிழர்கள் மனதையும் புண்படுத்தி வரும் இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், இலங்கை நாட்டு வீரர்கள் தமிழகத்திற்கு வந்தால் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதால் இந்த ஆசிய தடகள போட்டியை நடந்த முடியாது என்றும் வேறு எங்காவது நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் முதல்வர் ஜெ., அதிரடி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் ஆசிய தடகள போட்டி நடத்தும் அமைப்பு மற்றும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும் எவ்வித பதிலும் இல்லை என்றும், மத்தய அரசு செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்து வருகிறது என்றும் ஜெ., கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஜெ., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பேரவையில் தீர்மானம் : எனது தலைமையிலான அரசு இருபதாவது ஆசிய தடகளப் போட்டிகளை சென்னையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்திடமுடிவு எடுத்திருந்தது. விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே சமயத்தில், இலங்கைவாழ் தமிழர்கள் சுயமரியாதையுடனும், சம உரிமையுடனும்,கவுரவத்துடனும் நடத்தப்பட வேண்டும் என்பதில் எனது தலைமையிலான அரசு எப்போதும் உறுதியாக உள்ளது.
நான் மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், இலங்கையில் உச்சக்கட்டப் போர் நடந்த போது, சர்வதேச போர் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, அப்பாவி இலங்கைத் தமிழர்கள் ஈவு இரக்கமற்ற முறையில் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு காரணமானவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும், தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கால்பந்து வீரர்களுக்கு எதிர்ப்பு : இது மட்டுமல்லாமல், இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாடு உட்பட இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி பாரதப் பிரதமருக்கு பல கடிதங்களை நான் எழுதியுள்ளேன். இலங்கை நாட்டைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் கால்பந்து விளையாட்டில் பயிற்சி பெற்று தங்களுடைய
திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில் நட்பு ரீதியிலான போட்டிகளில் கலந்து
கொள்ள கடந்த ஆண்டு தமிழகம் வந்தனர். அப்போது அவர்களுக்கு தமிழகம் வர அனுமதி
அளித்த மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தை நான் தெரிவித்ததோடு, இலங்கை
கால்பந்து வீரர்களுக்காக எந்தப் போட்டிகளும் தமிழகத்தில் நடத்தக் கூடாது
என்று நான்உத்தரவிட்டேன்.
"செவிடன் காதில் ஊதிய சங்கு" : இந்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசுகையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்தினேன். இருப்பினும், "செவிடன் காதில் ஊதிய சங்கு" போல் தமிழர்களின் கோரிக்கைகள் அனைத்தும் மத்திய அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இந்தச் சூழலில், பிரபாகரனின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக 12 வயது சிறுவன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் சுட்டுத் தள்ளிய கோரக்காட்சிகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இது மன்னிக்க முடியாத மாபெரும் போர்க் குற்றமாகும். இது என்னுடைய மனதை மிகவும் நெகிழ வைத்துள்ளது. இதே போன்று இன்னும் பல தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டுள்ளதற்கான ஆதாரங்களும் வெளி வந்துள்ளன. இவற்றை எல்லாம் பார்க்கும் போது, ஜெர்மனியில் ஹிட்லர் நிகழ்த்திய இனப் படுகொலையை விஞ்சும் அளவிற்கு இலங்கையில் இனப் படுகொலை நடைபெற்று இருப்பது தெரிய வருகிறது.
எவ்வித பதிலும், தகவலும் இல்லை: இந்நிலையில் இலங்கை அரசு இலங்கை வாழ் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு, வருகிற ஜூலை மாதம் சென்னையில் நடைபெறவிருக்கும் இருபதாவது
Advertisement
ஆசிய தடகளப் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்றால் அது தமிழர்களின்
உணர்வுகளை புண்படுத்துவதாக அமைந்துவிடும் என்பதால், இலங்கை வீரர்கள் 20-வது
ஆசியத் தடகளப் போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்றும், இதை இலங்கை அரசுக்கு உரியமுறையில் தெரிவிக்குமாறும் சிங்கப்பூரிலுள்ள ஆசிய தடகள கழகத்தின் பொதுச் செயலாளருக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளரால் கடிதம் வாயிலாக தெரிவிக்கப்பட்டது.
இதன் மேல், நடவடிக்கை குறித்து தமிழக அரசுக்கு தெரிவிக்குமாறும் அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதன் நகல்கள் மத்திய அரசின் வெளியுறவுத் துறை செயலாளர் மற்றும் விளையாட்டுத் துறை செயலாளருக்கும் அனுப்பப்பட்டன. இருப்பினும், இது நாள் வரை ஆசிய தடகளக் கழகத்திடமிருந்து எவ்வித பதிலும், தகவலும் தமிழக அரசிற்கு கிடைக்கப் பெறவில்லை. ஆசிய தடகளக் கழகத்திடமிருந்து எவ்வித சாதகமான பதிலும் வராத சூழ்நிலையில், இலங்கை நாடு பங்கேற்கும் ஆசிய தடகளப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவது என்பதை எனது தலைமையிலான அரசு ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது. தமிழர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு ஜெ., கூறியுள்ளார்.
ஜெ.,வின் இந்த அதிரடி நடவடிக்கை மத்திய அரசு மற்றும் சர்வதேச அளவில் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதனால் வரும் ஜூலை மாதம் தமிழகத்தில் ஆசிய தடகளப்போட்டி நடக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.