காஞ்சிபுரம்: மணல் திருடர்கள் மாட்டு வண்டிகளை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றதால், மணலுடன், வண்டிகளை போலீசார், காவல் நிலையத்திற்கு ஓட்டி சென்ற சம்பவம் காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
காஞ்சிபுரம் மாவட்டம், பாலாற்றில் லாரிகள் மூலம் மணல் திருட்டு அரங்கேறி வந்ததை, காவல் துறை,பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள், கூட்டு நடவடிக்கை மூலம் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்நிலையில், மாட்டு வண்டிகள் மூலம் ஆற்றில் மணல் எடுத்து வந்து, மறைவான பகுதிகளில் கொட்டி வைத்து, லாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மணலை ஏற்றி செல்லும், லாரி உரிமையாளர்கள் நள்ளிரவு மற்றும் அதிகாலையில் "காவலர்கள் கண்களில் சிக்காமல்' குறுக்கு வழிகளில் சென்று, விற்பனை செய்து "காசு' பார்த்து வருகின்றனர்.
டோக்கன் முறை: இதுபோன்ற திருட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பொதுப்பணித் துறை, காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பாலாற்றில், மணல் எடுக்க செல்லும் மாட்டு வண்டிகளுக்கு, ஒரு நடைக்கு, 46 ரூபாய்க்கான டோக்கனை வழங்கி வருகிறது. இதனால், அரசுக்கு வருமானம் கிடைத்து வந்தது. ஆனால், சில மாட்டு வண்டிக்காரர்கள் ஆற்றின் குறுக்கே நுழைந்து, அத்துமீறி மணலை ஏற்றி வருவது தொடர்கிறது.
தப்பி ஓட்டம்: காவலர்கள், பொதுப்பணித்துறையினர் நேற்று காலை 9:00 மணிக்கு செவிலிமேடு சுடுகாடு அருகே ரோந்து சென்றனர். காவலர்கள் மற்றும் அதிகாரிகள் வருவதை, கைப்பேசி மூலம் அறிந்து கொண்ட மாட்டு வண்டி உரிமையாளர்கள், தங்களது மாட்டு வண்டிகளை ஆற்றில் நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். ஆறு காவலர்கள், மணலுடன் மாட்டு வண்டிகளை செவிலிமேடு, தமிழ்நாடு வீட்டுவசதிவாரிய குடியிருப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக தாலுகா காவல் நிலையத்திற்கு ஓட்டி சென்றது,பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டி உரிமையாளர்கள் மீது, காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாகியுள்ள அவர்களை தேடி வருகின்றனர்.