ஜனாதிபதி உரையின் போது, தமிழகத்தைச் சேர்ந்த, அ.தி.மு.க., - தி.மு.க., - எம்.பி.,க்கள், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு எதிராக, ஆவேச குரல் எழுப்பியதால், இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடர், நேற்று துவங்கியது. லோக்சபா மற்றும் ராஜ்யசபா என, இரு சபைகளையும் சேர்ந்த எம்.பி.,க்கள், ஒன்றாக மைய மண்டபத்தில் அமர்ந்திருக்க, காலை, 11:00 மணி அளவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தன் உரையை ஆரம்பித்தார்.
அவர், உரையை படிக்க துவங்கியதும், தமிழகத்தை சேர்ந்த அ.தி.மு.க, மற்றும் தி.மு.க., - எம்.பி.,க்கள், திடீரென தங்களின் இருக்கைகளை விட்டு எழுந்து, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு எதிராக, கோஷங்கள் எழுப்பினர். "ராஜபக்ஷேயை, போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கை மீது, பொருளாதார தடை விதிக்க வேண்டும், ஐக்கிய நாடுகள் சபையில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டும்' என்றும் குரல் எழுப்பினர்.
தமிழக எம்.பி.,க்களின், இந்த திடீர் ஆவேசக் குரலால், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தன் உரையை தொடர முடியாமல், சில வினாடிகள் அமைதியாக இருந்தார். பின், சுதாரித்து, தன் உரையை இடைவிடாமல், வாசிக்கத் துவங்கினார். அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., - எம்.பி.,க்கள், இரண்டு நிமிடங்கள் வரை, கோஷமிட்டு விட்டு, பிறகு அமர்ந்தனர்.அதேநேரத்தில், சிதம்பரம் தொகுதி, எம்.பி.,யான திருமாவளவன் மட்டும், தன் கையில் பேனர் ஒன்றை பிடித்தபடி, தொடர்ச்சியாக கோஷமிட்டபடி இருந்தார்.
இவரைப் பார்த்து, தெலுங்கானா பகுதி காங்கிரஸ் எம்.பி.,க்கள் பலரும், திடீரென எழுந்து, "தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க வேண்டும்' என, கோஷங்கள் எழுப்பினர்.மூத்த அமைச்சர்கள் சிலர் வந்து, கோஷங்கள் எழுப்பியவர்களை, அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டனர். இருப்பினும், ஐந்து நிமிடங்கள் வரை, இந்த கோஷங்கள் நீடித்தன. இதனால், சபையில் பரபரப்பு நிலவியது.நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருவதாலும், அதில், இடதுசாரி கட்சியினர் பங்கேற்று இருப்ப தாலும், ஜனாதிபதி உரையை, நேற்று இடதுசாரி கட்சிகளின் எம்.பி.,க்கள், முற்றிலும் புறக்கணித்து விட்டனர். இவர்கள் மைய மண்டபத்திற்கு வராமல், பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-நமது டில்லி நிருபர்-