பெங்களூரு : சர்ச்சையில் சிக்கியுள்ள, "கிங்பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையாவுக்கு, புது சிக்கல் எழுந்துள்ளது. ஊழியர்களிடம், வருமான வரியாக பிடித்தம் செய்த தொகையை அரசுக்கு செலுத்தவில்லை என, தொடரப் பட்ட வழக்கில், பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான சேவை, கடந்தாண்டு செப்டம்பரில் நிறுத்தப்பட்டது. இதில், பணியாற்றும் விமானிகள், இன்ஜினியர்கள் உட்பட, ஊழியர்கள், தங்களின் சம்பள பாக்கியை வழங்க கோரி போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து, கிங்பிஷர் நிறுவனம் நெருக்கடியில்
சிக்கிய தகவல் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியது. தொடர்ந்து பல மாதங்களாக விமான சேவையை, நடத்தாததால், இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், மற்றொரு சிக்கலில், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் சிக்கியுள்ளது. கடந்த, 2009 -10ம் நிதியாண்டில், இந்நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களிடம், பிடித்தம் செய்யப்பட்ட, 74.94 கோடி ரூபாயை அரசுக்கு செலுத்தவில்லை. இந்த தொகையை, 23.70 கோடி ரூபாய் வட்டியுடன் சேர்த்து செலுத்துவதற்கு, வருமானவரித்துறை காலக்கெடு விதித்து இருந்தது. இதையும், இந்நிறுவனம் பொருட்படுத்தவில்லை. இதையடுத்து, வருமானவரித்துறை அதிகாரிகள், கடந்த,19ம் தேதி கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மீதும், அதன் தலைவர் விஜய் மல்லையா மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு, பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது வருமானவரித்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த புகாரில், "2008ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை, வருமான வரியாக பிடித்தம் செய்த, 401 கோடி ரூபாயை கிங்பிஷர் நிறுவனம் செலுத்தவில்லை' என, குறிப்பிட்டு இருந்தனர். இதை ஏற்றுக்கொண்ட, சிறப்பு கோர்ட், விஜய் மல்லையாவுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது. வருமான வரிச்சட்டத்தின் இரண்டு பிரிவுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்கில், அபராதத்துடன், குறைந்த பட்சம் மூன்று மாத கடுங்காவல் தண்டனையோ, அதிகபட்சம் ஏழு ஆண்டு தண்டனையோ வழங்க வாய்ப்பு உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.