நாட்டில் மின் உற்பத்தியை, மேலும் அதிகரிக்க, நிறைய திட்டங்களை, மத்திய அரசு தீட்டி வருகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள, இரண்டு அணு உலைகளும், இந்த ஆண்டிலேயே செயல்பட துவங்கி விடும்,'' என, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார்.
பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடர், நேற்று துவங்கியது. இதையொட்டி, இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:கடந்த சில மாதங்களாக, பொருளாதாரத்தில் நல்ல அறிகுறிகள் தென்படுகின்றன. பணவீக்கம், மிகவும் மந்த நிலையில் உள்ளதால், இந்த ஆண்டின் இறுதிக்குள், நாட்டின் வளர்ச்சி வீதம், சற்றே அதிகரிக்கும். அதற்கான வாய்ப்புகள், நிறைய தென்படுகின்றன.
பொருளாதாரத்தை பலப்படுத்த, மத்திய அரசு பல உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைகளால், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், இந்தியா மீது மிகப் பெரிய நம்பிக்கை உருவாகியுள்ளது.
25 கோடி டன் உணவு உற்பத்தி:சரக்கு போக்குவரத்தில், சேவை வரியை கொண்டு வருவது குறித்து, மாநில அரசுகளுடன் பேசி வருகிறது. விரைவில், இது தொடர்பாக, ஒரு உடன்பாடு எட்டப்படும். விவசாயத் துறை, மகிழ்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. ஏற்கனவே இருந்த, 2.4 சதவீத வளர்ச்சியானது, தற்போது, 3.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு, உணவு தானிய உற்பத்தி, 25 கோடி டன்னாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
உயர்கல்விக்கு சிறப்பு திட்டம்:கடந்த, 1ம் தேதி நிலவரப்படி, நாட்டின் உணவு தானிய கையிருப்பு, 66.2 கோடி டன். இதில், கோதுமை, 30.7 கோடி டன்னும்; அரிசி, 35.3 கோடி டன்னும் உள்ளன. உணவு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றுவதில், அரசு உறுதியுடன் உள்ளது.
உயர் கல்விக்காக, புதிய சிறப்பு திட்டம் ஒன்றை, மத்திய அரசு தயாரித்து வருகிறது. நிதி உதவியை, மாநில அரசுகளுக்கு அளித்து, உயர்கல்வியை விரிவாக்குதல், தரப்படுத்துதல் மற்றும் நவீனப்படுத்துதல் என்ற அம்சங்களில், மத்திய அரசு கவனம் செலுத்தும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தகுந்த வாறு, இந்த திட்டம் வரையறுக்கப்படும்.விமானப் போக்குவரத்து துறையை மேம்படுத்தும் வகையில், கேரளா ஆரன்முளாவில் புதிய விமான நிலையம் அமைக்கப்படுகிறது. தவிர, கண்ணூரிலும் விமானநிலையம் அமைக்கப்படும். நவி மும்பையில், மற்றொரு விமான நிலையம் கட்டப்படும். நெசவுத் தொழிலை மேம்படுத்த, குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டமும் நிறைவேற்றப்படும்.
கூடங்குளத்தில் மின் உற்பத்தி:நாட்டில் மின் உற்பத்தியை மேம்படுத்த, எல்லாவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இந்த ஆண்டு, 88 ஆயிரத்து, 537 மெகாவாட் வரை, மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள, இரண்டு அணு உலைகளும் இந்த ஆண்டிலேயே செயல்பட துவங்கி விடும். அதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
மேற்கு வங்கத்தில் உள்ள சாகரிலும், ஆந்திராவிலும், இரண்டு புதிய துறைமுகங்கள் துவங்க அரசு முடிவெடுத்துஉள்ளது. கணினி மென்பொருள் துறையில் மட்டும், கடந்த ஆண்டு, 5.6 லட்சம் கோடி ரூபாய் வரை வருமானம் கிடைத்துள்ளது. இத்துறையில், 28 லட்சம் பேருக்கு, வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
இடதுசாரி தீவிரவாதம், குறைந்து வருகிறது. காஷ்மீரிலும் வன்முறைகள் குறைந்துள்ளன. கடந்த, 2011ல், 611 இடதுசாரி தீவிரவாத சம்பவங்கள் நடந்தன. இது, 2012ல் 414 ஆக குறைந்துள்ளது. காஷ்மீரில், பாதுகாப்பு மேம்பட்டு வருகிறது. வடகிழக்கு மாநிலங்களிலும், பெரும் வன்முறைகள் குறைந்து, இயல்பு வாழ்க்கையும் அமைதியும் திரும்பி வருகிறது.
இலங்கையிலும் கவனம்:இலங்கையுடனான உறவு, தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. அங்கு, இடம்பெயர்ந்த மக்களை, மீண்டும் குடியேற்றம் செய்வது, புனர்வாழ்வு அளிப்பது போன்ற நடவடிக்கைகளை, இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இடம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கு அமைதியான, கவுரவமான, சம அந்தஸ்துடன் கூடிய வாழ்க்கையை, உறுதி செய்ய வேண்டும் என்பதில், இந்தியா உறுதியான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.இவ்வாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார்.
-நமது டில்லி நிருபர்-
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மொதல்ல கல்பாக்கம் அணுமின் நிலையத்திலிருந்து உற்பத்தி ஆகும் மொத்த மின்சாரத்தையும் தமிழ்நாட்டுக்கே கொடுங்க. அப்புறமா மத்த அணு உலைகளை ஆரம்பிக்கிற வேலைய பாக்கலாம். கூடங்குளம் அணு மின்நிலையம் ஆரம்பிகரதுக்குலேய கேரளாவுக்கு 259 MW கொழும்புக்கு 750 MW ஒப்பந்தம் போட்டாச்சு. ஆன தமிழ்நாட்டுக்கு எவ்வளவுன்னு சொல்லல. எங்க உயிரை பணயம் வச்சு அவங்க சந்தோசமா இருந்தா சரிதான்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.