புதுடில்லி:தொழிற் சங்கத்தினர் நடத்திய, வேலை நிறுத்தப் போராட்டத்தால், நாடு முழுவதும், இரண்டாவது நாளாக, நேற்றும் வங்கிப் பணிகள் முடங்கின. பெரு நகரங்களில், ஏ.டி.எம்.,களில் பணம் இல்லாததால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக, 26 ஆயிரம் கோடி ரூபாய், பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக, தொழில் கூட்டமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. போராட்டத்தை கண்டு கொள்ளாத மத்திய அரசு மீது, மக்களுக்கு அதிருப்தி உருவாகியுள்ளது.
"விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்; பொதுத் துறை நிறுவனங்களை, தனியார் மயமாக்க கூடாது' என்பது உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளைச் சேர்ந்த, 10 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள், நேற்று முன் தினமும், நேற்றும், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பணிகள், நேற்று முன் தினம் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இரண்டாவது நாளாக நேற்று அதே நிலை நீடித்தது. டில்லி, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில், பெரும்பாலான, ஏ.டி.எம்.,களில் பணம் இல்லை. இதனால், பணம் எடுக்கச் சென்ற பொதுமக்கள், ஏமாற்றத்துடன் திரும்பினர்.கேரளாவில், பெரும்பாலான கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. வாகனங்கள் இயங்கவில்லை; பள்ளி, கல்லூரிகள் செயல்படவில்லை.
மேற்கு வங்கத்தில், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்றாலும், ஒரு சில இடங்களில், வாகனங்கள் மீது, கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. தலைநகர் டில்லியில், ஆட்டோ, டாக்சிக்கள், குறைவாகவே இயங்கின.இதனால், பொதுமக்களின் அன்றாட போக்குவரத்து, கடும் பாதிப்புக்கு ஆளானது. திறந்திருந்த சில கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மீது, மர்ம நபர்கள் சிலர், கல்வீசியதால், பதற்றம் ஏற்பட்டது.மும்பையில், ரயில், பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டன. வேலைநிறுத்தத்தால், அங்கு பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை. தமிழகம், கர்நாடகா, ஆந்திர போன்ற மாநிலங்களில், வங்கி, தபால் துறை பணிகள் பாதிக்கப்பட்டன. வாகனங்கள், வழக்கம் போல் இயங்கின. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வழக்கம் போல் செயல்பட்டன.
இழப்பு:போராட்டம் குறித்து, இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் "அசொசெம்' ஆகிய அமைப்புகள் கூறியுள்ளதாவது: வங்கிப் பணிகள் முடக்கம், உற்பத்தி மற்றும் போக்குவரத்து பாதிப்பு போன்ற பிரச்னைகளால், கடந்த இரண்டு நாட்களாக, நாட்டுக்கு, 26 ஆயிரம் கோடி ரூபாய், பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், இந்த இழப்பு, நாட்டின் பொருளாதாரத்தில், மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.இவ்வாறு, அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.
பலிக்கு இழப்பீடு: அரியானா மாநிலத்தில் நேற்று முன் தினம், பொதுவேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் இயக்கப்பட்ட பஸ்சை, தொழிற்சங்கத் தலைவர் நரேந்திர சிங், 55, என்பவர் தடுக்க முயன்றார். எதிர்பாராதவிதமாக, அவர் மீது பஸ் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில், "நரேந்திர சிங் குடும்பத்திற்கு, 10 லட்ச ரூபாய், இழப்பீடாக அளிக்கப்படும். அவரது மருமகளுக்கு, தகுதிக்கேற்ற வேலை வழங்கப்படும்' என, அரியானா முதல்வர், பூபிந்தர் சிங் ஹூடா, நேற்று அறிவித்தார்.
எட்டு லட்சம் காசோலைகள் தேக்கம்:வேலை நிறுத்தம் காரணமாக, நாடு முழுவதும், வங்கிப் பணிகள் இரு நாட்கள் முடங்கியதால், தமிழகத்தில் மட்டும், நாளொன்றுக்கு, நான்கு லட்சம் காசோலைகள் தேக்கமடைந்துள்ளன. இரு நாட்களில், குறைந்தபட்சம், 6,000 கோடி ரூபாய் மதிப்புள்ள, எட்டு லட்சம் காசோலைகள் தேங்கியுள்ளன. இவற்றுக்கு தீர்வு ஏற்படுத்த, குறைந்தது இரு நாட்களாகும் என, வங்கி வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த வாரத்தில், வெள்ளி, சனி இரு நாட்களே உள்ளன. சனிக்கிழமை, வங்கி அரை நாள் மட்டுமே செயல்படும். அதனால், தேக்கமடைந்த காசோலைகளை, அடுத்த வாரத் துவக்கத்தில் தான், தீர்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
திருக்குறளார் ஐயா கூறுவார் மனிதன் காட்டில் வாழலாம் ஏனென்றால் அங்கு வாழும் மிருகங்கள் இப்படிதான் இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும் ஆகவே அதன் குணம் தெரிந்து அதனுடன் வாழலாம் அனால் நாட்டில் வாழ்வதுதான் கடினம் ஏனென்றால் இங்கு எந்தந்த மனிதன் எந்தந்த நேரத்தில் எப்படியெல்லாம் இருப்பான் வாழ்வான் என்று கூற முடியாது என்பார்? அதுபோல் இங்கு இயற்க்கை பொய்த்தால் ஆள்பவர்களுக்கு லாபம், இயற்க்கை சீரழிவு என்றால் கொள்ளை லாபம். உதாரணத்திற்கு மழையை எடுத்துக்கொண்டால்,மிக அதிக அளவில் கொட்டினால் நிவாரணம் , நிவாரப்பணி, ... பொய்த்தால் நிவாரணம் நிவாரணப் பணி இது போன்ற சேவைகளை ஆதரவே நேரம் போதவில்லை அப்படி இருக்க வந்தே மாதரம்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.