சேலம்: தமிழகத்தில், பாலியல் வழக்கில் கைது செய்யப்படுவோரை, கடுங்குற்றவாளிகளாக கருதி, அவர்களை மத்திய சிறையில் அடைக்க, போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
டில்லி மாணவி ஒருவர், பாலியல் துன்புறுத்தலில் உயிரிழந்ததை அடுத்து, நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசும், கடுமையான சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசித்து வருகிறது. சில மாநில அரசுகள், தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் போல், தனியாக மகளிர் போலீஸ் ஸ்டேஷனை ஏற்படுத்தி வருகின்றன.
பெண்களுக்கு எதிராக குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது, இந்திய தண்டனைச் சட்டப்படி, வரதட்சணை கொடுமை, பாலியல் பலாத்கார முயற்சி, கற்பழிப்பு மற்றும் கொலை, கடத்தல், வன்முறை, மனம் மற்றும் உடல் ரீதியாக துன்புறுத்துதல், 21 வயதுக்குட்பட்ட பெண்ணை விலைக்கு வாங்குதல் அல்லது விற்றல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குபதிந்து போலீஸார் நடவடிக்கை எடுக்கின்றனர்.
மேலும், சிறப்பு சட்டப்பிரிவின்படி, சதி பாதுகாப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம், பாலியல் தொந்தரவு தடுப்புச் சட்டம், நெறிகெட்ட செயல்களில் பெண்களை ஈடுபடுத்துதல், பெண்கள் பாதுகாப்புச் சட்டம் ஆகிய பிரிவின் கீழும் வழக்குகள் பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இதில், சிறிய குற்றங்களாக கருதப்படும், அடிதடி, வாய்த்தகராறு, பலாத்கார முயற்சி, மனம் மற்றும் உடல் ரீதியாக துன்புறுத்துதல், வரதட்சணை கொடுமை, ஆகியவற்றில் ஈடுபடுவோரை கைது செய்யும் போலீஸார், அவர்கள் எல்லைக்குட்பட்ட, கிளைச்சிறைகளில் அடைப்பர். கடுங்குற்றங்களாக கருதப்படும் கொலை, கற்பழிப்பு, கடத்தல் ஆகிய வழக்குகளில் கைது செய்யப்படுவோர், மத்திய சிறையில் அடைக்கப்படுவர்.
இந்நிலையில், பெண்களுக்கு எதிரான பாலியல் புகாரில் கைது செய்யப்படுவோரை, கடுங்குற்றங்களில் ஈடுபட்டவராக கருதி, மத்திய சிறையில் அடைக்க போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறியதாவது:பாலியல் தொடர்பான புகார்களை பதிவு செய்யும் போது, சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதால், மிக கவனமாக செயல்பட வேண்டியுள்ளது. பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்டவரின் பெயர், முகவரி, புகைப்படம் ஆகியவற்றை வெளியிட தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், கடந்த காலங்களில் பாலியல் தொடர்பான சாதாரண புகார்களில் கைது செய்யப்படுவோர், சிறு குற்றம் புரிந்தவராக கருதி, கிளைச் சிறைகளில் அடைக்கப்படுவர். ஆனால், தற்போது பலாத்கார முயற்சி, மனம் மற்றும் உடல் ரீதியாக துன்புறுத்துதல், வன்முறை, வரதட்சணை கொடுமை ஆகிய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்படுவோரை, கடுங் குற்றம் புரிந்தவராக கருதி, மத்திய சிறையில் அடைக்க உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சிறப்பான உத்தரவு . இன்னொன்றும் செய்ய வேண்டும் .குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகு குற்றவாளிக்கு எவ்விதமான தண்டனைகள் சட்டத்தின்படி தரப்படுமோ, அதே தண்டனைகள் அல்லது அதே அளவிலான தண்டனைகள், பொய்க்குற்றம் சாட்டியவருக்கும், அவர் பொய்க்குற்றம் சாட்டியது சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபிக்கப்பட்டால் , வழங்கப் பட வேண்டும் . அதே சமயம், பொய்க்குற்றம் சாட்டுவதற்கும், காவல் துறையின் அலட்சியம் போன்ற சில காரணங்களால் குற்றத்தை நிரூபிக்கமுடியாமல் போவதற்கும் இடையில் உள்ள வித்தியாசம் தெளிவாகச் சட்டத்தில் வரையறுக்கப் பட வேண்டும். வரதட்சணை தடுப்புச் சட்டம் போன்ற சில சட்டங்கள் சில பெண்களால் தவறாகப் பயன்படுத்தப்படுவது போல் இதுவும் தவறாகப் பயன்படுத்தப்படும் நிலைமை ஏற்படாமல் இருக்க இது வழி வகுக்கும் .

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.