சென்னை: "சாலையை ஆக்கிரமித்து, குடிசை அமைத்து வசிக்கும், 350 குடும்பங்களுக்கு, வரும் ஜூன் மாதத்திற்குள் மாற்று இடம் ஒதுக்கப்படும்' என, சென்னை ஐகோர்ட்டில், குடிசை மாற்று வாரியம் உறுதி அளித்துள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமி, பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மனுவில், சென்னை மாநகரில், மறுவாழ்வு மறுக்கப்பட்ட பலர், சாலைகளை ஆக்கிரமித்து, குடிசை அமைத்து வாழ்கின்றனர். இவர்களை பாதுகாக்க, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று, தமிழக அரசின் நகராட்சி நிர்வாக செயலர், குடிசை மாற்று வாரிய தலைவர் ஆகியோருக்கு, கடந்தாண்டு செப்டம்பரில் கடிதம் எழுதி இருந்தேன். அந்த கடிதத்தின் மீது, இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. கடிதத்தின் படி, உரிய நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். மனுவை, தற்காலிக தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி பால்வசந்தகுமார் ஆகியோர் விசாரித்தனர்.
அவர்கள் அளித்த தீர்ப்பு விவரம்: இந்த வழக்கில், குடிசை மாற்று வாரியம் பதில் மனு தாக்கல் செய்தது. மாநகரில், குடிசைகளில் வாழ்பவர்களை, சென்னை மாநகராட்சி அடையாளம் காட்டினால், அவர்களுக்கு மாற்று இடம் அளிப்போம் என்று கூறப்பட்டு இருந்தது. சென்னை மாநகராட்சி தரப்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராஜா அண்ணாமலை மன்றம் அருகில், முத்துசாமி சாலையில், 259 குடும்பங்களும், தங்கை முருகப்பா தெருவில், 87 குடும்பங்களும், சாலையை ஆக்கிரமித்து வசிக்கின்றனர். இவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமித்து வசிக்கும் குடும்பங்களை பட்டியலிட்டு, அவர்களுக்கு மாற்று இடம் வழங்க, அந்த பட்டியலை குடிசை மாற்று வாரியத்துக்கு அனுப்பி உள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த, குடிசை மாற்று வாரிய தரப்பு வழக்கறிஞர், வரும் ஜூன் மாதத்திற்குள், அவர்களுக்கு மாற்று இடம் தரப்படும் என்று உறுதியளித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், மனுதாரின் கோரிக்கை நிறைவேற்றப்படுவதால், மனு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.