முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே கீழச்சாக்குளத்தில் கட்டுமான பணிகளுக்காக, காவிரி குடிநீர் திருடப்படுவதால், மக்கள் குடிநீருக்காக இரண்டு கி.மீ., தூரம் பயணிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.கீழச்சாக்குளத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு சப்ளை செய்வதற்காக காவிரி குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. தொட்டிக்கு செல்லும் குழாய் துண்டிக்கபட்டு, கட்டுமான பணிகளுக்காக, தண்ணீர் திருடப்படுகிறது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, இப்பகுதி மக்கள், 2 கி.மீ., தூரமுள்ள சிக்கல் விலக்கு ரோட்டில், "ஏர்வால்வு' குழாயில் கசியும் குடிநீரை பயன்படுத்தும் பரிதாபத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்பகுதியை சேர்ந்த வழிவிட்டான் கூறுகையில், ""குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடத்தில் முறையிட்டும் பலனில்லை,'' என்றார்.காவிரி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ரவீந்திரன் கூறுகையில், ""தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.