புதுக்கோட்டை: நகராட்சி பகுதியில் நடந்து வரும் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்து, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவருமாறு, அதிகாரிகளுக்கு தமிழக சட்டசபை மதிப்பீட்டுக்குழு உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரியம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகளின் சார்பில் நடந்து வரும் திட்டப்பணிகளை, எம்.எல்.ஏ., நாராயணன் தலைமையிலான தமிழக சட்டசபை மதிப்பீட்டுக் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். முதலில் புதுக்கோட்டை அரசு பி.எட்., கல்லூரிக்கு சென்ற இக்குழுவினர், வகுப்பறை மற்றும் ஆய்வக கட்டிடங்களை ஆய்வு செய்தபின், மாணவர்களிடம் ஏதேனும் குறைகள் இருக்கிறதா? என கேட்டறிந்தனர்.
தொடர்ந்து புதுக்கோட்டை நகராட்சியில் பகுதியில், 48 கோடி ரூபாய் மதிப்பிலான பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக, புல்பண்ணையில் நடந்து வரும், சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தனர். பணிகளை மார்ச், 31ம் தேதிக்குள் முழுமையாக முடித்து, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என, கலெக்டர், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு மதிப்பீட்டுக்குழு உத்தரவிட்டது.
புதுக்கோட்டை நகரின் குறிப்பிட்ட சில பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்படும், அம்மையாப்பட்டி குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்த குழுவினர், பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டனர். புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி, மற்றும் அருகிலுள்ள மாணவிகள் விடுதியை ஆய்வு செய்த குழுவினர், மாணவிகளிடம் வசதி, வாய்ப்புகளை கேட்டறிந்தபின், "வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்ற குறிக்கோளுடன், மாணவிகள் ஒவ்வொருவரும் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும்' என, அறிவுரை வழங்கினர். இதற்காக மதிப்பீட்டு குழுவினருக்கு மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை அரசு அண்ணா பண்ணையை ஆய்வு செய்த மதிப்பீட்டுக் குழுவினர், அங்கு வேளாண்மைத் துறையின் சார்பில் புதிதாக துவங்கப்பட்டுள்ள, இரண்டு ஆண்டு டிப்ளமோ படிப்புக்கான விவசாய கல்லூரியை ஆய்வு செய்து, பாடத்திட்டங்களை கேட்டறிந்தனர். தொடர்ந்து வேளாண் மேலாண்மை பயிற்சி நிலையம், மண் ஆய்வுக்கூடம், நுண்ணுயிர் உர உற்பத்தி நிலையம், நுண்மோட்டக் கலவை உற்பத்தி மையம், அரசு விதைப் பண்ணை மற்றும் தோட்டக்கலை பண்ணை ஆகியவற்றை மதிப்பீட்டு குழுவினர் பார்வையிட்டனர்.
தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுத்துறைகளின் சார்பில் நடைபெற்றுவரும் பணிகள், அவற்றின் முன்னேற்றம் குறித்தும், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ள கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், நிராகரிக்கப்பட்ட மனுக்களுக்கான காரணங்கள் குறித்து, அரசுத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்த மதிப்பீட்டுக்குழுவினர், அரசு சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் திட்டப் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர மனிதாபிமானத்துடனும், சேவை மனப்பான்மையுடனும் பணியாற்றவேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டனர்.
சட்டசபை மதிப்பீட்டு குழுவில், எம்.எல்.ஏ.,க்கள் பாப்பாசுந்தரம், இந்திராகாந்தி, காமராஜ், தன்சிங் மற்றும் அரசு இணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். மதிப்பீட்டு குழுவினர் ஆய்வின்போது, புதுக்கோட்டை கலெக்டர் மனோகரன், ஆர்.டி.ஓ., முத்துமாரி, நகராட்சி கமிஷனர் முருகேசன், இன்ஜினியர் பாலசுப்பிரமணியன் உட்பட அதிகாரிகள் பலர் உடன் சென்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.