தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில், பள்ளி கல்வித்துறை, சுற்றுச்சூழல் துறை மற்றும் மாவட்ட சுற்றுலா துறை சார்பில், பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் மாவட்ட சுற்றுலா அலுவலர் தனசேகர் தலைமை வகித்தார். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ராம்மனோகர் முன்னிலை வகித்தார்.
பேரணியை தஞ்சை ஆர்.டி.ஓ., காளிதாஸ் துவக்கி வைத்தார். இதில், மாரியம்மன் கோவில் அரசு மகளிர் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி, அரசு ஆண்கள் பள்ளி முன் நிறைவடைந்தது. பேரணியில், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கும், மனிதர்கள் ஆரோக்கியத்துக்கும் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு தட்டிகளை மாணவ, மாணவியர் ஏந்தியும், வழிநெடுக பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களையும் வினியோகித்தனர்.
இதைத்தொடர்ந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், சுற்றுலா துறை சார்பில் கண்ணாடி நார் இழைகளால் உருவாக்கப்பட்ட, தலா, ஐந்து அலங்கார குப்பை தொட்டிகளை, புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மற்றும் பெரியகோவில் வளாகங்களில் வைக்க, ஆர்.டி.ஓ., காளிதாஸ் வழங்கினார். ஏற்பாட்டை சுற்றுலாத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.