பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு, மிகப் பெரிய அளவில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதால், அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க, கட்சி முழுவீச்சில் தயாராகி விட்டது என்பது உறுதியாகியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம், டில்லியில் நடைபெற்று வருகிறது. தல்கதோரா உள்ளரங்கு மைதானத்திற்குள் நடைபெறும், இக்கூட்டத்தில் பங்கேற்க, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று வந்திருந்தார். கூட்ட அரங்கிற்குள், அவர் நுழைந்த மறுகணமே, அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான நிர்வாகிகளும், எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர். "மோடிக்கு ஜே...' என்ற கோஷங்களும், காதை பிளந்தன. அரங்கிற்குள் வந்த நரேந்திர மோடி, அங்கிருந்த மேடைக்கு கீழ், முதல் வரிசையில் போய் அமர்ந்தார். பா.ஜ., ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் எல்லாம், அங்கு தான் அமர்ந்திருந்தனர். கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங், தன் உரையை ஆரம்பிக்கும் முன், நரேந்திர மோடியை வெகுவாக புகழ ஆரம்பித்தார். ""பாராட்டி புகழ்ந்தால் மட்டும் போதாது. அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய விரும்புகிறேன்,'' என்று கூறி, மோடியை மேடைக்கு வரும்படி அழைத்தார். உடன் மோடி எழுந்து, மேடைக்கு செல்ல ஆரம்பித்தவுடன், அரங்கமே கரகோஷத்தால் அதிர்ந்தது. மோடிக்கு, மிகப் பெரிய மாலையை அணிவித்த ராஜ்நாத் சிங், ""இவர் மூன்று முறை, குஜராத்தில் தொடர்ச்சியாக ஆட்சியைப் பிடித்து, "ஹாட்ரிக்' சாதனை புரிந்துள்ளார். அதைப் போல, எதிர்வரும் மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் டில்லி மாநிலங்களின், சட்டசபை தேர்தல்களிலும், பா.ஜ., மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வகையில், மற்றவர்களும் சிறப்பாக பணியாற்ற வேண்டும்,'' என்றார். மோடிக்கு அளிக்கப்பட்ட இந்த மிகப் பெரிய மரியாதை, அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க, பா.ஜ., முழு வீச்சில், தயாராகி விட்டது என்பதை தெளிவுபடுத்தியது.
நேற்றைய கூட்டத்தில், பா.ஜ., தலைவர், ராஜ்நாத் சிங் பேசியதாவது: லோக்சபாவுக்கு, அடுத்த ஆண்டு தான் என்றில்லை; அதற்கு முன்னதாகவே, தேர்தல் வரலாம். தேர்தலுக்கு முன், சில மாநிலங்களில், சட்டசபை தேர்தல்கள் நடைபெறவுள்ளன. பா.ஜ., ஆளும் மாநிலங்களில், நாம் மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியை பிடிக்கும் வகையில், பணியாற்ற வேண்டும். இந்துத்துவா கொள்கையை, தூக்கிப் பிடிப்பதில், தவறு ஒன்றும் இல்லை. இந்துத்துவா என்பது, வாழ்க்கை நெறிமுறை தானே தவிர, அது ஒன்றும் சமய கோட்பாடு அல்ல; இதை, சுப்ரீம் கோர்ட்டே, தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, இந்துத்துவா பற்றி பேசினாலே, மதவாதம் என, யாரும் மிரட்ட தேவையில்லை. அவ்வாறு மிரட்டினாலும், இங்கிருக்கும் யாரும் பயப்பட வேண்டாம். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல்கள், தற்போதைய மத்திய அரசில் நடைபெற்றுள்ளன. இந்த ஊழல்கள் நடைபெறவில்லை எனில், இந்த பணம் அனைத்தும், மக்களுக்கு போய்ச் சேர்ந்திருக்கும். ஹெலிகாப்டர் ஊழல் குறித்து, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, கண்துடைப்பு நாடகம். இதன் மூலம், விசாரணை ஒழுங்காக நடைபெறாது. இது காலத்தை கடத்தும் செயல். பயங்கரவாதத்திற்கு எதிராக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, எந்த ஒரு உருப்படியான மற்றும் உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. கடுமையான சட்டங்களையும் இயற்றவில்லை. அதற்காக, பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பதை, பா.ஜ., ஏற்காது. மாநில அரசுகளின் உரிமைகளை, பறிக்கும் வகையில் அமைந்த, அந்த நடவடிக்கை தேவையில்லை. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
- நமது டில்லி நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.