தமிழக டாஸ்மாக் கடைகள் மூலம் நடப்பு நிதியாண்டுக்கான விற்பனை இலக்கு, 25 ஆயிரம் கோடி எட்டப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நிதியாண்டு முடிய இன்னும், 28 நாட்களே உள்ள நிலையில், விற்பனையை அதிகரிக்க, அதிகாரிகள், டார்ச்சர் செய்து வருவதாக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழகத்தில், 2003 நவம்பரில் டாஸ்மாக் மூலம், அரசு சார்பில் மது விற்பனை துவக்கப்பட்டது. ஆண்டுக்கு ஆண்டு விற்பனையில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் விற்பனை துவங்கிய, 2003 நிதியாண்டில், 3,500 கோடியாக இருந்த விற்பனை, 2004ல், 4,800 கோடியாக உயர்ந்தது. டாஸ்மாக் துவக்கப்பட்ட காலம் முதல், 2010 வரை, ஆண்டுக்கு சராசரியாக, 1,500 கோடி ரூபாய் வரை, விற்பனை உயர்ந்து வந்த நிலையில், 2012ல் நிதியாண்டில், 5,000 கோடி ரூபாய் வரை, அதிகரிப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக நடப்பு நிதியாண்டின் விற்பனை இலக்கு, 25 ஆயிரம் கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், கடந்த காலங்களில் பருவமழையின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக விவசாயம் செழித்து காணப்பட்டது. மின்தடை இல்லாததால், சிறு தொழில்கள் சிறந்து விளங்கியது. இதனால், தொழில் நகரங்களான சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலத்தில் மது விற்பனை உயர்ந்தது. ஆனால், நடப்பாண்டு தமிழகத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டு காரணமாக சிறு தொழில்களில் முடக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த முடக்கத்தின் காரணமாக கடந்த தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் பண்டிகை தினங்களில் டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு பூர்த்தியாக வில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், தங்களை காத்துக் கொள்ளும் வகையில், டாஸ்மாக் கண்காணிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொண்டனர். அது மட்டுமின்றி டாஸ்மாக் ஊழியர்களை அழைத்து எழுதியும் வாங்கப்பட்டது. இதன் காரணமாக ஊழியர்கள் மத்தியில் பீதி ஏற்படவே, தற்போது அவர்கள் பார்களுக்கு தங்கு தடையின்றி சரக்குகளை வாரி வழங்கி வருகின்றனர். இதனால், பார்களில், 24 மணி நேரமும் சரக்கு விற்பனை கொடி கட்டி பறக்கிறது.
இந்நிலையில், நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் துவங்கி ஜன.,31 வரை, டாஸ்மாக் விற்பனை, 20 ஆயிரத்து, 750 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளதாகவும், விற்பனை இலக்கை பூர்த்தி செய்ய மேலும், 4,250 கோடி ரூபாய் விற்பனையை, இம்மாத இறுதிக்கும் எட்ட வேண்டிய நிலை டாஸ்மாக் நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மாத சராசரி விற்பனை என்பது, 1,800 கோடி ரூபாய்க்கு மட்டுமே நிகழ்ந்துள்ளது. அப்படி இருக்கையில், அதாவது பிப்ரவரி, மார்ச் மாதத்தில், 3,600 கோடி ரூபாய் முதல், 3,800 கோடி ரூபாய் வரை, விற்பனை செய்ய இயலும், என்பதால், நடப்பு நிதியாண்டுக்கு விற்பனைக்கு இலக்கு பூர்த்தியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், இம்மாத கடைசி வாரத்தில், விற்பனை இலக்கில், 500 கோடி ரூபாய் முதல், 750 கோடி ரூபாய் வரை, குறையும் பட்சத்தில், அந்த இலக்குக்கான சரக்கை டாஸ்மாக் ஊழியர்கள் மீது திணிக்க முடிவு செய்துள்ளதாக, தகவல் பரவி வருவது ஊழியர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நடப்பு நிதியாண்டுக்கான டாஸ்மாக் இலக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய் பூர்த்தியாகி விடும் என, நம்புகிறோம். இலக்கை பூர்த்தியாவதில் குறைந்த வேறுபாடு காணப்படின், அதை சரி செய்யும் வகையில் நடவடிக்கை மேற் கொள்ளப்படும். விற்பனையை அதிகரிக்கும் வகையில் மார்ச், 1 முதல், அனைத்து கடைகளுக்கும் தங்கு தடையின்றி பீர் மட்டுமின்றி பாஸ்ட் மூவிங் சரக்குகள் தேவைக்கு ஏற்ப வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
டாஸ்மாக் கடையின் வாசலில் நிற்பவர்கள், அந்த பக்கம் வரும் ஆண், பெண், குழந்தைகள் இவர்கள் வாயில் ஒரு பாட்டில் உத்தி காசு பிடுங்கலாம், எல்லாருக்கும் பாமாயில் பக்கெட் மாதிரி ரேஷன் கடையில் கட்டாய விற்பனை
செய்யலாம், பின்பு குடி குடியை கெடுக்கும் என்று மக்களிடம் பிரசாரம் செய்யலாம். விரும்பி தானாக குட்டையில்
விழுபவர்கள் சரி ஏன் புதியதாக உக்குவிப்பு செய்கிறிர்கள்? செயல் இழந்த மாநிலமாகும் நாள் தொலைவில் இல்லை அரசின் சமுக பொறுப்பு என்பது இது தானா? ஒரு பக்கம் டாஸ்மாக் வருமானம் மறுபக்கம் விலையில்லாத
பொருட்கள்
மது இலவசமாக கிடைப்பதில்லை. விலையும் அதிகம். ஆனால் வாங்கி குடிக்க காசு இருக்கிறது. ஆனால் காஸ் விலை ஒரு சிலிண்டெருக்கு 200 ரூபாய் ஏறினால் (To remove the burden of subsidy) அந்த ஆட்சியே கவிந்து விடும். தனது தலைவனின் சினிமா வெளியான அன்றே முதல் காட்சியை ரூபாய் 300 கொடுத்து ஆவது பார்த்து விடும் பொது ஜனம் , பால் விலை ரூபாய் 5 அதிகரித்தாலே பொங்கி எழுந்து விடுவார்கள். இது தான் நமது தேசத்தின் சாபக்கேடு. ஒரு குவார்டேருக்கும் கோழி பிரியாணிக்கும் ஓட்டை விற்ற நமக்கு , ரூபாய் 200 கோடி யை ஒரே செக்கில் லபக்கும் சாமர்த்திய அரசியல் வாதிகளை கேள்வி கேட்கவோ அல்லது இந்த மாதிரி மது சீரழிவை பற்றி பேசவோ என்ன தகுதி இருக்கிறது? தற்போது உள்ள நிலைமை, நடுத்தர குடும்பங்கள் கூட இந்த குடிப்பழக்கத்தை social drinking என கேரளா மாதிரி அங்கிகரித்த மாதிரிதான் தென் படுகிறது. பொது மக்களாய் பார்த்து திருந்தா விட்டால், யாரும் இதனை கட்டுப் படுத்த முடியாது

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.